தொழுகை தொடர் – 5
பி. ஜைனுல் ஆபிதீன்
3. வாயையும்,
மூக்கையும் சுத்தம் செய்தல்
இரு கைகளையும் மணிக்கட்டு
வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம்
செய்ய வேண்டும்.
"ஒருவர் உளூச் செய்யும் போது மூக்குக்குள்
தண்ணீர் செலுத்தி சிந்தட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி),
நூல்
: புகாரி 161, 162
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல்
விளக்கம் அளித்த போது, "தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி
விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும்
சுத்தம் செய்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 160, 164)
இரு கைகளையும் கழுவிய
பின் அடுத்ததாக வாய் கொப்புளித்து, மூக்கைச் சுத்தம்
செய்ய வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
வாய்
கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக
இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில்
ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்தி
சுத்தம் செய்யலாம்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கற்றுத் தரும் போது, ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன்
மூலம் வாய் கொப்புளித்து மூக்கையும் சிந்தினார்கள் என்று கூறப்படுகின்றது.
(நூல்:புகாரி 140)
அப்துல்லாஹ் பின்
ஸைத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்று செய்து
காட்டும் போது, "ஒரு கை தண்ணீரால்
வாய் கொப்புளித்து மூக்கையும் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 191,
192)
ஒரு கை தண்ணீர் எடுக்கும்
போது வலது கையால் எடுக்க வேண்டும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும்
போது, "தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு
வாய் கொப்புளித்து, மூக்கையும் சிந்தினார்கள்'' என்று
கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 160, 164)
4. முகத்தைக் கழுவுதல்
இதன் பின்னர் முகத்தைக்
கழுவ வேண்டும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
விளக்கும் போது, "பின்னர் ஒரு கையில் தண்ணீர் எடுத்து
அதை மற்றொரு கையுடன் சேர்த்து இரு கைகளாலும் முகத்தைக் கழுவினார்கள்'' என்று
கூறப்படுகின்றது.
(நூல் : புகாரி 140)
இந்த ஹதீஸில் கூறப்படுவது
போல் ஒரு கையால் தண்ணீர் எடுத்து மற்றொரு கையுடன் அதைச் சேர்த்து இரண்டு கைகளாலும்
முகத்தைக் கழுவலாம். அல்லது ஒரு கையால் தண்ணீர் எடுத்து ஒரு கையாலும் கழுவலாம்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உளூச் செய்ததை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது,
""தமது ஒரு கையை (பாத்திரத்தில்)
விட்டு முகத்தைக் கழுவினார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 186,
192, 199)
எனவே இரண்டு கைகளாலும்
முகத்தைக் கழுவலாம். ஒரு கையாலும் முகத்தைக் கழுவலாம்.
தாடியைக் கோதிக் கழுவுதல்
நீண்ட தாடி வைத்திருப்போர்
முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
தாடியைக் கோதுவது
குறித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் ஒரேயொரு அறிவிப்பைத் தவிர மற்ற அனைத்தும் ஆதாரப்பூர்வமாக
இல்லை. திர்மிதியில் 29வது ஹதீஸாகப் பதிவு
செய்யப்பட்டுள்ள ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகத்தைக் கழுவும் போது தாடியைக்
கோதியதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.
5. இரு கைகளையும் முழங்கை
வரை கழுவுதல்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் செயல்
மூலம் விளக்கிய போது, முகத்தைக் கழுவிய பின் முழங்கை வரை
இரு கைகளையும் கழுவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 160, 164)
அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை
விளக்கும் போது முகத்தைக் கழுவிய பின் இரு கைகளையும் முழங்கை வரை கழுவியதாகக் கூறப்படுகின்றது.
(நூல் : புகாரி 185, 199)
முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்
முகத்தைக் கழுவும்
போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல்
அதையும் தாண்டி கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.
உடல் முழுவதும் கறுப்பாகவும்
முகம் மற்றும் நான்கு கால்கள் மட்டும் வெண்மையாகவும் உள்ள குதிரையை பஞ்ச கல்யாணி என்பார்கள்.
