Mar 21, 2011

நூல்கள்-சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் - பி.ஜைனுல் ஆபிதீன்


திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர். 
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கவும் இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல். 
அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர். 
நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும். 
பி.ஜைனுல் ஆபிதீன்.... .

சரியான ஹதீஸ்களும்தவறான ஹதீஸ்களும் 
ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன?  லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். 

ஹதீஸ் கலை 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள் 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள் 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள் 
ஆகிய மூன்றையும் ஹதீஸ் என்பர். 
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர். 
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். 
  صحيح 
1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
 موضوع 
2.     மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 
 متروك
3.     மத்ரூக் விடப்பட்டவை
 ضعيف
 4.    
ளயீஃப் பலவீனமானவை
 
 
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். 
இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. 
இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம். 
1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. 
ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.  
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது, மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள். 
எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 
صحيح وضعيف سنن الترمذي - (ج 1 / ص 1)
 حدثنا قتيبة بن سعيد حدثنا أبو عوانة عن سماك بن حرب ح و حدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول
தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது.என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ். 
இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார். 
முஸ்அப் பின் ஸஃது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர். 
முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார். 
ஸிமாக்கிடம் வகீவு என்பாரும் அபூ அவானா என்பாரும் கேட்டனர்.
வகீவு என்பார் வழியாகவும் அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.
முதல் வழி 
1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     இஸ்ராயீல்
6.     வகீவு
7.     ஹன்னாத்
8.     திர்மிதீ
இரண்டாவது வழி 
1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     அபூ அவானா
6.     குதைபா
7.     திர்மிதீ
மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார். அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இப்படித் தான் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,.
இந்த ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். 
·         இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
·         அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
·         அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
·         அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது. 
ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. 
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 
ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை செய்யாதவற்றை அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும். 
·         திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.
·         புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
·         அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
·         இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.
மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது. 
இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. 
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம். 
முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன், எப்படி சமுதாயத்தில் நுழைந்தன? ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். 
1.     இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறி போய் வருமானம் தடைப்பட்டுப் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். 
இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். 
இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்தது. எனவே ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள். 
நம்ப முடியாத உளறல்களையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள். 
இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள். 
كشف الخفاء - (ج 2 / ص 412)
ومن الأحاديث المكذوبة على رسول الله صلى الله عليه وسلم حديث : من قال لا إله إلا الله خلق الله من كل كلمة طائرا له سبعون ألف لسان في كل لسان سبعون ألف لغة يستغفرون الله تعالى له . ومن فعل كذا وكذا أعطي من الجنة سبعين ألف مدينة في كل مدينة سبعون ألف قصر في كل قصر سبعون ألف حوراء
யாரேனும்  லாயிலாஹ இல்லல்லாஹ் என்று  கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம்  நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு  நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப்  பேசும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)
والباذنجان شفاء من كل داء
கத்தரிக்காய்  சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும்  மருந்தாகும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 2)
الباذنجان لما أكل له
எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும். 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 161)
حديث عليكم بالعدس فإنه مبارك فإنه يرق له القلب ويكثر الدمعة وفي لفظ قدس العدس على لسان سبعين نبيا
பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
لو كان الأرز رجلا لكان حليما ما أكله جائع إلا أشبعه
நெல், ஒரு  மனிதனாக இருந்தால் அது  மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக  இருந்திருக்கும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
أحضروا موائدكم البقل فإنه مطردة للشيطان
உங்கள்  உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது  ஷைத்தானை விரட்டியடிக்கும். 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 8)
أسخنت لرسول الله صلى الله عليه و سلم ماء فى الشمس فقال لا تفعلى يا حميراء فإنه يورث البرص
ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால்  சூடாக்கப்பட்ட தண்ணீரில்  குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை  ஏற்படுத்தும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
من لم يكن له مال يتصدق به فليلعن اليهود والنصارى
தர்மம்  செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்  சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
ثلاثة تزيد في البصر النظر إلى الخضرة والماء الجاري والوجه الحسن
பசுமையான  பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப்  பார்ப்பது, பார்க்கும் திறனை  அதிகரிக்கும்.
 

