Jul 27, 2015

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் – 4

அபூபக்ர் (ரலி) வரலாறு  தொடர் 4
பொதுத் தேர்தல்

எம். ஷம்சுல்லுஹா

சகீபா பனூ சாயிதாவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்யமாலிருந்த ஒரே நபித்தோழர் ஸஅத் பின் உப்பாதா (ரலி) தான். வேறு சிலர் பைஅத் செய்யாமல் தாமதித்தனர். அவர்கள் அலீ (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகியோர் ஆவர். ஆனால் அவர்கள் சகீபா பனூ சாயிதா சம்பவத்தன்று பைஅத் செய்தார்கள் என்ற செய்தியை பைஹகீயில் பார்க்கிறோம்.

அபூபக்ர் (ரலி) யின் கையைப் பிடித்து உமர் (ரலி), இதோ உங்கள் தோழர் என்று கூறி அவரிடம் வாக்களித்தனர். பிறகு அவர்களிடம் முஹாஜிர்கள், அன்சாரிகள் வாக்களித்தனர். இதன் பின் அபூபக்ர் (ரலி) மிம்பரில் ஏறினார்கள். மக்களின் முகங்களைப் பார்த்தார்கள். ஜுபைர் (ரலி) யைக் காணாததால் அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். ஜுபைர் (ரலி) வந்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அத்தை மகனும் அவர்களுடைய ஹவாரிய்யுமான நீங்கள் முஸ்லிம்களின் அதிகாரத்தை உடைக்கலாமா?” என்று அபூபக்ர் (ரலி) கேட்ட போது, “அல்லாஹ்வின் தூதருடைய கலீபாவே, எவ்வித பழிப்பும் இல்லைஎன்று கூறி எழுந்து அபூபக்ர் (ரலி) யிடம் வாக்களித்தனர். பிறகு அபூபக்ர் (ரலி) மக்களின் முகங்களைப் பார்த்தார்கள். அலீ (ரலி) யைக் காணவில்லை. அலீ (ரலி) யை அழைத்தார்கள். அலீ (ரலி) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் மகனும் அவர்களின் மருமகனுமான நீங்கள் முஸ்லிம்களின் அதிகாரத்தை உடைக்கலாமா?” என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதருடைய கலீபாவே, எவ்வித பழிப்பும் இல்லைஎன்று கூறி அவர்களிடம் வாக்களித்தனர் என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் செய்தி பைஹகீயில் இடம் பெறுகின்றது.

இந்த அறிவிப்பை இமாம் முஸ்லிம் நல்ல அறிவிப்பு என்று பாராட்டுகின்றார்கள். இங்கு அலீ (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோர் வாக்களித்ததை நாம் அறிய முடிகின்றது.

(புகாரி 4241 ஹதீஸில் அலீ (ரலி) அவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பைஅத் செய்ததாக இடம் பெற்றுள்ளது. இது குறித்து இன்ஷா அல்லாஹ் அந்தப் பகுதி வரும் போது விளக்கப்படும்.)

ஓர் இரவு, ஒரு பகல் கூட பதவியின் மீது நான் பேராசை கொண்டதில்லை. அதில் ஆர்வம் காட்டியதில்லை. இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நான் அதைக் கேட்டதில்லை. எனினும் குழப்பம் ஏற்பட்டு விடுவதைப் பயந்தேன். ஆட்சியின் போது எனக்கு அமைதி ஏது? என்னால் எள்ளளவும் இயலாத, அணுவளவுக்கும் ஆற்றல் இல்லாத மாபெரும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன். வல்ல அல்லாஹ்வின் வலிமையைக் கொண்டே தவிர இந்த மாபெரும் ஆட்சியை என்னால் நடத்த முடியாதுஎன்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.