ஐந்து இடங்கள் பளீரென பிரகாசிப்பதால் இவ்வாறு குறிப்பிடுவர். இது போல் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் உளூச் செய்வதன் காரணமாக முகம், கைகள், கால்கள் ஆகியவை ஒளி வீசும் நிலையில் எழுப்பப்படுவார்கள். எனவே விரும்புபவர் இந்த
ஒளியை அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.
உளூச்
செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் பஞ்ச கல்யாணிகள் என்று அழைக்கப்படுவார்கள். யார்
தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி 136)
அபூஹுரைரா
(ர-) அவர்கள் உளூச் செய்ததை நான் பார்த்துள்ளேன். அப்போது அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அதை நிறைவாகக் கழுவினார்கள். பின்னர் வலது கையைக் கழுவினார்கள். முழங்கையைக் கடந்து
கழுவினார்கள். இவ்வாறே இடது கையையும் கழுவினார்கள். பின்னர் வலது காலை கரண்டையைக் கடந்து
கழுவினார்கள். இவ்வாறே இடது காலையும் கழுவினார்கள். பின்னர் இவ்வாறு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் உளூச் செய்ததை நான் பார்த்துள்ளேன் என்று கூறினார்கள். (சுருக்கம்)
நூல்
: முஸ்லிம் 362, 363
எனவே முகம்,
கை கால்களைக் கழுவும் போது
விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
6. தலைக்கு மஸஹ் செய்தல்
இரு கைகளையும் கழுவிய
பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.
அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தலைக்கு மஸஹ் செய்தார்கள்
என்பதை விளக்கும் போது, "தமது இரு கைகளாலும் தலையைத் தடவினார்கள்.
தலையின் முன் பாகத்தில் துவக்கி பிடரி வரை கைகளைக் கொண்டு சென்றார்கள். பின்னர் எங்கிருந்து
துவக்கினார்களோ அங்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு முன்னும் பின்னுமாகக் கொண்டு
சென்றார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
(நூல்:புகாரி 185)
இரண்டு
கைகளையும் தண்ணீரில் நனைத்து முன் தலையில் வைத்து பிடரி வரை தடவி, பின்னர்
பிடரியிலிருந்து முன் தலை வரை கைகளைக் கொண்டு வர வேண்டும்.
முன்புறத்தி-ருந்து
பின்புறமாகவும், பின்புறத்தி-ருந்து முன்புறமாகவும்
கைகளைக் கொண்டு சென்று மஸஹ் செய்ய வேண்டும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
(புகாரி 186, 191, 197, 199)
உளூச் செய்யும் போது
தலைக்கு மஸஹ் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (திருக்குர்ஆன் 5:6) எவ்வாறு மஸஹ் செய்ய வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் செயல் விளக்கம் தந்து விட்டனர். தலை முழுவதிலும் மஸஹ் செய்ய வேண்டும்.
அதுவும் முன்புறமிருந்து பின்புறமாகவும், பின்புறமிருந்து முன்புறமாகவும் மஸஹ் செய்ய வேண்டும். இரண்டு கைகளால் மஸஹ் செய்ய
வேண்டும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த செயல் விளக்கம்.
இந்தச் செயல் விளக்கத்தைக்
கண்டு கொள்ளாமல் ஷாஃபி, ஹனஃபி மத்ஹபினர் வேண்டாத
ஆராய்ச்சியில் இறங்கி மக்களின் வணக்கத்தைப் பாழாக்கி வருகின்றனர்.
தலையில் ஒரு முடியை
மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று இமாம் ஷாஃபி கூறுகின்றார். ஒரு விரலால்
ஒரு முடியைத் தொடுவது எப்படி தலையை மஸஹ் செய்ததாக ஆகும்? அவரது ஆதரவாளர்கள் என்ன தான் இலக்கண விதிகளைக் காட்டி
நியாயப்படுத்தினாலும் இது தவறு தான். எவ்வாறு மஸஹ் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பின் அதற்கு எதிராகக் கருத்து கூறுவது ஆராய்ச்சியாக இருக்க
முடியாது.
