குஸய்யின் சாதனைகள்
1) தாருந் நத்வாவின் தலைமை
குறைஷியர்கள் தங்களுக்கு நிகழும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கு தான் ஆலோசனை நடத்துவார்கள். மேலும், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு இதனைத் திருமண மண்டபமாக பயன்படுத்தினார்கள். இந்த தாருந் நத்வாவின் தலைவராக குஸய் விளங்கினார்.
2) கொடி
பிற சமுதாயத்துடன் போர் செய்வதாக இருந்தால் அதற்கான சிறிய அல்லது பெரியகொடி,குஸய் அல்லது அவரது பிள்ளைகளின் கரத்தில் கொடுக்கப்பட்டு தாருந் நத்வாவில் நடப்படும்.
3) வழிநடத்துதல்
மக்காவிலிருந்து வியாபாரம் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியில் செல்லும் பயணக் கூட்டங்களுக்கு குஸய் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருவர் தலைமை வகிப்பார்.
கஅபாவின் வாயிலைத் திறப்பது, மூடுவது, பராமரி ப்பது, வழிபாடுகள் நடத்துவது அனைத்தையும் குஸய் மேற்கொள்வார்.
5) ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்
தொட்டிகளில் நீரை நிரப்பி அதில் உலர்ந்த திராட்சை மற்றும் பேரீத்தம் பழங்களைப் போட்டு சுவையு+ட்டி அந்த மதுரமான நீரை மக்கா வருபவர்களுக்கு குஸய் குடிக்க வழங்குவார்.
6) ஹாஜிகளுக்கு விருந்தளித்தல்
குறைஷியர்களிடம் ஹஜ்ஜுடைய காலங்களில் வரி வசூலித்து அதன்மூலம் ஹாஜிகளுக்கு குஸய் விருந்தோம்பல் புரிவார். இவ்விருந்தில் வசதியற்ற ஹஜ் பயணிகள் கலந்துகொள்வார்கள். (இப்னு ஹிஷாம், யஃகூபி)
இவை அனைத்தும் குஸய்ம்க்கு அமைந்திருந்த சிறப்புகளாகும். அவரது பிள்ளைகளில் அப்துத்தார் என்பவர் மூத்தவராக இருந்தார். ஆனால், அவரை விட இளையவரான அப்து மனாஃப் மக்களிடையே மிகுந்த செல்வாக்கும் மரி யாதையும் உடையவராகத் திகழ்ந்தார்.இது அப்துத்தாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்துத்தாரை குஸய் அழைத்து 'மக்கள் உன்னைவிட உனது சகோதரனை எவ்வளவுதான் உயர்வாக்கினாலும் நான் உன்னையே அவர்களுக்குத் தலைவராக்குவேன்” என்று கூறி தன்னிடமுள்ள அனைத்து சிறப்புகளையும் பொறுப்புகளையும் அப்துத்தாருக்கே தரவேண்டுமென உயில் எழுதினார்.குஸய்யின் எந்த முடிவுக்கும் மக்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர் வாழும்போதும்,மரணத்துக்குப் பின்னும் அவரது கட்டளையைப் பின்பற்றுவதே மார்க்கம் என அனைவரும்கருதினர்.
அவரது மரணத்திற்குப் பின் அவரது பிள்ளைகள் தந்தை செய்த மரணநேர கட்டளைப்படி எவ்வித கருத்து வேறுபாடுமின்றி பொறுப்புகளை நிறைவேற்றினர். அப்து மனாஃபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் தங்களின் தந்தையின் சகோதரர் அப்துத் தாருடைய பிள்ளைகளுடன் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை பெறுவதில் சச்சரவு செய்தனர்.
இதனால் குறைஷியர்கள் இரண்டாகப் பிரிந்து சண்டைக்கு ஆயத்தமாயினர். எனினும்,போரைத் தவிர்த்து சமாதானம் செய்துகொள்ள அனைவரும் விரும்பி தங்களுக்குள் அந்த பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டனர். ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவது, அவர்களுக்கு விருந்தளிப்பது மற்றும் பயணம் செல்லும் குழுவினருக்கு தலைமை வகிப்பது என மூன்றுபொறுப்புகள் அப்து மனாஃபின் மக்களுக்குக் கிட்டின. தாருந் நத்வாவிற்கு தலைமை வகிப்பது, கொடி பிடிப்பது மற்றும் கஅபாவை பராமரி ப்பது ஆகிய பொறுப்புகள் .அப்துத்தாருடைய மக்களுக்குக் கிடைத்தன.
தாருந் நத்வாவின் தலைமைத்துவம் மட்டும் இரு பிரிவினருக்கும் பொதுவாக இருந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். பிறகு அப்து மனாஃபுடைய மக்கள் சீட்டு குலுக்கிப் போட்டு தங்களுக்குக் கிடைத்த பொறுப்புகளை தங்கள் குடும்பங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதன் அடிப்படையில் ஹாஜிகளுக்கு நீர் புகட்டுதல் மற்றும் அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப்புகள் ஹாஷிமுக்கு கிடைத்தன. வியாபாரக் குழுவினருக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அப்து ஷம்ஸுக்கு கிட்டியது. ஹாஷிம் தனது பொறுப்புகளை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக நிறைவேற்றினார். அவரது மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் பொறுப்பேற்றார். முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றார். இந்த அப்துல் முத்தலிப் தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார். அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் பொறுப்புகளை நிறைவேற்றினர். இறுதியில் மக்கா, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அப்பொறுப்புகள் கிட்டின. சிலர், குஸய்தான் தனது பிள்ளைகளுக்கிடையில் பொறுப்புகளை பங்கிட்டுக் கொடுத்தார்.
