
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!. அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன் 5:35)

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
(அல்குர்ஆன் 17:57)
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக, சாதனமாக உள்ளது என்பர்.
பொதுவாக உலகில் உள்ள பல மதங்களிலும் கடவுளை நெருங்குவதற்காக நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவை லி சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.
இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள் என்பதன் கருத்தாகும்.
இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
இவ்வசனத்தின் துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். ‘மகான்களும் வஸீலா தேட வேண்டும்’ என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.
நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.
இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனை வரையும் கட்டுப்படுத்தும்.
மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (திருக்குர்ஆன் 17:57) தெளிவாகவே கூறுகிறது.