நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள்
(ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்)
உலகம் எப்போது அழிக்கப்டும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள்.சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்துச் சொல்கிறது.
முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும்.
1)அல்லாஹ்வை நம்ப வேண்டும்
2)வானவர்களை நம்ப வேண்டும்.
3)வேதங்களை நம்ப வேண்டும்
4)தூதர்களை நம்ப வேண்டும்.
5)இறுதி நாளை நம்ப வேண்டும்.
6)விதியை நம்ப வேண்டும்.
இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போதுஅனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும் தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான் என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்
மேற்கண்டவாறு நம்புவதுதான் இறுதி நாளை நம்புதல் என்ற சொடரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராகத் திகழ்கிறது
இப்படி ஒரு நியாயத் தீர்ப்பு நாள் தேவை தான் என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும் ஒப்புக் கொள்கிறது.
இவ்வுலகில் ஒருவன் மிகவும் நல்லவனாகவாழ்கிறான். ஆனாலும் அவன் மிகவும் சிரமப்படுகிறான். அவனசெய்த நன்மைகளுக்கான பரிசு இவ்வுலகில் அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காண்கிறோம்.
அது போல் ஒரு மனிதன் அனைத்து தீமைகளிலும் மூழ்கிக் கிடக்கிறான்.எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்கிறான். ஆனாலும் இவன் சொகுசாக வாழ்ந்து மரணித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இவன் செய்த தீமைகளுக்கான தண்டனையை இவ்வுலகில் இவன் அனுபவிக்கவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்
பத்து கொலை செய்த ஒருவன் மரண தண்டனை பெற்றால் கூட அது அவனது குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அல்ல. ஒரு உயிரைக் கொன்றதற்குப் பகரமாக அவனது உயிரை வாங்குகிறோம். ஆனால் மீதி ஒன்பது கொலைகள் செய்ததற்கு என்ன தண்டனை அதற்கான தண்டனையை இவ்வுலகில் அவனுக்கு யாராலும் வழங்க முடியாது
இதன் காரணமாக தீயவர்களைப் பார்த்து மற்றவர்களும் தம்மைத் தீய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
யாரும் தன்னைப் பார்க்காத வகையில் குற்றம் செய்து விடமுடியும் என்று குற்றம் செய்யும் மனிதன் நம்புகிறான். அப்படி யாராவது பார்த்து விட்டாலும் அவர்களைச் சரிக்கட்ட முடியும் எனவும் நினைக்கிறான். இதன் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் மனிதன் நல்லவனாகவே வாழ வேண்டுமானால் நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது என்று நம்புவது தான் அதற்கான ஒரே வழி.
அதைத் தான் இறுதி நாளை நம்புதல் என்று இஸ்லாம் குறிப்பிடு கிறது. அந்த நாளில் நமது செயல்களின் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் எச்சரிக்கை.
அந்த நாள் அருகிலேயே உள்ளது
அந்தநாள் எப்போதுவரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும்
சீக்கிரமே அந்த நாள் வந்துவிடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு
இடங்களில் குறிப்பிடுகிறது.
சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.
(திருக்குர்ஆன் 78:40)
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
(திருக்குர்ஆன் 70:6,7)
அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.
(திருக்குர்ஆன் 54:1)
அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்
திருக்குர்ஆன் 42:17)
முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர்.
அது பற்றியஅறிவு அல்லாஹ்விடமே உள்ளது எனக்கூறுவீராக!
அந்தநேரம் சமீபத்தில் இருக்கக் கூடும்என்பது உமக்கு எப்படித் தெரியும்
(திருக்குர்ஆன் 33:63)
உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை நாங்கள் அநீதி இழைத்தோம் (என்று கூறுவார்கள்).
(திருக்குர்ஆன் 21:97)
மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து கவனமின்றி உள்ளனர்.
(திருக்குர்ஆன் 21:1)
எங்களை எவன் மீண்டும் படைப்பான் என்று அவர்கள் கேட்கின்றனர்.முதல் தடவை யார் உங்களைப் படைத்தான் என்று கேட்பீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து அது எப்போது வரும் என்று கேட்கின்றனர்.அது சமீபத்தில் வரக் கூடும் என்று கூறுவிராக.
(திருக்குர்ஆன் 21:1)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும் அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும் அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா
இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்.
(திருக்குர்ஆன் 7:185)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டி நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) நூல்: புகாரி 4936, 5301, 6503
அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்
இதை சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம் தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமைநாள் வந்தாலும் அதுசமீபத்தில் தான்உள்ளது என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.
யாராலும் அறிய முடியாது
அந்த நாள் எந்த ஆண்டு வரும் எப்போது இந்த உலகம் அழிக்கப்படும் என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும்விடை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது என்பது தான்.
“அந்த நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள்கேட்கின்றனர். இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது.அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறு வீராக! எனினும்
மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
(திருக்குர்ஆன் 7:187)
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது எனக் கேட்கின்றனர். அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாகஎச்சரிப்பவன் மட்டுமே எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 67:25.26)
நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 72:25)
அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும் என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும். சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா
(திருக்குர்ஆன் 12:107)
அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15.16)
முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்
திருக்குர்ஆன் 33:63)
அது எப்போது நிகழும்என்பதை நபிகள் நாயகம்(ஸல்) உள்ளிட்டஎந்த மனிதரும் அறிந்திருக்கவில்லை அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன
மறைத்து வைத்த மர்மம் என்ன?
அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாகஅறிவித்து விடலாமே! ஏன்அறிவிக்க மறுக்கிறான் என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம் அந்தநாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில் எந்த மாதத்தில் எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.
மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்றுமுன்பாக பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான். நல்லவனையும் கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள்மட்டும் எல்லோருக்கும் நல்லவனாகவாழ்ந்து விடுவான். நல்லவனையும் கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.
நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும் இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை.
அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டா லும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கி யுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றைத்
தெரிந்து கொள்வோம்.
சிறிய அடையாளங்கள்
மகளின் தயவில் தாய்
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
குடிசைகள் கோபுரமாகும்
விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
பாலை வனம் சோலை வனமாகும்
காலம் சுருங்குதல்
கொலைகள் பெருகுதல்
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
நெருக்கமான கடை வீதிகள்
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆடை அணிந்தும் நிர்வாணம்
உயிரற்ற பொருட்கள் பேசுவது
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
சாவதற்கு ஆசைப்படுதல்
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
இது வரை நிகழாத அடையாளங்கள்
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
செல்வம் பெருகும்
மாபெரும் யுத்தம்
பைத்துல் முகத்தஸ் வெற்றி
மதீனா தூய்மையடைதல்
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிரமிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்
புகை மூட்டம்
தஜ்ஜால்
ஈஸா நபியின் வருகை
யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
அதிசயப் பிராணி
மேற்கில் சூரியன் உதிப்பது
மூன்று பூகம்பங்கள்
பெரு நெருப்பு
ஈஸா நபியின் வருகை
Thanks : http://mudunekade.blogspot.com
Thanks : http://mudunekade.blogspot.com