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
النظر إلى الوجه الجميل عبادة
அழகான முகத்தைப்  பார்ப்பது ஒரு வணக்கமாகும்.
 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
الزرقة في العين يمن
கண்கள்  நீல நிறமாக இருப்பது ஒரு  பாக்கியமாகும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
أكل السمك يوهن الجسد
மீன் சாப்பிடுவது  உடலைப் பலவீனப்படுத்தும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
من أخذ لقمة من مجرى الغائط والبول فغسلها ثم أكلها غفر له
சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
 إن الله خلق السموات والأرض يوم عاشوراء
ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமிகளையும் படைத்தான். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
عليكم بالملح فإنه شفاء من سبعين داء
உப்பை விட்டுவிடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது. 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
ما من رمان إلا ويلقح بحبة من رمان الجنة
எந்த ஒரு  மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின்  தண்ணீர் இருக்கும். 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 3)
المجرة التي في السماء من عرق الأفعى التي تحت العرش
ஆகாயத்தில்  உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது. 
نقد المنقول والمحك المميز بين المردود والمقبول - (ج 1 / ص 4)
شكى إلى النبي صلى الله عليه وسلم قلة الولد فأمره أن يأكل البيض والبصل
முட்டையும்  பூண்டும் சாப்பிட்டால் அதிகமான  சந்ததிகள் பெற முடியும். 
الفوائد الموضوعة في الأحاديث الموضوعة للكرمي - (ج 1 / ص 99)
شاوروهن وخالفوهن -يعني النساء
பெண்களிடம்  ஆலோசனை கேளுங்கள் ! ஆனால்  அதற்கு மாற்றமாக நடங்கள் ! 
المنار المنيف - (ج 1 / ص 108)
الدجاج غنم فقراء أمتي
கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.
 
المنار المنيف - (ج 1 / ص 109)
لو يربي أحدكم بعد الستين ومئة جرو كلب خير له من أن يربي ولدا
160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும். 
இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.
நடைமுறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.
கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.
பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. 
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.
ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர். 
நீல நிறக் கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
வானம், பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாள் ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது. 
இவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும். 
2.     ஆர்வக் கோளாறு
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர். 
மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள். 
இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள். 
நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 
أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 29)
أحاديث فضل سور القرآن مائة وأربعة عشر حديثا ذكرها الزمخشري والبيضاوي تبعا للواحدي كلها كذب على رسول الله واتهم المحدثون بوضعها نوح بن ابي مريم وقيل غيره والله أعلم
நூஹ் பின் அபீமர்யம் 114 அத்தியாயங்களின் சிறப்பைக் கூறும்  114 ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்.
اللآلي المصنوعة - (ج 1 / ص 208)
روى نوح بن أبي مريم الجامع في فضائل القرآن سورة سورة عن رجل عن عكرمة عن ابن عباس فقيل له من أين لك هذا قال لأن الناس قد اشتغلوا بمغازي ابن إسحاق وغيره فحرضتهم على قراءة القرآن
இவரிடம் இந்த ஹதீஸ்கள் உமக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்கப்பட்ட போது மக்கள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களைக் குர்ஆன் பக்கம் ஈர்ப்பதற்காக நான் தான் இட்டுக்கட்டினேன் என்று கூறினார்
சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் ஆல இம்ரான், சூரத்துல் பகரா, ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்பு அத்தியாயம், குல்ஹுவல்லாஹு அத்தியாயம், குல்அவுது பிரப்பில் ஃபலக், குல்அவுது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிரூன், தபாரக்கல்லதீ போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை. 
المنار المنيف - (ج 1 / ص 111)
ومنها أحاديث الاكتحال يوم عاشوراء والتزين والتوسعة والصلاة فيه وغير ذلك من فضائل لا يصح منها شيء ولا حديث واحد و لا يثبت عن النبي صلى الله عليه و سلم فيه شيء غير أحاديث صيامه وما عداها فباطل
ஆஷுரா நாளில் சுருமா இட வேண்டும்; அலங்கரித்துக் கொள்ள வேண்டும்; குடும்பத்துக்கு அன்றைய தினம் அதிகமாகச் செலவிட வேன்டும் என்பது போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது பற்றிய ஹதீஸைத் தவிர மற்ற அனைத்துமே ஆதாரமற்றதாகும்
(அந்நாளில்  மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை) 

إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي - (ج 1 / ص 273)
حديث البداءة في قلم الأظافر بمسبحة اليمنى والختم بإبهامها وفي اليسرى بالخنصر إلى الإبهام لم أجد له أصلا وقد أنكره أبو عبد الله المازري في الرد على الغزالي
நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவை அனித்தும் ஆதாரமற்றவை
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 193)
حديث صلاة بخاتم تعدل سبعين بغير خاتم قال في المقاصد موضوع
மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது. 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 188)
أن الصلاة بعمامة تعدل بخمس وعشرين وجمعة بعمامة تعدل سبعين جمعة بغير عمامة إن الملائكة يشهدون الجمعة متعممين ولا يزالون يصلون على أصحاب العمائم حتى تغرب الشمس قال ابن حجر موضوع
தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது. 
المنار المنيف - (ج 1 / ص 96)
وكل حديث في ذكر صوم رجب وصلاة بعض الليالي فيه فهو كذب مفترى كحديث من صلى بعد المغرب أول ليلة من رجب عشرين ركعة جاز على الصراط بلا حساب
ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.
المنار المنيف - (ج 1 / ص 98)
ومنها 15 أحاديث صلاة ليلة النصف من شعبان
 175 - كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد منهما في سبعين
ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில்  நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை 
الموضوعات للصغاني - (ج 1 / ص 72)
ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. 
كشف الخفاء - (ج 2 / ص 421)
وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه الأبواب لم يصح فيها شئ أصلا . وباب صلاة التسابيح لم يصح فيه حديث . وباب زكاة الحلي لم يثبت فيه شئ
ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர் இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை. 
முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களைத் தடவுதல் 
அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள். 
3.     தனி மரியாதை பெறுவதற்காக
மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மத குருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. 
இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள். 
الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 2)
حديث إذا جلس المتعلم بين يدي العالم فتح الله عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا موضوع
  تنزيه الشريعة المرفوعة - (ج 1 / ص 283)
حديث إذا جلس المتعلم بين يدى العالم فتح الله تعالى عليه سبعين بابا من الرحمة ولا يقوم من عنده إلا كيوم ولدته أمه وأعطاه الله بكل حرف ثواب ستين شهيدا وكتب الله له بكل حديث عبادة سبعين سنة وبنى له بكل ورقة مدينة كل مدينة مثل الدنيا عشر مرات
ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான். 
تذكرة الموضوعات للفتني - (ج 1 / ص 8)
إن أهل الجنة ليحتاجون إلى العلماء في الجنة وذلك أنهم يزورون الله في كل جمعة فيقول تمنوا على ما شئتم فيلتفتون إلى العلماء فيقولون ماذا نتمنى على ربنا فيقولون تمنوا كذا وكذا
சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள். 
 الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 6)
حديث إن العالم والمتعلم إذا مرا على قرية فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوماً لا أصل له
ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான். 
الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 11)
حديث حضور مجلس عالم أفضل من صلاة ألف ركعة أورد ابن الجوزي في الموضوعات
ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது. 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 286)
حديث علماء أمتي كأنبياء بني إسرائيل قال ابن حجر والزركشي لا أصل له
என் சமுதாயத்தில் உள்ள உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள். 
كشف الخفاء - (ج 2 / ص 220)
من أذل عالما بغير حق أذله الله يوم القيامة على رؤوس الخلائق
ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான். 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 285)
حديث من زار العلماء فقد زارني ومن صافح العلماء فكأنما صافحني ومن جالس العلماء فكأنما جالسني ومن جالسني في الدنيا أجلس الي يوم القيامة في إسناده كذاب
யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார். 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 287)
حديث مداد العلماء أفضل من دم الشهداء
ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது. 
ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ். 
இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும். 
4.     மன்னர்களை மகிழ்விக்க
மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். 
மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.  
·         மன்னர்களுக்குத் தண்டனை இல்லை
·         மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை.
என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன. 
5.     இயக்க வெறி
·         மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
·         மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.
·         அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்
·         துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.
·         ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
·         நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். 
·         இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள், அலீ (ரலி) யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.
இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவையாகும். 
6.     பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்
மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர். 
நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள். 
مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة - (ج 1 / ص 4)
(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار
ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை 
أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش - (ج 1 / ص 70)
وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا
இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.. 
المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 170)
حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا
அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது 
المصنوع في معرفة الحديث الموضوع - (ج 1 / ص 261)
وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل
சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை. 
الؤلؤ المرصوع للقاوقجي - (ج 1 / ص 1)
حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء
ஹிழ்ர், இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 350)
حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت
மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது.
 