ஹனஃபி மத்ஹபுக்காரர்கள்
தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று கூறி அவர்களும் இது
போன்ற இலக்கண விதிகளைக் காட்டுகின்றனர்.
இவ்விரு கருத்துக்களாலும்
மக்கள் நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழியைப் புறக்கணிக்கும் நிலை உருவாகி விட்டது.
இத்தகைய ஆராய்ச்சிக்கு
எந்த அவசியமும் கிடையாது. ஒரு முடியில் ஒரு விரல் பட்டால் போதும் என்றால் அதை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியிருக்க வேண்டும். அல்லது சொல்லியிருக்க வேண்டும்.
தலையில் கால் பாகத்தில்
மஸஹ் செய்வது போதும் என்றால் அதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் காட்டித் தர
வேண்டும். இவ்விருவரின் கூற்றுக்கும் நபிகள் நாயகத்தின் சொல் விளக்கமோ செயல் விளக்கமோ
சான்றாக இல்லை.
"எவ்வாறு மஸஹ் செய்ய
வேண்டும் என்று எனது தூதர் கற்றுத் தந்த பின், அதற்கு மாற்றமாகச் செயல் பட்டது செல்லாது'
என்று இறைவன் கூறிவிட்டால்
அனைவரின் தொழுகையும் பாழாகிப் போய் விடும் என்பதை எண்ணி அஞ்ச வேண்டும்.
சில சமயங்களில் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் முன் நெற்றியில் மட்டும் மஸஹ் செய்ததாக சில அறிவிப்புக்கள் உள்ளன.
அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் ஆதாரமாக்கிக் காட்டுகின்றார்கள்.
தலைக்கு மஸஹ் செய்வதற்குப்
பதிலாக தலைப்பாகை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸஹ் செய்தார்கள். அப்போது தான்
முன் நெற்றியில் மஸஹ் செய்து விட்டுப் பின்னர் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தனர். இது
தலைப்பாகை அணிந்து அதன் மீது மஸஹ் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்காகும்.
தலைப்பாகை அணியாத போது செய்யும் மஸஹுக்கு இதை ஆதாரமாகக் காட்டக் கூடாது. (தலைப்பாகையில்
மஸஹ் செய்வது பற்றி பின்னர் விரிவாக விளக்கப்படும்)
எனவே ஷாஃபி,
ஹனஃபி உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்தவாறு மஸஹ் செய்து தமது வணக்கத்தைப் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
ஏற்கனவே கைகளைக் கழுவிய
ஈரம் உள்ளங் கையில் இருக்கும். அந்த ஈரத்தைக் கொண்டே தலைக்கு மஸஹ் செய்யலாமா?
அல்லது புதிதாகத் தண்ணீரில்
கையை நனைத்து, தலைக்கு மஸஹ் செய்ய
வேண்டுமா?
இரண்டு விதமாகவும்
செய்யலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
அரபி ???
முஸ்லிம் 347
கை
கழுவிய தண்ணீர் அல்லாத வேறு தண்ணீர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ்
செய்தார்கள்.
நூல்
: முஸ்லிம் 347
அரபி ???
அபூதாவூத்
111
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையில் மீதமிருந்த தண்ணீரால் தலைக்கு மஸஹ் செய்தார்கள்.
நூல் : அபூதாவூத்
111
எனவே புதிதாகத் தண்ணீரைத்
தொட்டும், ஏற்கனவே உள்ள ஈரத்தின்
மூலமும் தலைக்கு மஸஹ் செய்யலாம் என்பதற்கு இவ்விரு ஹதீஸ்களும் சான்றுகளாக உள்ளன.
காதுகளுக்கு மஸஹ்
செய்தல்
தலைக்கு மஸஹ் செய்யும்
போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்து நபிவழியாகும்.
....பின்னர் தமது தலைக்கும், காதுகளுக்கும்
நபிகள் நாயகம் (ஸல்) மஸஹ் செய்தார்கள். காதுகளின் வெளிப்புறத்தைக் கட்டை விரல்களாலும்
காதுகளின் உட்புறத்தை ஆட்காட்டி விரல்களாலும் மஸஹ் செய்தார்கள். (நூல் : நஸயீ 101)
பிடரிக்கு மஸஹ் செய்தல்?
ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள்
என்று கூறிக் கொள்வோர் பிடரியிலும் மஸஹ் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பிடரியில் மஸஹ் செய்ததாக ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீசும் இல்லை. இட்டுக் கட்டப்பட்டவையும்,
பலவீனமானவையும் தான் இதற்கு
ஆதாரமாக உள்ளன. ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட பொய்யான செய்தியை
ஆதாரமாகக் கொண்டே இதை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.
பிடரியில் மஸஹ் செய்வது
பற்றிக் காணப்படும் அறிவிப்புக்கள் பெரும்பாலும் இட்டுக் கட்டப்பட்டவைகளாகவும்,
சில அறிவிப்புக்கள் பலவீனமானவையாகவும்
உள்ளன. ஆதாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இது பற்றிக் காணப்படவில்லை.
எனவே பிடரியில் மஸஹ்
செய்வது பித்அத் ஆகும். இதைத் தவிர்க்க வேண்டும்.
7. இரண்டு கால்களையும்
கழுவுதல்
இதன் பின்னர் இரு
கால்களையும் கழுவ வேண்டும். முத-ல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை
விளக்கும் போது முதலில் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவியதாகக்
கூறப்படுகின்றது.
(நூல் : புகாரி 140)
கால்களைக் கரண்டை
வரை கழுவுவது அவசியமாகும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தனர் என்பதை உஸ்மான் (ரலி) விளக்கும் போது, இரு
கால்களையும் கரண்டை வரை கழுவியதாகக் கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 160)
அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி) அவர்களும் இவ்வாறே செயல் விளக்கம் அளித்துள்ளனர்.
(நூல் : புகாரி 186, 191)
ஆயினும் கரண்டையைக்
கடந்து மேலும் அதிகமாக்கிக் கொள்வது சிறப்புக்குரியது என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.
உளூச் செய்யும் போது
கடைப் பிடிக்க வேண்டிய காரியங்கள் இவை தாம். இதில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய கூடுதலான
சில விஷயங்களும் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
எத்தனை தடவை கழுவ
வேண்டும்?
உளூச் செய்யும் போது
மேற்கண்ட காரியங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும்?
தலைக்கு
மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவை செய்தாலும் அது நபிவழி
தான். இரண்டிரண்டு தடவை செய்தாலும் அது நபிவழி தான். மும்மூன்று தடவை செய்தாலும் அதுவும்
நபிவழி தான்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்துள்ளனர்.
(நூல் : புகாரி 157)
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவை கழுவி உளூச் செய்துள்ளனர்.
(நூல் : புகாரி 158)
உஸ்மான்
(ர-) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு
உளூச் செய்தார்கள் என்று செய்து காட்டிய போது,
தமது கைகளில்
மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு
(தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு
வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர்
இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
(நூல் : புகாரி 160, 164)
எனவே ஒவ்வொரு உறுப்பையும்
ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும்,
மூன்று தடவை கழுவுவதும் நபி
வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும்
ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.
ஒரு உளூவிலேயே கூட
நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு
உளூச் செய்தார்கள் என்பதை விளக்கும் போது, இரு கைகளையும் இரு தடவை கழுவினார்கள்.
பின்னர் மூன்று தடவை வாய் கொப்புளித்து, மூக்கையும் சிந்தினார்கள். பின்னர்
மூன்று தடவை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை இரண்டு தடவை
கழுவினார்கள். பின்னர் இரு கைகளால் தலைக்கு மஸஹ் செய்தார்கள். தலையின் முன்புறமிருந்து
பின்புறம் வரை கொண்டு சென்று மீண்டும் பின்புறத்தி-ருந்து முன்புறமாகக் கொண்டு வந்து
மஸஹ் செய்தார்கள். பின்னர் கால்களைக் கழுவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி 185, 186, 191, 197)
தலைக்கு எத்தனை தடவை
மஸஹ் செய்யலாம்?
