Aug 22, 2011

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு!!!

கண்ணியமும், மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)


லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. 

எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை.ஆனாலும், நம்மில் பலர் நின்று வணங்கவேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகை எனும் வணக்கமாகும். 

அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில், ருகூவில், பின்னர் நிலையில், ஸஜ்தாவில், இருப்பில் இப்படி 10 தடவையாக 4 ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை. 

இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள். மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும் ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும். ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்...

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை.மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி


லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆன் ஓதியும், திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். 
 
லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள்.
(நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

(அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ)

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

Thanks: www.tntj.net, www.frtj.net , & dubaitntj.blogspot.com