Jun 6, 2011

5. இறுதி நாளை நம்புதல்- இறுதி நாளை நம்புதல்


இறுதி நாளை நம்புதல்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:281)

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

(அல்குர்ஆன் 55:27)

வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

யுக முடிவு நாள், இறுதி நாள், þர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால்  திருமறைக் குர்ஆனில் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.

தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூ­ வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகம் இல்லாத நாள், மகத் தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.

அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும்  ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.

இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.