Jul 25, 2011

லைலத்துல் கத்ரு இரவு, லைலத்துல் கத்ரின் அமல்கள்


லைலத்துல் கத்ரு இரவு

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது. மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
அல்குர்ஆன் 97:1-3

இந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று வரையறுத்து, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017, 2020

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அதை நான் மறந்து விட்டேன். எனவே அதை 27, 29, 25 ஆகிய நாட்களில் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 49, 2023, 6049

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக அது இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் அதற்காக முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசிப் பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2026

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2041

ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே அறிந்தோம். எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க அவர்கள் நாடிய போது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது.  
இது முந்தைய ஹதீஸின் தொடராகும்.
 
பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பதற்காகக் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது.

உடனே ஸைனப் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் மற்றும் சிலரும் அவ்வாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டுப் பார்த்த போது பல கூடாரங்கள் போட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? என்று கேட்டு விட்டுத் தமது கூடாரத்தைப் பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது. ரமளான் மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டு விட்டு ஷவ்வாலின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
 
இதுவும் இந்த ஹதீஸின் தொடராகும்.

இவர்கள் நன்மையை நாடுகிறார்களா? என்ற கேள்வியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து விட்டு, இஃதிகாஃபை விட்டதும் இவ்வாறு பரவலாகக் கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியையே காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரி விடுவேன். அவர்கள் தமது தலையை வீட்டுக்குள் நீட்டுவார்கள். மனிதனின் அவசியத் தேவைக்காக (மலஜலம் கழித்தல்) தவிர வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2029

இஃதிகாஃப் இருக்கும் போது தலை வாரிக் கொள்ளலாம்; மனைவியைத் தொடலாம் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஸபிய்யா (ரலி)
நூல்: புகாரி 2035, 2038, 3101, 3281

மனைவி பள்ளிக்கு வந்து இஃதிகாஃப் இருக்கும் கணவருடன் பேசலாம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த ஹதீஸிலிருந்து நபியவர்கள் பள்ளியை விட்டு வெளியே சென்று மனைவியை வீட்டில் விட்டு வந்தார்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. அவர்களின் வீடு பள்ளிவாசலுக்குள் புகுந்து செல்லும் விதமாகப் பள்ளியை ஒட்டி அமைந்திருந்தது. எனவே பள்ளியிலிருந்த படியே மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் என்றே விளங்க வேண்டும்.

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியைத் தீண்டாமலும், அணைக்காமலும் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 2115

இஃதிகாஃப் இருப்பவர்கள் இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.