அந்த அடிப்படையிலேயே அப்பொறுப்புகளை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வந்தனர் என்று கூறுகின்றனர். உண்மை நிலையை அல்லாஹ்வே அறிந்தவன். (இப்னு ஹிஷாம்)
குறைஷிகள் தங்களிடையே பங்கிட்டுக் கொண்ட மேற்கூறப்பட்ட பொறுப்புகளுடன் வேறு சில பதவிகளையும் உருவாக்கி, அவற்றைத் தங்களுக்கிடையே பங்கிட்டு ஒரு சிறிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர். அது இன்றைய ஜனநாயக அரசு, தேர்தல்,பாராளுமன்றம் ஆகிய நடைமுறைகளுக்கு ஒத்திருந்தது. அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு:
1) நற்குறி, துற்குறி (சாஸ்த்திரங்கள், சகுனங்கள்) பார்ப்பதும், அனுமதி பெறுவதும், சிலைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அம்புகளைக் கொண்டு குறி சொல்லும் அதிகாரமும் ஜுமஹ் குடும்பத்தாருக்கு இருந்தன.
2) சிலைகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகளைப் பெற்று பாதுகாத்து பராமரி த்தல்; சண்டை, சச்சரவுகள் மிக்க வழக்குகளில் தீர்ப்பு சொல்வது ஆகிய இரு பொறுப்புகளும் ஸஹ்ம் குடும்பத்தாருக்கு இருந்தன.
3) அஸத் குடும்பத்தாருக்கு, ஆலோசனை கூறும் பொறுப்பு!
4) தைம் குடும்பத்தாருக்கு, அபராதம் மற்றும் தண்டப் பரிகாரம் வழங்கும் பொறுப்பு!
5) உமய்யா குடும்பத்தாருக்கு, சமுதாயக்கொடி ஏந்திச் செல்லும் பொறுப்பு!
6) மக்ஜூம் குடும்பத்தாருக்கு, ராணுவங்களையும் அதற்குத் தேவையான குதிரைகளையும்
நிர்வகிக்கும் பொறுப்பு!
7) அதீ குடும்பத்தாருக்கு, தூது கொண்டு செல்லும் பொறுப்பு! (இப்னு ஹிஷாம்)
உ) ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்
கஹ்தானியர், அத்னானியர் நாடு துறந்ததையும் அவர்கள் அரபு நாடுகளை தங்களுக்கிடையில் பிரித்துக் கொண்டதையும் முன்பு கண்டோம். இவர்களில் ஹீரா நாட்டுக்கு அருகிலிருந்தவர்கள் ஹீராவின் அரபிய மன்னருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.ஷாம் நாட்டில் வசித்தவர்கள் கஸ்ஸானிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.எனினும், கட்டுப்பாடு என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது. இவ்விரண்டைத் தவிர தீபகற்பத்தின் ஏனைய கிராமப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முழுச் சுதந்திரம் பெற்றவர்களாக எவருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்த இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கெனத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு கோத்திரமும் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது. குலவெறியும், தங்களது ஆதிக்கப் பகுதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் இவர்களது அரசியல் அடிப்படை நோக்கமாக இருந்தது.
அரசர்களுக்கு இணையாக கோத்திரத் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தது. சண்டையிடுவதிலும், சமாதானம் செய்து கொள்வதிலும் மக்கள் தங்களது தலைவர்களின் முடிவை எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்று வந்தனர். தலைவர்களின் உத்தரவும் அதிகாரமும் பேரரசர்களின் உத்தரவுக்கும் அதிகாரத்துக்கும் ஒத்திருந்தது. அவர் ஏதேனும் ஒரு சமுதாயத்தினர் மீது கோபம் கொண்டால் எவ்வித கேள்வியுமின்றி ஆயிரக்கணக்கான வாள்கள் அந்த சமுதாயத்தினருக்கு எதிராக உயர்த்தப்படும். எனினும், அவர்கள் தலைமைக்காக தங்களது தந்தையுடைய சகோதரர்களின் (தந்தையின் உடன்பிறந்தார்) பிள்ளைகளிடமே போட்டியிட்டுக் கொண்டனர். இதன் விளைவாக மக்களிடையே புகழ்பெறும் நோக்கில் செலவிடுதல், விருந்தினரை உபசரித்தல், தர்ம சிந்தனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுதல், எதிரிகளிடம் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துதல் போன்றவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தனர். அவ்வாறே அக்காலத்தில் சமூகங்களின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த கவிஞர்களிடம் புகழைப் பெற்று போட்டியாளர்களிடையே தங்களது மதிப்பை உயர்த்திக்கொள்ள பெரிதும் முயன்றனர்.
தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.
இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:
'எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது.
எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.” மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி. ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு
விருப்பமானதை எடுத்துக் கொள்வது.நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!