الفوائد المجموعة للشوكاني - (ج 1 / ص 471)
حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات
முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை. 
المنار المنيف - (ج 1 / ص 63)
ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت
எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது கட்டுக்கதை. 
இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே! 
·         அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.
·         சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
·         ·         கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.
·         தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது. 
·          சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.

·         நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
·         வறுமை எனக்குப் பெருமை.
·         உண்ணும் போது பேசக் கூடாது.
·         தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
·         ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
·         அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
·          தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.
·         நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.
·         நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.
·         முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.
·         தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.
·         பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.
·         நல்லடியார்களைப் பற்றிப் பேசினால் அங்கே அருள் இறங்கும்.
·         வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.
·         எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார். 
·         நோயாளி புலம்புவது தஸ்பீஹ் ஆகும்.
·         சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
·         அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.
·         அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.
இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன. 
7.     சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்
ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர். 
இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன், பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
ஆனால் யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபி வழி மருத்துவம் என பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். 
இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபி வழி மருத்துவம் என்றனர். 
ஒவ்வொரு நோய்க்கும் நபி (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள். 
இன்னும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் தொன்னூறு சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம். 
8.     மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
சிலர் முதுமையின் காரணமாக மூளை குழம்பியதன் காரணமாக நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். 
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். 
இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும். 
தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். 
இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். 
ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.
 
3.     மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும். 
அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும். 
மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும். 
மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
ளயீஃப் (பலவீனமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது. 
சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது
உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே. (அல்குர்ஆன் 17:36)     என்று அல்லாஹ் கூறுகின்றான். 
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரலி),
நூற்கள் : திர்மிதீ, அஹ்மத், ஹாகிம் 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன. 
பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது. 
அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 
பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்
அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம். 
1.     முர்ஸல்
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும். 
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும். 
ஹன்னாத் வகீபு இஸ்ராயீல் ஸிமாக் முஸ்அப் நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது. 
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும். 
முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது. 
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள். 
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும்.  ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். 
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர். 
இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல. 
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும் ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம். 
அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். 
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும். 
ஒரு நம்பகமான தாபியீ, ”நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன்என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை. 
2.     முன்கதிவு (தொடர்பு அறுந்தது)
நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள். 
உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். 
ஹன்னாத் வகீபு இஸ்ராயீல் ஸிமாக் முஸ்அப் இப்னு உமர் நபிகள் நாயகம். 
இதில் ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத் வகீவு இஸ்ராயீல் முஸ்அப் இப்னு உமர் நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று ஆகிவிடும். 
இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். 
2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும். 
இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. 
என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்த விட்டார்.
என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். 
என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். 
என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.
என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.
என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.
என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை. 
வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை. 
ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். 
இந்த நிலையில் ஆ என்பார் இ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதை இப்போதும் கண்டுபிடித்து விடலாம். 
ஆ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்
இ என்பவர் 115 ல் பிறந்தார் 
இப்போது ஆ என்பவரிடமிருந்து இ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஆ என்பவர் மரணிக்கும் போது இ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது. 
ஆ என்பவரிடமிருந்து அறிவிக்கும் இ என்பவர், தான் அரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டு பிடித்து விடலாம். 
இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும் அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும். 
3.     முஃளல் 
ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும். 
ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும். 
4.     மு  அல்லக்
ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும். 
வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும். 
உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும். 
அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான். 
ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் புகாரி கூறுவார். 
இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்ததால் அதை ஏற்றுச் செயல்படலாம். 
அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அதை விட்டு விட வேண்டும்.