உடனே அலீ (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோர், “ஆட்சி சம்பந்தமான ஆலோசனையில் எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதைத் தவிர வேறெந்த ஆத்திரமும் இல்லை. மக்களில் ஆட்சிப் பொறுப்பிற்கு மிக மிக அருகதை உள்ளவர் அபூபக்ர் (ரலி) தான். நிச்சயமாக அவர் குகைத் தோழர். அவருடைய அந்தஸ்தையும் அவர்களது மதிப்பையும் நாங்கள் அறிவோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது, அபூபக்ர் (ரலி) மக்களுக்குத் தொழுவிக்கும் படி கட்டளையிட்டார்கள்என்று கூறினார்கள். (பிதாயா வன்னிஹாயா)

பொதுத் தேர்தல்

சகீபா பனீ சாயிதாவில் சமுதாயத்தின் முன்னணித் தலைவர்கள், பெரும்புள்ளிகள் மட்டும் அபூபக்ர் (ரலி) க்கு வாக்களித்தனர். பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. எனவே பொது மக்கள் வாக்களிக்கும் வகையில் பொது வாக்களிப்பு நிகழ்ச்சி மஸ்ஜிதுந்நபவியில் நடைபெற்றது. இது பைஅத் ஆம்மா பொது வாக்குப் பிரமாணம்என்று குறிப்பிடப் படுகின்றது.

சகீபா பனீ சாயிதா பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த அதே நாளிலாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11ம் ஆண்டு, ரபீஉல் அவ்வல் பிறையில் ஒரு திங்கட்கிழமையன்று இறந்தார்கள். இந்த பைஅத் ஆம்மா நிகழ்ச்சி நடைபெற்ற நாள் செவ்வாய் கிழமை காலையாகும். (பிதாயா வன்னிஹாயா)

உமர் (ரலி) முன்னுரை

இந்தப் பொது வாக்களிப்பின் போது அபூபக்ர் (ரலி) மிம்பரில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது உமர் (ரலி) முன்னுரை ஆற்றுகின்றார்கள். அந்த முன்னுரையின் போது, நபி (ஸல்) அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்று தாம் குறிப்பிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் தொனியில்…..

மக்களே, உங்களிடையே ஒரு கருத்தை நான் தெரிவித்தேன். அந்தக் கருத்தை நான் குர்ஆனிலிருந்து பெறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் அதை நான் உங்களுக்கு மத்தியில் கூறவில்லைஎன்று கூறினார்கள். (பிதாயா வன்னிஹாயா)

பிறகு தொடர்ந்து, “நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள். அதுவரை உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். என்றாலும் மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைந்துள்ளான். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களில் மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்கள். என்வே அன்னாரிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுங்கள்என்று உமர் (ரலி) தமது உரையில் குறிப்பிட்டார்கள்.

(புகாரி 7219)

அபூபக்ர் (ரலி) ஏற்புரை

உமர் (ரலி) அவர்கள் உரையாற்றி விட்டு மக்களை நோக்கி, “மக்களே, எழுங்கள். அபூபக்ர் (ரலி) யிடம் வாக்களியுங்கள்என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) உரையாற்றத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தகுதிகளைக் குறிப்பிட்டு பாராட்டி புகழ்ந்து விட்டு…..

மக்களே, உங்களுக்கு ஆட்சி செய்யும் இந்தப் பொறுப்பை நான் வழங்கப் பட்டிருக்கின்றேன். உங்களில் நான் ஒன்றும் சிறந்தவன் கிடையாது. நான் நன்மை செய்தால் எனக்குத் துணை புரியுங்கள். நான் தவறிழைத்தால் என்னை சரிப் படுத்துங்கள். உண்மை ஓர் அமானிதம். பொய் ஒரு சதி மோசடி உங்களில் பலவீனமானவருக்குரிய உரிமையை அல்லாஹ் நாடினால் நான் அவருக்கு அளிக்கும் வரை அவர் என் மீது ஆதிக்கம் செலுத்தலாம். உங்களில் வலிமை மிக்கவர் அரசுக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாவிட்டால் அல்லாஹ் நாடினால் நான் அவரிடம் அதை வசூலிக்கும் வரை என்னைப் பொறுத்தவரை அவர் பலவீனமானவர் தான்.

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடுகின்ற சமுதாயத்தின் மீது அல்லாஹ் இழிவை அளிக்காது விடுவதில்லை. ஆபாசம் பரவிடும் சமுதாயத்தில் அல்லாஹ் சோதனையை பரவலாக்காமல் விடுவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் கட்டுப்படும் வரை எனக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. தொழுகைக்குத் தயாராகுங்கள். அல்லாஹ் அருள் செய்வானாக. (பிதாயா வன்னிஹாயா)


வளரும் இன்ஷா அல்லாஹ்

ஏகத்துவம் ஜூன் 2003