Jun 8, 2011

1.இது இறை வேதம்

இது இறை வேதம்
திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.

இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
(பார்க்க, திருக்குர்ஆன்: 10:15 10:37,38 11:13 11:35 16:101-103 69:44-46)

ஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும். திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கூற்று அல்ல என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களும் அறிந்து கொள்ள முடியும்.

முரண்பாடின்மை!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து, அதை இறைச்செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்பது தான் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.

எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.

* முன்னர் பேசியதை மறந்து விடுதல்
* முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்
* கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்
* யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்
* வயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்
* விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்

மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.

ஆனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.

மேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.

இறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 4:82)

மிக உயர்ந்த தரம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால், மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வார். அரபுமொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.
மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில்

* பொய் இல்லை!
* முரண்பாடு இல்லை!
* ஆபாசம் இல்லை!
* மிகையான வர்ணனைகள் இல்லை!
* கற்பனைக் கலவை இல்லை!
* நழுவுதலும், மழுப்புதலும் இல்லை!
* மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!

இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு, உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத்தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்தப் பிரமிப்பு நீடிக்கிறது.

இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபுமொழியில் கரை கண்டவராகவும், முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
(பார்க்க திருக்குர்ஆன்: 29:48, 7:157,158, 62:2)

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது அவர்களின் தகுதியைக் குறைக்குமா என்பதை 312வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)

அரபுமொழிப் பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபுமொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக அதைவிட பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச்செய்தியாகத் தான் இருக்க முடியும்.

படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விடும்.

மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அந்த மொழியின் பண்டிதர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.

சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது.

ஆனால் அரபுமொழியைப் பேசமட்டுமே தெரிந்த மக்களுக்கும் திருக்குர்ஆன் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபுமொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபுமொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.

இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன்வைத்து "இது இறைவேதம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாதிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

இசை நயம்!
எந்த இலக்கியமானாலும் அதில் ஓசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும், அடிகளும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.

ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட ஒரே அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும், சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.

இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசைநயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசைநயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசைநயம் குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.

அரபுமொழி தெரியாத மக்களும் அதன் இசைநயத்துக்கு மயங்குகின்றனர்.

இசைநயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசைநயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.

காலத்தால் முரண்படாதது!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழுநூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

* திருக்குர்ஆனைப் பொருத்தவரை அது ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமியைப் பற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

* அது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

* அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
(இறைவேதம் என்பதற்கான சான்றுகள் என்ற தலைப்பில் இதை விளக்கியுள்ளோம்.)

* பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்'' என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

* அறிவியல் தொடர்பான கருத்து மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்களையும், குற்றவியல் சட்டங்களையும், உரிமையியல் சட்டங்களையும் ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களையும் விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரும் வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

* ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டுதோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச்சட்டங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

* அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைத் திருக்குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல என்பதற்கான சான்றாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை பல நாடுகளில் பலநூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி அடியோடு தீண்டாமையை ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.

(இறைவேதம் என்பதற்கான சான்றுகள் என்ற தலைப்பில் இதன் விபரங்களை விளக்கியுள்ளோம்.)

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் சான்றுகளாக உள்ளன.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறைகூவல் விடுகிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34)

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விடப் பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.

முஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத, கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்தவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனின் தரத்தைப் பார்த்து வியந்து இவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத்தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர்.

பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத்தான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர யூத, கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.

"இவர் அவரைப் பெற்றார்; அவர் இவரைப் பெற்றார்'' என்று யூத, கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.

இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத, கிறித்தவ வேதங்களில் பெருமளவுக்கு வரலாறுகளும், மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே போதனைகளும் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை.

ஆனால், திருக்குர்ஆன் மனிதர்கள் படிப்பினை பெறத் தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளிலும் ஏற்கத்தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத, கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத, கிறித்தவ மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அதிக அளவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழிகாட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

(இது பற்றி மேலும் அறிந்திட 227வது குறிப்பைப் பார்க்கவும்.)

எனவே இது இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.

எதிர்பார்ப்புகள் இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை சொந்தமாகக் கற்பனை செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.

தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த இலாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும், நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில்தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர்.

எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம்.

இருக்கின்ற செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.

ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத்தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத்தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்த ஒருவர், இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன்வர மாட்டார்.
ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.

* இந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை.
* அரண்மனையில் வசிக்கவில்லை.
*கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
* அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறாரச் சாப்பிட்டதில்லை.
* ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
* வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
* தமது கவச ஆடையை அடைமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள்.
* ஒரு நிலப்பரப்பு, ஒரு குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் அவற்றுக்கு வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் பெயரால் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.

மக்களிடம் புகழ், மரியாதை அடைவதற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும்.
ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகம் நீங்கி விடும்.

புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார். மாறாக மக்கள் தன் காலில் விழுந்து கிடக்கும் வகையில் தன்னை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தான் கற்பனை செய்வார். ஆனால் திருக்குர்ஆனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள்.

நபிகள் நாயகமும் இறைவனின் அடிமையே என்று திருக்குர்ஆனின் 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10 வசனங்கள் கூறுகின்றன.

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆனின் 6:50, 7:188 வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை என்று திருக்குர்ஆனின் 3:127, 6:50, 7:188, 10:49, 10:107 வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் தமக்கே நன்மை செய்ய முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 7:188 வசனங்கள் கூறுகின்றன.

ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று திருக்குர்ஆனின் 23:97 வசனம் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினால் தான் உண்டு என்று திருக்குர்ஆனின் 4:106, 9:43, 23:118, 48:2 வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 67:28 வசனங்கள் கூறுகின்றன.

நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை என்று திருக்குர்ஆனின் 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56 வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்று திருக்குர்ஆனின் 3:128, 4:80 வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் என்று திருக்குர்ஆனின் 17:74 வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகமும் மனிதரே என்று திருக்குர்ஆனின் 3:144, 11:12, 18:110, 41:6 வசனங்கள் கூறுகின்றன.

இவ்வாறு மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

"நீர் எனக்கு அஞ்சாமல் மனிதருக்கு ஏன் அஞ்சுகிறீர்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கும் வசனமும் (33:37) திருக்குர்ஆனில் உள்ளது.

கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டபோது - அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் - அதை இறைவன் கண்டித்த வசனங்களும் (80:1-10) குர்ஆனில் உள்ளன.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் நமது மரியாதை குறைவதைச் சகித்துக் கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறைவார்த்தை என்று அறிவித்தார்கள்.

தம்மைக் கடவுள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் மீது மக்களில் சிலர் அன்பு வைத்திருந்தனர். அப்படியிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை, மற்றவர்களைப் போன்ற மனிதராகவே பிரகடனம் செய்தார்கள்.

இந்த விவரங்கள் யாவும் இறைச்செய்தி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன.

தம்மைக் கண்டிக்கின்ற, தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கற்பனையாக இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

* அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை!
* அவர்களுக்கு வாயிற்காப்போன் இருக்கவில்லை!
* யாரும் தன் காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
* தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!
* "இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்'' என்று எச்சரித்தார்கள்!

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்கள் விரும்பவில்லை; மக்களிடம் பெற்றதுமில்லை.

எனவே மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகத் தாமே கற்பனை செய்ததைக் கடவுள் வார்த்தை என்று கூறியிருப்பார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.


Soruce : http://tamilquran.in