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை விளக்கும் பல ஹதீஸ்களில் ஒவ்வொரு
உறுப்பையும் எத்தனை தடவை கழுவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களில் தலைக்கு
மஸஹ் செய்தது பற்றிக் கூறும் போது, "தலைக்கு மஸஹ் செய்தார்கள்'' என்று
மட்டுமே கூறப்படுகின்றது. எத்தனை தடவை என்று கூறப்படவில்லை.
(பார்க்க புகாரி 160, 164, 185, 186, 191, 197, 199, 1934)
மற்ற உறுப்புக்களை
மூன்று தடவையும் இரண்டு தடவையும் கழுவி உளூச் செய்யும் போது தலைக்கு ஒரு தடவை மஸஹ்
செய்தார்கள் என்று புகாரி 192வது ஹதீஸின் இறுதியில்
கூறப்பட்டுள்ளது.
அலீ
(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்று செய்து
காட்டிய போது, முகம், கைகளை
மூன்று தடவை கழுவி தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்து காட்டினார்கள் என்று கூறப்படுகின்றது.
(நூல் : திர்மிதி 45, நஸயீ
91, அபூதாவூத் 99, 100, அஹ்மத் 1078)
இன்னும் பல அறிவிப்புக்களில்
தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மூன்று தடவை தலைக்கு மஸஹ் செய்ததாக பல அறிவிப்புக்கள் உள்ளன. அவை அனைத்துமே
பலவீனமாவையாகவும் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கப்பட்டவையாகவும் உள்ளன.
அபூதாவூதின் 92வது ஹதீஸிலும் மற்றும் சில நூல்களிலும் உஸ்மான்
(ரலி) அவர்கள் மூன்று தடவை மஸஹ் செய்தார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு
தான் செய்தார்கள் என்றும் ஒரு அறிவிப்பு உள்ளது.
இது குறித்த அறிவிப்புக்களில்
இந்த ஹதீஸ் தான் குறைந்த அளவு விமர்சிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான
அப்துர்ரஹ்மான் பின் வர்தான் என்பவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ மட்டும் கூறுகின்றார்.
மற்றவர்கள் இவர் குறை சொல்ல முடியாதவர் என்று கூறுகின்றனர். அது போல் ஹும்ரான் என்ற
அறிவிப்பாளரை புகாரி இமாம் பலவீனமானவர் என்கின்றார். மற்றவர்கள் நம்பகமானவர் என்கின்றனர்.
இப்படி மாறுபட்ட விமர்சனங்கள் இதில் உள்ளன. மூன்று தடவை மஸஹ் செய்வது குறித்த மற்ற
ஹதீஸ்களை பலவீனமானவை என்று ஏக மனதாகக் கூறுகின்றனர்.
எனவே ஒரு தடவை மஸஹ்
செய்வது பற்றிக் கூறும் ஹதீஸ்களில் எவ்வித விமர்சனமும் செய்யப்படாத பல அறிவிப்புக்கள்
உள்ளன. மூன்று தடவை மஸஹ் செய்வது பற்றிய ஹதீஸ்கள் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன. எனவே
ஒரு தடவை மஸஹ் செய்வதே சிறந்ததாகும்.
வரிசையாகச் செய்தல்
மேற்கூறப்பட்ட காரியங்களை
மேற்கூறப்பட்ட வரிசைப் படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப் படி தான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
வரிசைக் கிரமமாக செய்யத்
தேவையில்லை, நமது விருப்பம் போல்
முன் பின்னாக மாற்றிச் செய்து கொள்ளலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். பின் வரும் ஹதீஸை
ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். முகத்தை மூன்று தடவை
கழுவினார்கள். ஒரு தடவை வாய் கொப்புளித்து, மூக்கைச் சிந்தினார்கள். இரு கைகளையும்
மூன்று தடவை கழுவினார்கள். தலைக்கு இரு தடவை மஸஹ் செய்தார்கள். தலையின் பின்புறத்திலும், பின்னர்
தலையின் முன்புறத்திலும், காதுகளிலும் மஸஹ் செய்தார்கள். கால்களை
மும்மூன்று தடவை கழுவினார்கள்.