பலவீனமான  ஹதீஸ்களின் மற்றொரு  வகை 
அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும். 
1.     ஷாத்
அரிதானது என்பது இதன் பொருள். 
ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம். 
இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர். 
தொழுகையில் நான்கு தடவை நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 
இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார். 
நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது. 
இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்
மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும். 
நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும். 
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், நஸயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியனானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும். 
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம். 
ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகின்றார். 
ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது. 
அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும். 
இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும். 
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும். 
இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். 
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்ற பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு. பலவீனராக உள்ளதால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 
ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும். 
முதல் ரக் அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள்என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார். 
இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றது. இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும். 
பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான். 
இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும். 
ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பலவிதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது. 
நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள். 
எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது?  என்ற முடிவுக்கு வர வேண்டும். 
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.  
முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள். 
ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாகும். 
2.     முன்கர் (நிராகரிக்கப்பட்டது)
ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும். 
ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள். 
ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை. 
இப்னு ஸலாஹ் என்ற அறிஞர் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றார். 
முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும். 
அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும். 
பலவீனமான  ஹதீஸ்களின் இன்னொரு வகை 
அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும். 
1.     முதல்லஸ்
பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 
உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.
1.     நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்சாரி அறிவித்தார்.
2.     மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினார்.
3.     மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.
4.     மாலிக், ஸுஹைல் பின் அபீஸாலிஹ் வழியாக அறிவித்தார்.
5.     அபூஸாலிஹ், அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.
6.     அபூஹுரைரா (ரலி), நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.
இது திர்மிதீ நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஆறு நபர்கள் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.  
இந்தப் பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். 
ஆரம்பத்தில் நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார்என்று கூறப்படுகின்றது. நமக்கு அறிவித்தார்என்ற வாசக அமைப்பிலிருந்து இமாம் திர்மிதீ நேரடியாக இஸ்ஹாக்கிடம் கேட்டிருக்கிறார் என்பது விளங்குகின்றது. 
இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடமிருந்து அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகின்றது. எல்லாருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர். 
ஆனால் ஐந்தாவதாக குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்என்று தான் கூறப்பட்டுள்ளது. 
இந்த வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும். 
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம். 
குதைபா நேரடியாக மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கைக் கூறியிருக்கலாம். 
இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகின்றோம். அபூஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று. 
இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக்  கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொருத்தே ஹதீஸின் தரம் முடிவாகும். 
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து விடலாம். 
குதைபா, மாலிக்கிடம் நேரடியாக கேட்டிருக்கா விட்டால் இடையில் ஒருவரை அவர் விட்டிருக்கலாம். அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் ஒன்று இருக்கலாம். 
எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகின்றது. 
இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது. 
குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத் தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்கமுடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாது. மாலிக் வழியாக குதைபா என்பதை மாலிக் நமக்கு அறிவித்தார்என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம். 
ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்காவிட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார்; நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம். 
(குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்திற்குத் தான் இவ்வாறு கூறுகின்றோம்) 
இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகின்றார் என்றால் தனது ஆசிரியரை விட்டு விட்டு, தனது ஆசிரியருடைய ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வருகின்றது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தாம் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தக்லீஸ் எனப்படும். 
இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும். 
ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரைக் கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதீஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும். 
ஒரு நபர் சில நேரங்களி்ல தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர், குறிப்பிட்ட  ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் நமக்கு இவர் அறிவித்தார்என்று தெளிவாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். 
இவர் முதல்லிஸ் (தக்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் அவர் விட்டு விடவில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்கலாம். 
ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது. 
இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. 
2.     முஅன்அன்
அன்என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும். 
அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள்  முஅன்அன் எனப்படும். 
நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும். 
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும். 
தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக” ”அவர் மூலம்என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.
அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. 
அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும். 
3.     முத்ரஜ் (இடைச்  செருகல்)
ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும்  போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு. 
இந்த நேரத்தில்  இதை ஓதுஎன்ற கருத்தில்  ஒரு ஹதீஸ் இருப்பதாக  வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும்  அறிவிப்பாளர், இந்த நேரத்தில்  இதை ஓது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, “இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள்என்று சுய கருத்தையும்  கூறிவிடுவார். 
இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய  ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள்  கூறியது எது? இடைச் செருகல்  எது? என்பதைப் பிரித்து அறிந்து  இடைச் செருகலை மட்டும்  விட்டு விட வேண்டும். 
வேறு அறிவிப்பைப் பார்த்தும் இடைச் செருகலைக் கண்டு  பிடிக்கலாம். 
இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபி (ஸல்) அவர்களின்  கூற்று அல்ல மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக்  கூற்று என்றோ கூறுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம். 
அல்லது  இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத் தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்தும் கண்டு பிடிக்கலாம். 
அல்லது  இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற  அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளலாம். 
பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
 
