வாரிசுகளுக்கு
விட்டுச் சென்றது என்ன?
எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர்.
ஆனால், தங்கள்
சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள்
மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத்
தெரியவரும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக்
கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?
இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.
ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.
உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள்
அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.
'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது
கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே
மரணித்தார்கள்' என்று
நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி
வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக்
கருவூலத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன்
ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப்
பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும்
உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.
மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின்
பட்டியலைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது
தங்கக் காசையோ, வெள்ளிக்
காசையோ, அடிமைகளையோ, வேறு
எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது
ஆயுதங்கள், தர்மமாக
வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள்.
நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461
நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும்
இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை
நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால்
தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது
செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப்
பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால்
அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம்
நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.
பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம்
மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.
நன்றி :
நூல் : மாமனிதர் நபிகள் நாயகம்
எழுதியவர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
Thanks : http://iniyamaargam.blogspot.com
எழுதியவர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
Thanks : http://iniyamaargam.blogspot.com