நபி, ரசூல் ஒன்றே!
குர்ஆனில் கூறப்பட்ட நபி என்று சொல்லப்பட்டவரும் ரசூல் என்று சொல்லப்பட்டவரும் வேவ்வாறானவர்கள் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் நபி என்பவர் இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்,
ரசூல் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூதர் என்பது இதன் பொருள். இஸ்லாமிய மார்க்கத்தில் தூதர் என்பவர் இறைவனிமிருந்து செய்தியை மக்களுக்கு கொண்டு வருபவர் என்று பொருள்.
இவ்விரு சொற்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்று சிலர் கருதுகின்றனர்.
ரசூல் என்பவர் வேதம் வழங்கப்பட்டவர். நபி என்பவர் அவ்வேதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்பவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறானதாகும். நபிக்கும் வேதம் வழங்கப்பட்டதாக பின்வரும் வசனம் கூறுகிறது.
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.
(அல்குர்ஆன் 2:213)
மேலும் 2:136, 3:79, 3:81, 19:30, 27:112..117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும்
வேதம் வழங்கப்பட்டதாக கூறுகிறது.
வேறு சிலர் நபி என்பவர் தனி மார்க்கம் கொண்டு வந்தவர் ரசூல் அந்த வழியில் நடைபோடுபவர் என்பர்.
இதுவும் தவறாகும். ரசூலுக்கும் தனிமார்க்கம் இருந்ததை பின் வரும் வசனம்
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
(அல்குர்ஆன் 9 : 33)
மேலும் இதே கருத்தை 10:47, 17:15, 48:28, 61:9 என்ற வசனங்களிருந்து அறியலாம்.
ரசூல்மார்கள் 313, நபிமார்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்றும் கூறுவர். இதுவும் ஆதாரமான செய்தி இல்லை. நபி, ரசூல் இரண்டும் இறைத்தூதர்களைக் குறிக்கும் இரு வார்த்தைகள். இரண்டும் ஒன்றே. நபிக்கும் ரசூலுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது