Jul 21, 2011

திருக்குர்ஆன் விளக்கவுரை


திருக்குர்ஆன் விளக்கவுரை
(பி. ஜைனுல் ஆபிதீன்)

(சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் 1993ஆம் ஆண்டு அல்முபீன் இதழில் திருக்குர்ஆன் விரிவுரை எழுதப்பட்டது. பல்வேறு காரணங்களால் தொடர முடியாமல் போன அந்தத் தொடரை நமது வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழில் வெளியிடத் தீர்மானித்துள்ளோம். - ஆசிரியர்)

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். மிகவும் உயர்வான இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தாலும், இதுபோன்று எவராலும் கொண்டு வர முடியாது என்று சவால் விடும் அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும் சராசரி மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அதன் வசனங்கள் எளிமையாக அமைந்துள்ளன.

மனிதர்களால் எழுதப்பட்ட நூல்கள் இலக்கியத் தரத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மனிதர்களை விட்டு அன்னியமாகிப் போவதை நாம் உலகில் காண்கிறோம்.

அல்குர்ஆன் மட்டும் எவரும் எட்ட முடியாத இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தும் சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஒன்றே இது இறைவேதம் என்று நிரூபணம் செய்திடப் போதுமானதாகும்.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
(அல்குர்ஆன் 54:17, 22, 32, 40)

இவ்வாறு பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

(முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில் இதை எளிதாக்கியுள்ளோம்.
(அல்குர்ஆன் 19:97)

(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
(அல்குர்ஆன் 44:58)

இந்த வசனங்களும் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்பதை அறிவிக்கின்றன.
அனைவரும் எளிதில் விளங்கிட ஏற்ற வகையில் அல்குர்ஆன் அமைந்துள்ளதால் விரிவுரைகளோ, விளக்கவுரைகளோ இல்லாவிட்டாலும் அல்குர்ஆனை அனைவரும் விளங்கலாம். மனிதனுக்கு அந்தத் திருக்குர்ஆன் கூறக்கூடிய செய்தியை அனைவரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட மேலதிகமான விளக்கத்திற்காக இரண்டு வழிமுறைகளில் முயற்சி செய்வதை திருக்குர்ஆன் அனுமதிக்கின்றது. அந்த வழிகளில் முயற்சிப்பதை வலியுறுத்தவும் செய்கின்றது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன் 16:44)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 16:64)

குர்ஆன் விளங்குவதற்கு எளிதானதாக இருந்தாலும், அதைப் பூரணமாக விளங்கிக் கொள்ள நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரைகளும் அவசியம் என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன. குர்ஆனை முழுமையாக விளங்கிட நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் அவர்களின் வாழ்க்கையையும் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
(அல்குர்ஆன் 47:24)

இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 38:29)

இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா? (அல்குர்ஆன் 23:68)

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)

திருக்குர்ஆனைப் பூரணமாக விளங்க மற்றொரு வழி அதன் வசனங்களைச் சிந்திப்பதாகும். முன்பின் வசனங்களைப் பார்த்து அது சொல்ல வருவது என்ன என்று ஆராயாமல், அவசர முடிவுக்கு வராமல் சிந்தனையைச் செலுத்த வேண்டும் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.

திருத்தூதரின் விளக்கவுரையையும் அறிவுப்பூர்வமான சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கவுரையை நாம் எழுதியுள்ளோம். மக்களால் தொழுகையில் அதிக அளவில் ஓதப்படும் சிறு சிறு அத்தியாயங்களுக்கு விளக்கவுரையை எழுத வேண்டும் என்பதற்காக, சூரத்துந் நபா எனப்படும் அத்தியாயத்திலிருந்து இந்த விளக்கவுரையை ஆரம்பித்துள்ளோம். இந்த அத்தியாயங்களை ஓதும் போதே அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் மக்கள் விளங்கி ஓத வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில் தவறுகளைக் கண்ணுறும் அன்பர்கள் கடமை உணர்வுடன் சுட்டிக் காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
 
Thanks: http://qatartowheed.blogspot.com