Jun 20, 2012

ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?


கேள்வி
:
ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?

பதில்:
பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.

சிறு பாவங்களுக்குரிய பரிகராம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் வழிகாட்டினார்கள்

ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டு விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ் பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன எனும் 11:114 ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர் இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா) என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான் என்று பதிலளித்தார்கள்.
புகாரி (526)

ஒருவர் உளூச் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதால் அத்தொழுகை முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகிவிடும்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
பாவம் செய்துவிட்ட அடியான் அழகுற உளூச் செய்கிறார். பிறகு எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுகிறார். பிறகு அவர் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை.என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள் எனும் (3 : 135) வது வசனத்தை அதன் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள்.
நூல் : அபூதாவுத் (1300)

ஹும்ரான் பின் அபான் கூறுகிறார்
மதீனாவிலுள்ள) மகாயித் எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக உளூச் செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக உளூச் செய்யக் கண்டேன் என்று கூறிவிட்டு யார் இதைப் போன்று (முழுமையாக) உளூச் செய்து பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி)விடாதீர்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
புகாரி (6433)

ஐந்து நேரத் தொழுகைகள்
ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு ஒருவர் விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 344

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் நம்பிக்கை கொண்டு நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 38

மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம் ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும்.அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:271)

இப்படி பாவங்களுக்குப் பரிகாரங்கள் பல உண்டு. அவற்றைச் செய்வதன் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். ஆனால் இப்படி பரிகாரம் உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டு பாவத்தைச் செய்து விட்டு அவ்வப்போது பரிகாரம் செய்யலாம் என்று நினைத்து விடக் கூடாது. இந்தப் பரிகாரங்கள் யாவும் திருந்துகின்ற மக்களுக்கு உரியதாகும். நாம் பாவம் செய்து விட்டோம்; இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்று முடிவு செய்பவரே திருந்தியவர் ஆவார்..

(Arabic text not uploaded from the source)
Source : www.onlinepj.com