நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
நோன்பு நோற்றவர் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.
இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம்
ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711
இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது சம்பந்தமாகத் தான் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. உண்பதன் மூலமும், பருகுவதன் மூலமும் நோன்பை முறித்தால் இவ்வாறு பரிகாரம் செய்யுமாறு ஹதீஸ்களில் கூறப் படவில்லை. ஆயினும் செய்கின்ற காரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். உடலுறவின் போது எவ்வாறு இறைவனது கட்டளை மீறப்படுகிறதோ அது போல் தான் உண்ணும் போதும் மீறப்படுகிறது. உடலுறவு எப்படி நோன்பை முறிக்குமோ அப்படித் தான் உண்பதும், பருகுவதும் நோன்பை முறிக்கும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் உடலுறவை விட உண்ணுதல் கடுமையான விஷயமாகும். ஏனெனில் சில சமயங்களில் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி உடலுறவு ஏற்பட சாத்தியம் உள்ளது. உண்ணுதல், பருகுதல் தன்னை மீறி ஏற்படக் கூடியதல்ல. எனவே உடலுறவு கொள்வதற்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் உண்பதற்குப் பரிகாரம் இல்லை என்ற கூற முடியாது. பரிகாரம் செய்து விடுவதே பேணுதலுக்குரிய வழியாகும். இந்த ஹதீஸில் உடலுறவில் ஈடுபட்ட கிராமவாசிக்குப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அவரது மனைவியைப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடவில்லை. எனவே நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும். மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த ஹதீஸில் மனைவி குறித்து ஏதும் கூறப்படாவிட்டாலும் இவர்களின் வாதம் சரியானதல்ல! திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சட்டங்கள் ஆண்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறப்பட்டுள்ளன. பெண்களுக்கு மட்டும் என்று பிரித்துக் கூறப்படாத எல்லாச் சட்டங்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
ஒருவர் வந்து தனது குற்றம் குறித்து முறையிட்டதால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது அவருக்கு மட்டுமுரியது என்று யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்தக் குற்றத்தை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது தான் சட்டம் என்று எடுத்துக் கொள்வோம். அவரது மனைவி விஷயமாகவும் இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் என்பது, குறிப்பிட்ட குற்றத்திற்குரியதே அன்றி குறிப்பிட்ட நபருக்குரியதல்ல! அவரிடம் கூறினால் அவர் போய் தனது மனைவியிடம் கூறாமல் இருக்க மாட்டார்.
மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் மனைவியின் செயல் குற்றமில்லை என்று ஆகிவிடும்.
மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் மனைவியின் செயல் குற்றமில்லை என்று ஆகிவிடும்.
பரிகாரம் செய்தவுடன் முறித்த நோன்பையும் களாச் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நேரடியாக இது குறித்து எந்த ஹதீஸ்களும் இல்லாததே இரு வேறு கருத்துக்கள் ஏற்படக் காரணமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களில் எது பேணுதலான முடிவோ அதையே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் விடுபட்ட ஒரு நோன்பையும் களாச் செய்து விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்.
நூலின் பெயர்: நோன்பு
ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன்
THANKS: http://mudunekade.blogspot.com