அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர்
- 3
எம். ஷம்சுல்லுஹா
உங்களில் ஒரு தலைவர், எங்களில் ஒரு தலைவர் என்று அன்சாரித் தோழர்
ஒருவர் கூறியதும் ஏற்பட்ட வாதப் போர், வாட்போராகும் அளவுக்கு வடிவெடுத்தது.
சகீபா பனூ ஸாயிதாவில் நடந்த விவாதத்தின் போது, பத்ரு ஸஹாபியான ஹப்பாப் அல் முன்திர் (ரலி), எங்களில் ஒரு தலைவர், உங்களில் ஒரு தலைவரைத் தேர்வு செய்வோம்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த ஆட்சியதிகார விஷயத்தில் உங்கள் மீது நாங்கள் பொறாமை
கொள்ளவில்லை. எனினும் நாம் எவர்களது தந்தையர்களையும்,சகோதரர்களையும் எதிர்த்துப் போரிட்டோமோ அவர்கள்
இந்த ஆட்சியதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்றே அஞ்சுகின்றோம் என்று சொன்னார்.
அதற்கு உமர் (ரலி) அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதைக் கண்டு சாக வேண்டியது தான்
என்று சொன்னார். இவ்வேளையில் அபூபக்ர் (ரலி) குறுக்கிட்டு நாங்கள் தலைவர்கள்!
நீங்கள் அமைச்சர்கள்! இந்த அதிகாரம் நமக்கு மத்தியில் உள்ளது என்று
குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : காஸிம் பின் ஸஅத்,
நூல் : தபகாத்துல் குப்ரா
"நாம் முஹாஜிர்களில் ஒருவரைத் தேர்வு செய்வோம். அவர் இறந்து
விடின் அன்சாரிகளில் ஒருவரைத் தேர்வு செய்வோம். அது போல் அன்சாரிகளில் ஒருவரைத்
தேர்வு செய்வோம். அவர் இறந்து விடின் முஹாஜிர்களில் ஒருவரைத் தேர்வு செய்வோம்.
இப்படியே தொடர்ந்து எப்போதும் இந்த நடைமுறையை மேற்கொள்வோம். குறைஷி தவறு செய்யும்
போது அன்சாரி அவரைச் சரி செய்யவும் அன்சாரி தவறு செய்யும் போது குறைஷி அவரைச் சரி
செய்யவும் இது வழிவகுக்கும்'' என்று அன்சாரிகள் கூறினர்.
அதற்கு உமர் (ரலி), "நமக்கு மாறுபட்டுச் செல்வோரை அல்லாஹ்வின் மீது
ஆணையாகக் கொல்வோம்'' என்று கூறினார்கள். அப்போது ஹப்பாப் பின்
அல்முன்திர் (முந்தைய ஹதீஸில் கூறப்பட்டதைக் கூறிவிட்டு) வேண்டுமாயின் நாங்களும்
போர் தொடுக்கத் தயார் என்று கூறினார். அப்போது வார்த்தைகள் தடித்துப் போய் போர்
வந்து விடும் என்ற சூழ்நிலை உருவானது.
நூல் : மூஸா பின் உகபா எழுதிய மகாஸி
போர்க்களங்கள்
இவ்வாறு வேகமாக வெப்ப அலைகளை வெளிப்படுத்திக்
கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகள் எகிறி, எதிர்வாதம் புரிய முடியாத அளவுக்கு இறைத்தூர் (ஸல்) அவர்கள்
தம் வாழ்நாளில் அளித்த ஓர் உயர் தகுதியை - அதே சமயம் ஒரு முன்மாதிரியை முன்
வைக்கின்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர்
(ரலி)யை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அபூபக்ர் (ரலி)யை முந்த உங்களில் எவரது மனம்
விரும்புகின்றது?'' என்று வினவினார். அதற்கு அன்சாரிகள், "நாங்கள் அபூபக்ர் (ரலி)யை முந்துவதை விட்டும்
அல்லாஹ் எங்களை காப்பானாக!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : நஸயீ, அஹ்மத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(போர்த்தளபதியாக) உங்களில் ஒருவரை நியமிக்கும் போது எங்களில் ஒருவரையும் இணைத்துக்
கொள்வார்கள். எனவே இந்த அடிப்படையில் இப்போதும் வாக்களியுங்கள் என்று அன்சாரிகளின்
பேச்சாளர் கூறினார். அப்போது ஸைத் பின் ஸாபித் (ரலி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹாஜிர்களில்
உள்ளவர்கள். எனவே இமாம் முஹாஜிர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப் படவேண்டும். நாம்
அல்லாஹ்வின் தூதருடைய உதவியாளர்களாக இருந்தது போல் அல்லாஹ்வின் உதவியாளர்களாக
ஆவோம்'' என்று சொன்னார். உடனே அபூபக்ர் (ரலி) ஜஸாக்குமுல்லாஹு
ஹைரா (அல்லாஹ் உங்களுக்கு நன்மையை அளிப்பானாக) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),
நூல் : அஹ்மத்
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் இந்தக்
கருத்தும் அன்சாரிகளின் சூட்டைக் குறைத்து,சமாதானப்
பாட்டையை நோக்கி இன்னும் பல அங்குலங்கள் நகர வைத்தது.
