கேள்வி:
அந்நிய முதலீட்டிற்கான அனுமதி அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பற்றி நாம் எந்த முடிவை எடுப்பது?
மசூது, கடையநல்லூர்.
பதில்:
அந்நிய முதலீட்டிற்கு நமது நாட்டில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலும் அந்நிய முதலீட்டிற்கான அளவு 51 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் பிரதமர் அமெரிக்காவின் ஆள் என்பதை நரசிம்மராவ் காலத்திலிருந்தே நாம் பதிவு செய்துவருகிறோம். அவர் இந்தியாவின் நலனைவிட அமெரிக்காவின் நலனைத்தான் நாடுவார். அவர் ஓர் அமெரிக்க அடிமை என்பதில் நாம் உறுதியான கருத்தில் இருக்கிறோம்.
நமது நாட்டில் ஒருவர் அமைச்சராக வேண்டுமானால் அவர் ஆளும் கட்சியில் செயல்பட்டு அரசியல், அனுபவம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருவர் இந்தியாவில் அமைச்சராக முடியாது. ஆனால் மன்மோகன்சிங் அரசியல்வாதி அல்ல. மாறாக அமெரிக்காவில் உள்ள அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கியில் பணிபுரிந்தவர் அவர்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அரசாங்கம் 1993 ஆம் ஆண்டு அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து,
மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக நியமிக்கச் செய்தது. இல்லாவிட்டால் நாட்டுமக்களில் எவருக்குமே தெரியாத ஒருவர் திடீரென்று இந்தியாவின் நிதியமைச்சராக முடியுமா?
அன்று முதல் அமெரிக்காவிற்குத் தொண்டு புரிவது என்ற அடிப்படையில் மட்டுமே நிதியமைச்சகம் செயல்படலாயிற்று.
நாட்டில் எந்தப் பொருளாதாரத் திட்டம் என்றாலும்,
அது அமெரிக்காவிற்கு எந்தவகையில் உதவும் என்பதே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையாகிப் போனது.
சோனியா தலைமையில் காங்கிரஸ் வென்ற பின்னர் பிரணாப் முகர்ஜி மற்றும் அர்ஜுன்சிங் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமராவார்கள் - இல்லாவிட்டால், ராகுல் பிரமதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் ஆதரவு பெற்ற(?) மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார் என்றால் அது அமெரிக்கா எஜமானரின் உத்தரவுப்படிதான் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்.
பொருளாதாரம் தவிர வேறு எந்தத் துறையிலும் அனுபவம் இல்லாத ஒருவர் பிரதமராக ஆக்கப்பட இதைத் தவிர எந்தக் காரணமும் இல்லை. நரசிம்மராவ் அமெரிக்காவின் நலனுக்கு பாடுபட்டார் என்றால் பிறப்பால் இத்தாலியரான சோனியாவுக்கு அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது ஒரு பிரச்சினையே இல்லை.
இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், அனைத்துமே உலகை அடக்கியாளும் பாசிச சக்திகள் என்ற ஒற்றுமை இருப்பதை உலகம் அறியும்.
எவ்வளவு பெரிய போராட்டம் என்றாலும் மன்மோகன் அசைந்து கொடுக்காமல் இருந்தால், மேட்டர் அமெரிக்கா சம்மந்தப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.
மன்மோகன் பிரதமரான பின் தனது அமைச்சரவையில் சசிதரூர் என்பவருக்கு முக்கிய இலாக்காவை வழங்கினார். இவர் யார் என்றே இந்தியாவில் ஒருவருக்கும் தெரியாது. மன்மோகனைப் போலவே அமெரிக்காவில் பணிபுரிந்தவர் என்பதைத் தவிர இதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. எப்படியாவது அமெரிக்காவுக்கு நலன் செய்ய வேண்டும் என்பதைத் தவிர இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க ஒரு முகாந்திரமும் இருக்கவில்லை. பெண் மேட்டரில் மாட்டிக் கொண்டதால் அவர் பதவி பறி போய்விட்டது. இல்லாவிட்டால் மன்மோகனுக்கு அடுத்த இடம் இவருக்கு அளிக்கப்படிருக்கும். மன்மோகன் சிங்கின் எல்லா நடவடிக்கையிலும் அமெரிக்க நலன் இல்லாமல் இருக்காது.
அந்நிய முதலீடு நல்லதா கெட்டதா என இரு தரப்பிலும் காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. பொதுவாக அந்நிய முதலீடு நல்லது என்று வைத்துக் கொண்டால் கூட இதை நாம் ஆதரிக்க முடியாது. ஏனெனில் இத்திட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்காக கொண்டுவரப்பட உள்ளதால் பாதிப்புகள்தான் அதிகம்.
இந்தியச் சட்டங்கள் எங்களைக் கட்டுப்படுத்தாது என்ற கொள்கையைக் கொண்டது அமெரிக்கா. யூனியன்கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் போபாலில் மக்கள் செத்து மடிந்தபோது அமெரிக்கா தனது திமிர்த்தனத்தைக் காட்டியது நினைவிருக்கலாம். இன்றுவரை அதற்கு நியாயம் கிடைக்காமல் போபால் மக்கள் போராடிக் கொண்டு உள்ளனர். எங்களை இந்தியச் சட்டம் கட்டுப்படுத்தாது என்று கூறி இந்திய மக்களின் உயிரை துச்சமாக மதித்து தனது அமெரிக்க புத்தியை யூனியன் கார்பைடு காட்டியது.
அமெரிக்காவின் தர
நிர்ணயத்திற்கு உட்படாத பொருட்களையெல்லாம், நமது நாட்டு மக்கள் தலையில் அமெரிக்கா கட்டிவிட்டு நமது உயிருடன் விளையாடும். அதனால் பாதிப்பு ஏற்பட்டால் எங்களை அமெரிக்க நீதிமன்றம்தான் விசாரிக்கும் என அந்நிறுவனங்கள் கூறும். அதை மானம் கெட்ட மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும். இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அந்நிய முதலீட்டால் எவ்வளவு நன்மை ஏற்பட்டாலும் நாம் கட்டாயம் ஆதரிக்க முடியாது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த பாசுமதி அரிசியில் இரசாயனம் உள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது நாட்டு மக்களுக்கு மட்டும் தரம்பார்த்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு கேடுகெட்ட பொருட்களைத்தான் வினியோகம் செய்யும். அதை நமது அமெரிக்க அடிமை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.
அமெரிக்காவின் பெப்ஸி கோகோகோலா நிறுவனங்களின் பூச்சி மருந்து குளிர்பானங்கள் நமது நாட்டில் தங்கு தடையில்லாமல் நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருவதே இதற்கு போதுமான உதாரணமாகும்.
டங்கல் திட்டம் போலவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் சந்தேகம்
இல்லை.
Thanks:www.onlinepj.com