பலவீனமான  ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை 
1.     முள்தரப்
குழப்பமானது என்று இதன் பொருள். 
முள்தரப்  என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும். 
ஒரு ஆசிரியரிடமிருந்து  ஒரு ஹதீஸைப்  பல மாணவர்கள்  செவியுற்று, ஒருவர் மட்டும்  மற்றவர்கள் அறிவிப்பதற்கு  முரணாக அறிவித்தால் அது  ஷாத் எனப்படுகின்றது. என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். 
முள்தரப்  என்பது ஓரளவு இது போன்றது  தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம்  உள்ளது. 
ஒரு குறிப்பிட்ட  செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அதற்கு முள்தரப் எனப்படும். 
ஒரு சம்பவம்  மக்காவில் நடந்ததாக ஐந்து  பேர் அறிவிக்க, மதீனாவில்  நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். 
இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும் மதீனாவிலும்  இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக் கூடாது. 
முள்தரப்  என்பது இன்னொரு வகையிலும்  ஏற்படும். 
ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில்  நடந்ததாக அறிவித்தால் அதுவும்  முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த  தவறு) தான். 
கருத்துக்களில்  முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும்  இந்த நிலை ஏற்படலாம். 
இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று  ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல்  காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை. 
2.     மக்லுாப் (மாறாட்டம்)
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள். 
இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. 
கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரைக் கூற வேண்டிய இடத்தில் மாணவரையும், மாணவரைக் கூற வேண்டிய இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு. 
3.     மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)
ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர். 
இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார். 
அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் இவரும் மஜ்ஹுல் தான்.  
ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர். 
இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது. 
யாரைப் பற்றிய செய்தி என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல் 
இது வரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம். 
யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 
யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மர்பூஃவு என்றும்  
நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மவ்கூஃப் என்றும் 
அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்ட செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும். 
இதை விரிவாகப் பார்ப்போம். 
1.     முஸ்னத், மர்ஃபுவு
முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள். 
முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான். 
முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும். 
மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது. 
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும். 
மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும். 
மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 
2.     மவ்கூஃப்
சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும். 
அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும். 
நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. 
அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது. 
சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும். 
நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்” 
எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்ததுஎன்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது. 
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக் கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர். 
மவ்கூஃபுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சொல் மர்ஃபூவு என்பதாகும். 
மர்ஃபூவு என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியாகும். மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்தி என்று பொருள். 
3.     மக்தூவு (முறிக்கப்பட்டது)
நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை. 
அறிவிப்பவரின் எண்ணிக்கை
அடிப்படையில் வகைப்படுத்துதல் 
எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
1.     முதவா(த்)திர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
ஒரு செய்தியை ஒருவர். இருவர் அல்ல. ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர். 
மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை. 
நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒரவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம். 
குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும். 
குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம். 
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும்என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 
2.     ஹபருல் வாஹித் (தனி நபர் அறிவிப்பது)
தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள். 
இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர். 
இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல. 
எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவர்த்துள்ளோம். 
ஆதார நூற்கள் 
இதுவரை நாம் கூறிய விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவீ, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல் ஆகிய நூற்களே இந்நூலுக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
நன்றி : http://sltjmabola.blogspot.com