முடிச்சவிழ்க்கும் முப்பெரும் சிறப்புக்கள்
எங்களில் ஒரு தலைவர் உங்களில் ஒரு தலைவர் என்று
அன்சாரிகள் கூறியதும் உமர் (ரலி),
"9:40 வசனத்தில் "அவ்விருவரும் குகையில் இருந்த
போது' என்பதில் அவ்விருவர் யார்? "தமது தோழரிடம் கூறிய போதும்' என்பதில் அந்தத் தோழர் யார்? "அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்' என்பதில் யாருடன்? இந்த மூன்று சிறப்புக்கள் யாருக்கு இருக்கின்றன? என்று கேட்டு அபூபக்ர் (ரலி)யின் கையைப்
பிடித்து அவரிடம் உடன்படிக்கை செய்தார்கள். மக்களும் உடன்படிக்கை செய்தனர்.
அறிவிப்பவர் : ஸாலிம் பின் உபைத்,
நூல் : முஸ்னது பஸ்ஸார்
உமர் (ரலி) அவர்களின் இந்த முத்துச்சுடர்க்
கருத்துகள், சிதறி சின்னாபின்னமாகிப் போகவிருந்த அந்தத்
தோழர்கள் கூட்டம் ஒன்றாக வழி வகுத்தது. இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர் இறந்த
பிறகு மேக மூட்டமாய், முழு இருளாய் இந்த சமுதாயத்தைக் கவ்விப்
பிடிக்கவிருந்த பிரிவு என்னும் சோதனையை விட்டும் காத்தது.
உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்து
பைஅத் - உடன்படிக்கை செய்ததும் அன்சாரிகளில் பஷீர் பின் ஸஅத் (ரலி), உஸைத் பின் ஹுழைர் (ரலி) ஆகியோர் பைஅத்
செய்தனர்.
கட்டவிழ்ந்து வரும் காட்டு வெள்ளமாய்த்
தோன்றவிருந்த பிரச்சனைகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டல்கள் மூலம் தடுக்கப்பட்டு அபூபக்ர் (ரலி)
ஆட்சித் தலைவராக - முதல் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப்
பின்னால் ஆட்சித் தலைவராகப் பதவியேற்கும் சரித்திரப் புகழ் வாய்ந்த இந்நிகழ்வு
சகீபா பனீ சாயிதாவில் நடந்தேறியது. இங்கு உமர் (ரலி) மற்றும் மேற்கண்ட
நபித்தோழர்களில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அபூபக்ர் (ரலி)க்கு வாக்களித்தனர்.
பொது மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. பொது மக்கள் வாக்களித்து,பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி எங்கே
எப்போது நடைபெற்றது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சிறு விளக்கத்தை இங்கே காண
வேண்டியது அவசியம்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் அன்சாரிகளுக்கு
மத்தியில் உரையாற்றும் போது,
"இந்த
ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் அறியப்பட்டு வருகின்றது'' என்று குறிப்பிடுவதை முன்னர் கண்டோம்.
இமாம்கள் - ஆட்சித் தலைவர்கள் குறைஷியைச்
சார்ந்தவர்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் இடம்
பெற்றுள்ளது. இதே கருத்து புகாரியில்3495லும், முஸ்லிமில் 3389லும்
கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள்
ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற கருத்தும் உள்ளது.
இந்த ஹதீஸ்களின் பொருள் என்ன? இஸ்லாம் குழி தோண்டிப் புதைத்த குலப் பெருமையை
- இன வெறியைத் தூக்கி நிறுத்தும் வகையில் இந்தச் செய்திகள் அமைந்துள்ளனவா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே
நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில்
(இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன் (அல்குர்ஆன் 49:13)
என்ற வசனத்தில் அல்லாஹ் கூறுகின்ற இஸ்லாமிய
அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தியை நாம் புரிந்து கொள்ளக் கூடாது.
"பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.
அப்போது நான் கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். "அவர்கள் அனைவரும்
குறைஷியர்களாக இருப்பார்கள்'' என்று (நபியவர்கள்) கூறியதாக என் தந்தை (சமுரா
- ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி),
நூல் : புகாரி 7222, 7223
தமக்குப் பிறகு குறைஷியரிலிருந்து பன்னிரண்டு
ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய
முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டே நபித்தோழர்கள் இப்படியொரு முடிவை
எட்டியிருக்கலாம் என்றே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இஸ்லாம்
தகர்த்தெறிந்த அறியாமைக் காலத் தத்துவத்தைத் தூக்கிப் பிடிப்பதாக ஆகிவிடும் என்பதை
நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில் அபூபக்ர் (ரலி) அவர்களை
எதிர்த்து நின்ற ஸஅத் பின் உப்பாதா (ரலி) ஷாம் நகரில் ஹவ்ரான் என்ற பகுதிக்குச்
சென்று விடுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) மரணிக்கின்ற வரை அவர்களிடம் ஸஅத் பின்
உப்பாதா (ரலி) வாக்களிப்பு செய்யவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த உமர் (ரலி)
யிடமும் வாக்களிக்கவில்லை. உமர் (ரலி) ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் அவர் உயிருடன்
இருக்கின்றார். மதீனாவுக்குத் திரும்பாமல் அங்கேயே மரணிக்கவும் செய்கின்றார் என்ற
குறிப்பு தஹ்தீபுல் கமால் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் கஸ்ரஜ்
அணியின் அன்றைய பெருந் தலைவர் ஆவார். அவர் ஸாயிதா கிளையார் என்று அழைக்கப்பட்டார்.
அவர் தமது வீட்டிலிருந்து கிளம்பி வரும் தருவாயில் தான் அபூபக்ர் (ரலி)யும் உமர்
(ரலி) அங்கு வந்து விட்டனர். எனவே இந்தத் தேர்தல் களம் முதல் கட்டமாக ஸகீபா பனூ
ஸாயிதாவில் நடைபெற்றது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சி சகீபா பனீ ஸாயிதா நாள் என்றும்
அழைக்கப் படலாயிற்று.
ஸஅத் பின் உப்பாதா (ரலி) தொடர்பாக அஹ்மதில்
இடம் பெறும் செய்தியைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணச்
செய்தியையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளையும் அறிவித்து விட்டு இதன்
அறிவிப்பாளர் தொடர்ந்து கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகிய இருவரும்
விரைந்து சென்று (சகீபா பனீ ஸாயிதாவில் இருந்த) அன்சாரிகளிடம் வந்தனர். அன்சாரிகள்
பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறியதையும்,அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறியதையும் எதையும் விடாது குறிப்பிட்டு அன்சாரிகளிடம்
பேசினார்கள். "மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் செல்லும் போது அன்சாரிகள் இன்னொரு
பள்ளத்தாக்கில் சென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கை நோக்கியே செல்வேன். ஸஅதே!
நீ உட்கார்ந்திருக்கும் போது தான் "குறைஷிகள் இந்த (ஆட்சி) விஷயத்தில்
தலைவர்கள் ஆவார்கள். மக்களில் நல்லவர்கள் குறைஷிகளில் நல்லவரைப் பின்பற்றுவார்கள்.
மக்களில் கெட்டவர்கள் குறைஷிகளில் கெட்டவர்களைப் பின்பற்றுவார்கள்'என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சொன்னார்கள் என்பதை நீ அறிந்திருக்கின்றாய்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள். உடனே ஸஅத் பின் உப்பாதா
(ரலி), "நீங்கள் உண்மையே சொன்னீர்கள். நாங்கள்
அமைச்சர்கள். நீங்கள் தலைவர்'' என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஹமீத் பின் அப்துர்ரஹ்மான் பின்
அவ்ஃப்
இந்த ஹதீஸை அறிவிக்கும் ஹமீத் பின்
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்பார் அபூபக்ர் (ரலி)யிடமிருந்து எதையும்
செவியுற்றதில்லை என அபூஜுர்ஆ குறிப்பிடுகின்றார். எனவே இது பலவீனமான
அறிவிப்பாகும்.
- வளரும் இன்ஷா அல்லாஹ்