(நூல் : அபூதாவூத் 108)
இதே
ஹதீஸ் தாரகுத்னீயில் முகத்தைக் கழுவி விட்டு பின்னர் மூன்று தடவை வாய் கொப்புளித்தார்கள்.
பின்னர் மூக்கைச் சிந்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
(பார்க்க தாரகுத்னீ 1/96)
முகத்தைக் கழுவிய
பின் வாய் கொப்புளித்ததாக வருவதால் வரிசைக் கிரமம் அவசியம் இல்லை என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளராக அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் என்பார் இடம்
பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் குறைவு காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர்
என்று முடிவு செய்துள்ளனர். எனவே வரிசைக் கிரமமாகச் செய்ய வேண்டியதில்லை என்ற வாதம்
தவறாகும்.
கவனமாகச் செய்தல்
உளூச் செய்யும் போது
கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் சரியாகக் கழுவப்பட்டுள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.
கழுவப்பட வேண்டிய உறுப்புக்களில் சிறிதளவும் கழுவப்படாமல் விடக் கூடாது.
நாங்கள்
உளூச் செய்தோம். எங்கள் கால்கள் மீது ஈரக் கையால் தடவினோம். அப்போது நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் (ஈரம் படாத) குதிகால்களுக்கு நரகம் தான் என்று உரத்த குரலில் இரண்டு
அல்லது மூன்று தடவை கூறினார்கள்.
(நூல் : புகாரி 60, 96, 163)
ஒரு
மனிதர் உளூச் செய்த போது அவரது பாதத்தில் ஒரு நகம் அளவு இடத்தைக் கழுவாது விட்டு விட்டார்.
அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"திரும்பிச்
சென்று அழகிய முறையில் உளூச் செய்வீராக'' என்றார்கள்.
(நூல் : முஸ்லிம் 359)
தண்ணீரை சிக்கனமாகப்
பயன்படுத்துதல்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகள் நிறையும் அளவுள்ள தண்ணீரில் உளூச் செய்பவர்களாக இருந்தனர்.
(நூல்: புகாரி 201)
உளூச் செய்யும் போது
தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்துவதை இன்றைய முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு
உறுப்பைக் கழுவுவதற்கும் இரு கைகள் நிறைய தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்
ஒரு உறுப்பை ஒரு தடவை கழுவுவதற்கு நாம் பயன்படுத்தும் தண்ணீரில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உளூச் செய்து முடித்துள்ளனர்.
எனவே ஒரு கையில் சிறிதளவு
தண்ணீர் எடுத்து உளூச் செய்வதே முறையாகும். நிலத்தடி நீர் குறைந்து வரும் கால கட்டத்தில்
இது மிகவும் அவசியமாகும். மேலும் பள்ளிவாசல் செலவில் உளூச் செய்யும் போது பள்ளிவாசலுக்கு
ஆகும் செலவும் இதனால் மிச்சமாகும்.
குழாய் மூலம் உளூச்
செய்யும் போது குழாயைத் திறந்து விட்டுக் கொண்டே உளூச் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கெல்லாம் மறுமையில் விசாரணை உண்டு என்பது பற்றி நாம் அஞ்ச வேண்டும்.
மூன்று தடவைக்கு மேல்
கழுவக் கூடாது
அதிகப்பட்சமாக மூன்று
தடவை கழுவலாம் என்பதை முன்பே அறிந்தோம்.
மூன்று தடவைக்கு மேல்
அதிகமாகக் கழுவுவதற்குக் கடுமையான தடை உள்ளது.
ஒரு
கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். அவருக்கு
மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டினார்கள். பின்னர், "இப்படித்
தான் உளூச் செய்ய வேண்டும். யார் இதை விட அதிகமாகச் செய்கின்றாரோ அவர் தீங்கிழைத்து
விட்டார். வரம்பு மீறி விட்டார். அநியாயம் செய்து விட்டார்'' என்று
கூறினார்கள்.
(நூல் : நஸயீ 140)
எனவே உளூச் செய்யும்
போது மூன்று தடவைக்கு மேல் அதிகமாகக் கழுவுவது கூடாது.
– வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் ஜூலை 2003