நோன்பு ஓர் சுயபரிசோதனை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித மிக்க ரமளான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் வந்து போனாலும் அந்த மாதத்தின் மூலம் நாம் அடைந்து கொள்ள வேண்டிய நன்மைகளை பெறுகிறோமோ என்றால் இல்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளது.
உலக விஷயத்தில் எந்த ஓர் காரியத்திற்கும் ஏன், எதற்காக செய்கிறோம் என பல கேள்விகளை மனதில் நிறுத்தி நடைமுறைப் படுத்தும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் தான் அலட்சியப்போக்குடன் ஏனோ தானோவென்று செய்வதை நம்மால் காண முடிகிறது.
அது போலவே ரமளானைப் பொருத்தவரை சில அடிப்படையான, முக்கியமான விஷயங்கள் நமக்குத் தெரியாததினால் அல்லது தெரிந்தும் செயல்படுத்தாததினால் நம் வணக்க வழிபாடுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ரமளானில் பொதுவாக கணிசமான மக்கள் கீழ்க்கண்டவற்றை மட்டுமே செய்கின்றனர்.
- மற்ற மாதங்களை விட (பகலில் மட்டும் தான் பட்டினியே தவிர மற்ற நேரத்தில்) வகை வகையாக, ருசியான உணவுகளை சாப்பிடுவது.
- இஃப்தாருக்கு நோன்புக் கஞ்சி குடிப்பது
- வளைகுடா நாடுகள் போன்ற பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு வேலை செய்யும் நேரம் குறைக்கப்படுவதால் வேலைப் பளுவை குறைக்கப்படுதல்.
இன்னும் இது போன்ற காட்சிகள். இதை விட வேடிக்கை என்னவென்றால் சில நபர்கள் நோன்பை வைத்துக் கொண்டு பகிரங்க விபச்சாரக் கூத்தாடிகளின் சினிமா ஆடல் பாடல்களை கண்டு ரசிப்பது, நடிகைகள் அரை குறை ஆடையுடன் அல்லது நீச்சல் உடையில் தோண்றும் போது இது நோன்பை பாதிக்காது என எண்ணுவது அறியாமையின் உச்சகட்டமாக உள்ளது
இன்னும் சிலர் கேரம், சீட்டு, செஸ் போன்ற விஷயங்களில் நேரத்தைக் வீணாகக் கழிப்பதைப் பார்க்கிறோம்.
ஆக நமக்குக் கிடைத்த பாக்கியமான ரமளான் மாத ஒவ்வொரு நொடிப் பொழுதையையும் எப்படி கழிக்க வேண்டுமோ அப்படி செலவிடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ரமளானின் சிறப்பு
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன்2:185)
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்பட வேண்டும்
(நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்2:184)
தீமையிலிருந்து விலாகாவிடின் ஏற்படும் விளைவு
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1903, 6057
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),, நூல்: புகாரி 1893, 1903
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),, நூல்: புகாரி 1893, 1903
நோன்பினால் மறுமையில் கிடைக்கும் நன்மைகள்
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1945
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894, 1904
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894, 1904
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)
உம்ரா செய்தால் ஹஜ் நன்மை
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)
சுவர்க்கத்தில் தனி வாசல்
“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
நன்மைகளை அதிகரிக்க
ரமளானை நல் அமல்கள் மூலம் அலங்கரித்திட பல தரப்பட்ட வழிகள் உள்ளன. நமது அன்றாட அலுவல்களைத் தவிர நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி சிந்தித்து செயல்பட்டால் நாமும் வெற்றி பெறுவோரில் இணையலாம் இன்ஷா அல்லாஹ்..
கடமையான தொழுகையை பள்ளிவாசலில் தொழுதல்
சுவனத்தில் மாளிகையை கட்ட உபரியாக சுன்னத்தான 12 ரக்அத்தை தொழ முயற்சித்தல்.
நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூறுதல்
நோன்பில் ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டு நம்மைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் ஃபித்ரா எனும் கட்டாய தர்மத்தை வழங்குதல்
லைத்துல் கத்ரில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இஃதிகாஃப் இருத்தல்.
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை இரவுத் தொழுகையை தொழ முயற்சித்தல்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 2157
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 2157
தீமைகளை குறைக்க
சினிமா, நாடகம், போன்ற நேரத்தை வீணடித்து நோன்பை பாழாக்கும் காரியங்களிலிருந்து விலகி இருத்தல்.
கிரிக்கெட், கேரம், செஸ், வீடியோ கேம்ஸ், சீட்டு போன்றவற்றை முற்றாக தவிர்த்தல்.
பயனற்ற பேச்சு, வீண் அரட்டை, புறம், அவதூறு பேசப்படும் சபைகளை புறக்கணித்தல்.
இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
கட்டுரை எழுத உதவிய தளங்கள் :
www.onlinepj.com ,www.tntj.net&www.frtj.net
அன்புடன்