Jul 13, 2011

நபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)


நபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)

நபிமார்கள் வரலாறு என்ற தொடரில் நபிமார்கள் அனைவரும் மனிதர்கள் தாம் என்பதற்காக ஆதாரங்களை நாம் தொடராக பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அதற்கான இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

நபிமார்களின் குடும்ப அமைப்பு

நாம் எப்படி நமது வாழ்க்கையில் குடும்பமாக வாழ்கிறோமோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோமா அது போல் நபிமார்களும் தங்கள் வாழ்வில் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திருக்குா்ஆனிலும் நபி மொழிகளிலும் நிறைய சான்றுகளைப் பார்க்க முடியும்.

இறை தூதர்கள் என்றால் துறவிகளாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்டி நபிமார்களும் மனிதர்கள் என்பதை எல்லா விதங்களிலும் மக்களுக்கு தெளிவு படுத்திய பெருமை இஸ்லாத்தை மட்டுமே சேறும்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(4:1)

உலகில் பிறந்த அனைவரும் அஞ்ச வேண்டிய ஒரே கடவுள் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் உலகில் பிறக்கும் அனைவருக்கும் மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் என்று ஒரு குடும்ப வட்டம் உண்டு என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

அதே போல் நபி அய்யூப் அவர்கள் தனக்கு ஏற்பட்ட நோயின் போது அல்லாஹ்விடம் வைத்த ஒரு கோரிக்கையைப் பற்றி இறைவன் இப்படிக் குறிப்பிடுகிறான்.

'எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.(21-83,84)

மேற்கண்ட வசனத்தில் நபி அய்யூப் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததை சொல்லிக் காட்டும் இறைவன் அவருக்கு நோயை இலாசாக ஆக்கியது மட்டுமன்றி அவரது குடும்பத்தாரையும், இன்னும் பலரையும் அவருடன் சேர்த்து வைத்ததையும் குறிப்பிட்டுக் காட்டி இது நாம் அய்யூபுக்கு செய்த அருள் என்றும் குறிப்பிடுகிறான்.

அய்யூப் நபி அவர்கள் இறைத் தூதராக இருந்தார்கள் அவருக்கும் குடும்பம் இருக்கத் தான் செய்தது என்பதை மேற்கண்ட வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இறைத் தூதர்கள் மனிதர்கள் என்பதற்கான மிகப் பெரிய சான்றும் இதுதான் இதே நேரம் கடவுல் மனிதனாக முடியாது என்பதற்கும் இன்றுள்ள போலி கடவுள்களை இனம் காண்பதற்கும் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மனிதராக இருந்தால் அவர் குடும்பம் நடத்துவார் குழந்தை பெற்றுக் கொள்வார் உண்பார் பருகுவார் இப்படி தனது தேவையை நிவர்த்தி செய்யும் பல காரியங்களையும் அவர் செய்வார் ஆனால் கடவுளாக இருப்பவருக்கு இவை அனைத்தும் தேவையற்றவைகளாகும்.

இன்று நமக்கு மத்தியில் கடவுளாக பேசப்படும் பலர் திருமணம் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் உண்ணுகிறார்கள் பருகுகிறார்கள் இப்படி மணிதத் தன்மைகள் அனைத்தும் அவர்களிடம் காணப்படுகிறது இனி எப்படி அவர்கள் கடவுளாக முடியும் ? இவர்களை கடவுளாக ஏற்றிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும் ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.(33-6)

மேற் கண்ட வசனம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி பேசுகிறது. இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் அவர்கள் கூட தமது வாழ்வில் திருமணம் செய்து சிறப்பான முறையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆதாரமாக உள்ளது. நபியவர்களின் மனைவியர் உலகில் உள்ள அனைத்து முஃமின்களுக்கும் அன்னையர் ஆவார்கள். என்ற இந்த வசனம் நமக்க அழகாக ஒரு மேலதிக தகவலையும் சொல்லித் தருகிறது.

ஆதமே! நீயும் உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர் என்று நாம் கூறினோம்.(2:35)

அவனே உங்களை ஒரே ஒரு வரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன் அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.(7:189)

ஆதமே! இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!(20: 117)

உலகின் முதல் மனிதராகிய நபி ஆதம் அவர்களை படைத்த இறைவன் அவருக்கு துணையாக ஹவ்வா (அலை) அவர்களை ஏற்படுத்தி முதல் மனிதரை முதல் குடும்பமாகவும் பெருக்கினான். ஆதம் மற்றம் ஹவ்வா (அலை) ஆகிய இருவரையும் கொண்ட முதல் குடும்பம் உலகில் தோற்றம் பெற்றதை இறைவன் நமக்கு எடுத்துச் சொல்கிறான்.

ஆகவே நபிமார்கள் மனிதர்கள் என்பதும் அவர்களுக்கும் குடும்பம் இருந்தது என்பதற்கும் மேற்கண்ட வசனங்கள் போதிய சான்றுகளாகும்.

இது வரைக்கும் நபிமார்கள் மனிதர்களில் இருந்துதான் அனுப்பப் பட்டார்கள் என்பதற்கும் அவர்கள் மனிதர்கள் தாம் என்பதற்கும் ஏறாளமான சான்றுகளை நாம் பார்த்தோம். இனி உலகுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களின் வரலாறுகள் பற்றி தொடராக பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் பற்றிய அடுத்த தொடரில் சந்திப்போம்.
ஆசிரியர் : ரஸ்மின் MISc
Source: www.frtj.net