Mar 24, 2011

சமுதாயத்தில் நடைபெறும் மூட பழக்கவழக்கங்கள்

நமது சமுதாயத்தில் நடைபெறும் திருமணம், மரணம், புது வீடு புது வீடு மனை முகூர்த்தம், மற்றும் குடிபுகுதல், போன்ற நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.! மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களாலும் இது பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில் நாம் அவற்றை விட்டு எவ்வாறு தவிர்ந்துக் கொள்ள முடியும்? அந்த நிகழ்ச்சிகளை நாம் தவிர்த்தால் நம்மை அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களே! என்ற பலவிதமான சிந்தனைகள் சமூகத்தில் நிலவுகிறது.

திருமணத்தின் போது

1.பாக்கு, வெற்றிலை, தேங்காய், மஞ்சள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைக் ‎கண்ணியப்படுத்தி ஒவ்வொரு திருமண சடங்குகளிலும் அவற்றை முன்னிலைப்படுத்துவது.‎
2.மாற்று மதத்தவர்களின் பழக்கமான ‘தாலி கட்டுதல்’. திருமணத்தின் போது இந்த தாலியை மணமகன் ‎வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்ற போது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு ‎மாற்றமான எண்ணிலடங்கா சகுனங்களை பார்ப்பது.‎
3.மணமகன் முதன் முறையாக மணப்பெண் வீட்டிற்கு செல்லும் போது நடைபெறுகின்ற ‎அநாச்சாரங்கள். உதாரணங்கள் : ஆட்டுத்தலை, மஞ்சள் தண்ணீர், மிளகாய் போன்றவற்றை ‎வைத்து ஆரத்தி எடுத்தல்.‎

மரணத்தின் போது

1.சனிக்கிழமையன்று இறந்துவிட்டால் ‘சனி போனால் தனியாக போகாது’ என்று அந்த ‎ஜனாஸாவுடன் கோழி போன்றவற்றை அனுப்புவது.‎
2.நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய ஹல்கா, ராத்தீபு ‎போன்ற ஷிர்க் நிறைந்த செயல்களை செய்வது.‎
3.மாற்று மதத்தவர்கள் இறந்தவரின் 8, 16 ஆம் நாள் செய்கின்ற திவசங்களைப் போல் பித்அத்தான ‎‎3, 7, 40 ஆம் நாள் ஃபாத்திஹா ஓதுதல்.

புது வீடு கட்டும் போதும் குடிபுகும் போதும்

1.புது மனை முகூர்த்தம் என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களின் பூஜை புனஸ்காரங்களை தம் ‎வீட்டு மனையில் செய்வது
2.புதிய வீடு கட்டி முடித்தவுடன் வீட்டில் இருக்கும் துஷ்ட தேவைகளை, ஜின்களை ‎விரட்டுவதற்காக அவற்றுக்கு ஆடு, மாடு அல்லது கோழி போன்றவற்றை காவு கொடுத்து அதன் ‎இரத்தத்தை வீட்டில் தெளிப்பது.‎

இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் ‎அல்-குர்ஆன் மற்றும் ஆதாரமான ஹீஸ்களின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான ‎செயல்களாகையால் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ள முஃமின் இவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.‎


ஷிர்க் மற்றும் பித்அத் நிறைந்த இச்செயல்களைச் செய்யக் கூடியவர்கள்  நெருக்கமான உறவினர்களாக இருந்தாலும், பெற்றோர்கள், சகோதர ‎சகோதரிகளாக இருந்தாலும் அதில் நாம் பங்குபெறுவது என்பது நாமும் அத்தகைய மாபாதக ‎செயல்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர் போலாவோம். (அல்லாஹ் நம்மைக் ‎காப்பாற்றுவானாகவும்).‎


இதுதான் சத்தியம் என்று தெரிந்த பிறகும் உறவினர்கள் தவறாக ‎நினைத்துக் கொள்வார்களே என்று அவர்களுக்கு பயந்து நாம் அந்த மூடத்தனமான ‎செயல்களில் கலந்துக் கொண்டால் இறைவனின் கட்டளைகளை விட மக்களின் கவுரவத்திற்கு ‎முன்னுரிமை கொடுத்த குற்றம் சேரும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்