May 10, 2011

16. ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?


கேள்வி:
சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the
crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை.

அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி(ஸல்) அவர்கள் 72  பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போதோ 100க்கும் மேற்பட்ட பிரிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அனைவரும் தேர்வு செய்து இருப்பது ஒரே குர்ஆன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மேலும் indian muslims என்கிற தலைப்பில் இந்தியா வில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள் இப் போது 53 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அங்கு அகதிகளாகவே உள்ளனர் எனக் கூறியுள்ளார் உண்மை தானா? ஏன்?

இதே கேள்வி ஒன்றைத் தான் எனது இந்து நண்பர் கேட்டார். நீங்கள் முஸ்லிம் என்று சொல்லி பாகிஸ்தான் சென் றால் உங்களைச் சேர்க்க மாட்டார்கள். பின்பு ஏன் சகோதரத்துவம் என்ற முறையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக முஸ்லிம் கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஏன் அனு மதிக்கப்படுவது இல்லை. இதைப் பற்றிய விளக்கம் தேவை.

பதில்:
இதெல்லாம் அறிவீனர்களின் வாதமாகும்.

ஒரு நாட்டுக்கு ஒரே ஒரு அரசியல் மற்றும் குற்றவியல் சட்டம் தான் உள்ளது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை மாவட்ட நீதி மன்றம் தள்ளுபடி செய்கிறது. மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியில்லை என்று மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் பெஞ்சுகள் தள்ளுபடி செய்கின்றன. உச்ச நீதி மன்றம் அதையும் தள்ளுபடி செய்கின்றது. உச்சநீதிமன்ற பெஞ்ச் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கின்றது.

இப்படி உலகின் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற முரண் பட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அனைவருமே ஒரே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்பளிக்கின்றனர்.

இதை அந்த மேதாவி எழுத்தாளர் குழப்பம் என்பாரா? விமர்சனம் செய்வாரா? நிச்சயம் செய்ய மாட்டார்.

சட்டம் ஒன்றாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வதில் தவறிழைக்கலாம். முக்கியமான பாயின்டுகளை ஒருவர் கவனிக்க மறுக்கலாம்.

இது போல் குர்ஆன் ஒன்று என்றாலும் அதைப் புரிந்து கொள்வதில் வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை யானது தான். இந்த எழுத்தாளரின் கட்டுரையையே பலரும் பல விதமாகப் புரிந்து கொள்வார்கள்.

ஆயினும் இஸ்லாமிய சமுதாயத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒன்றிரண்டு பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கிடையே அடிப்படையான விஷயங்களில் எந்த வேறுபாடும் கிடையாது.

  • அல்லாஹ் ஒருவன். வேறு கடவுள் இல்லை.
  • முஹம்மது நபி இறைத்தூதரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.
  • வானவர்கள் உள்ளனர்.
  • ஷைத்தான்கள் உள்ளனர்.
  • உலகம் அழிக்கப்படும்.
  • அழிக்கப்பட்டவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
  • விசாரணை நடக்கும்.
  • சொர்க்கம் நரகம் உண்டு.
  • மது, சூது, லாட்டரி, விபச்சாரம், மோசடி, கலப்படம், திருட்டு போன்றவை குற்றச் செயல்கள் 

என 95 சதவிகிதம் விஷயங்களில் முஸ்லிம் களிடையே கருத்து வேறுபாடு ஏதுமில்லை.
வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் முறைகளில் ஓரிரண்டு விஷயங்களில் மாறுதல் உள்ளன. இது போன்று வேறு சில சட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் உள்ளன.

அடிப்படையிலேயே மாறுபட்ட கருத்துகள் மற்ற மதங் களில் உள்ளன. எனவே அவரது விமர்சனம் அறியாமையின் வெளிப்பாடு. அவருடைய நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு.

அடுத்து பாகிஸ்தான் பற்றி அவர் கூறுவதும் அவரது அறியாமையை எடுத்துக் காட்டுகிறது.பாகிஸ்தானை இங்குள்ள முஸ்லிம்கள் ஆதரிப்பதாகக் கூறுவது திட்டமிட்ட அவதூறாகும்.

இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.
நாட்டின் இரகசியங்களைக் காட்டிக் கொடுத்தவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிமல்லாதவர்கள் தான்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாகிஸ் தானைச் சேர்ந்தவர்கள் தான். இந்திய முஸ்லிம்கள் அல்லர்.

மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த பல போர்களில் முஸ்லிம்கள் மற்றவர்களை மிஞ்சும் வகையில் நாட்டுக்காகப் போராடியுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் இன்னொரு முக்கியமான விஷயத்தை அனை வரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக் களில் முஸ்லிம்கள் மட்டுமே தமக்கு வைக்கப்பட்ட பரீட்சையில் தேறி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். வேறு எந்தச் சமுதாயத்துக்கும் இது வரை பரீட்சை ஏதும் வைக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்காக ஒரு நாடு உருவாகி யார் வேண்டு மானாலும் வரலாம் என்று அழைப்பு விடப்பட்ட போதும், ஆசை வார்த்தை காட்டப்பட்ட போதும் இங்கேயே தங்கியவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

தமக்கென ஒரு நாடு உருவாகும் போது எந்தச் சமுதாயத்தினரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் தங்கிய முஸ்லிம்கள் மட்டும் தான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு இங்கேயே தங்கி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டினார்கள்.

எனவே நாட்டைப் பிரித்துக் கொண்டு சென்றவர்களின் செயலுக்காக, இங்கே தங்கி தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்தவர்கள் மீது பழிபோடுவதை விட மிகப் பெரிய அநீதி ஏதும் இருக்க முடியாது.

அடுத்து பாகிஸ்தானில் முஹாஜிர்கள்' மரியாதையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.

முஹாஜிர்கள் என்றால் யார் என்பதைப் புரிந்து கொள்ள பாகிஸ்தான் பூகோள அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் இரண்டு மாநிலங்களை இரண்டிரண்டாகப் பிரித்தே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி மேற்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. இன்னொரு பாதி பஞ்சாப் மாநிலமாக இந்தியாவில் உள்ளது.
அது போல் வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி கிழக்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. மறு பாதி மேற்கு வங்க மாநிலமாக இந்தியாவில் உள்ளது.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வாங்காளம் இன்று பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆகிவிட்டது.
மேற்கு பாகிஸ்தானாக இருந்த பாதி பஞ்சாப் மட்டுமே தற்போது பாகிஸ்தானாக உள்ளது.

நாடு பிரிக்கப்பட்ட போது பஞ்சாபில் இருந்த மக்கள் தங்கள் மண்ணோடு தான் பிரிந்து கொண்டார்கள்.வங்காள மக்களும் அப்படியே பிரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களை யும் பாகிஸ்தான் வருமாறு அன்று அழைப்பு விடப்பட்டது. இந்த அழைப்பை 99 சதவிகித முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர்.

ஒரு சதவிகிதம் முஸ்லிம்கள் தான் உருவாகவுள்ள பாகிஸ்தானுக்குப் போனார்கள். இவர்கள் தான் முஹாஜிர்கள்.

பஞ்சாப், வங்காள மாநிலத்திலிருந்து நிலப்பரப்போடு பிரிந்தவர் களுக்கு வீடு வாசல், சொத்து சுகமெல்லாம் இருந்தன. வேறு மாநிலங்களிலிருந்து சென்றவர்களுக்கு அங்கே ஏதும் இல்லை.

எனவே தான் வீடு வாசல் அற்ற அகதிகளாக முஹாஜிர்கள் இருக்கின்றனர்.
இது மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நிலை அல்ல. உள்ளூர் வாசிகள், வந்தேறிகள் பிரச்சினையாகும்.

இன்னும் சொல்வதென்றால் பாகிஸ்தான் இஸ்லாத்திற்காகப் பிரிக்கப்படவில்லை. இன்றைய பாகிஸ்தான் மக்களிடமும், தலைவர்களிடமும் உள்ள மார்க்கப்பற்றில் கால்வாசி கூட அன்றைய மக்களுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவில்லை. இஸ்லாமிய அடைப்படையில்லாமல் பிரிந்ததால் தான் வந்தேறிகள் ஒரு விதமாகவும், உள்ளூர் வாசிகள் வேறு விதமாகவும் நடத்தப்படுகின்றனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்துக்கு என்ன காரணமோ அதே காரணத்துக்காகத் தான் பாகிஸ்தானில் இந்த நிலை.

எனவே பாகிஸ்தானை மேற்கோள் காட்டி இஸ்லாத்தை விமர்சிப்பதை ஏற்க இயலாது.

நூலின் பெயர் : அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்
ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்

 THANKS : www.onlinepj.com