Aug 25, 2011

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்


ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

கட்டாயக் கடமை
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503.


ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் அளவு!
தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நப(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும்.

 இந்த அளவு அரிசி அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். தமது பராமரிப்பில் பத்துப்பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மத்தை வழங்கிட வேண்டும். 

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவை தான். 
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி

மேற்குறிப்பிட்ட ஹதீஸ் மூலம் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்பதனால், நம்முடைய உணவு எதுவாக இருக்கிறதோ அதையே வழங்க வேண்டும்.

ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509

பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்என்ற கருத்தே சரியானது.


ஃபித்ரா வேறு ஜகாத் வேறு

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ரமளான் ஜகாத்என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455
 
ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

Thanks: www.tntj.net, http://dubaitntj.blogspot.com, http://www.pdmtntj.net