Mar 1, 2011

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரணமாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். 

மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.

யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?


தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை. 

நன்றி :

நூல் : மாமனிதர் நபிகள் நாயகம் 
எழுதியவர் : ஜைனுல் ஆபிதீன்