முரண்பாடுகள் தோன்றியது எப்படி?
எம்.ஐ. சுலைமான்
1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை
தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள்.
இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது
வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித
வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச்
சென்றார்கள்.
அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ
வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள். அந்த அன்புத் தோழர்களின்
அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பரவி
உள்ளனர்.
இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இருந்தாலும்
அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில்
செயல்படுகின்றனர்.
இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய
புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால் முஸ்-ம்களில்
ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள்
செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன்
நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக
இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை
நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும்
வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக
அல்லாஹ்விடமும், அவனது
தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும்.
அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24:51,52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது
நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல்
இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு
விட்டார்.
(அல்குர்ஆன் 33:36)
"மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச்
செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற
மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை'' என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய
பேருரையில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : ஹாகிம் (318)
"என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க
மறுத்தவரைத் தவிர''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின்
தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?''என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார்.
எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (7280)
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை
(மார்க்கக் கடமையெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (3243)
"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும்
பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு
வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : நஸயீ (1560)
இவ்வாறு திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும்
குர்ஆன் ஹதீஸை மட்டும் அடிப்படையாக வைத்து வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாகக்
கட்டளையிடுகின்றன. ஆனால் மக்கள் இஷ்டப்படி தங்கள் மார்க்கக் கடமைகளைப் பலவிதமாக
அமைத்துக் கொண்டு இவ்வாறு பல பிரிவுகளாக மாறியதற்குக் காரணம் என்ன?
இக்கேள்விக்குப் பவலவிதமான பதில்களைக் கூறலாம்.
அதில் முக்கியமான காரணம்,முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் மார்க்கத்தின்
அளவுகோலாக எடுத்துக் கொண்டது தான்.
இவ்வாறு முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும்
முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதால் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உண்டாயின. ஆனால் சில
பிரிவினர் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு நபிமொழிகளையும் திருக்குர்ஆன்
வசனங்களையும் ஆதாரம் காட்டுகின்றர்.
முரண்பட்ட கொள்கைகளுக்கும் மாறுபட்ட
சட்டங்களுக்கும் நபிமொழிகளில் ஆதாரம் இருக்குமா? என்ற நியாயமான கேள்வி எழலாம். இருக்காது என்று நாம்
கூறினாலும் மாறுபட்ட சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் சில நபிமொழிகளை ஆதாரம் காட்டத்
தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகின்றது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ஒரு
சட்டத்தைக் கூறியிருப்பார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களாலேயே அது
மாற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் மாற்றப்பட்ட செய்தியை அறியாதவர் நபி (ஸல்)
அவர்களின் முந்தைய காலச் சட்டத்தை அறிவிப்பார். சிலர் இதை மட்டும் வைத்து சட்டம்
சொல்லி விடுவர்.
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம்
உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு
கடமையாகுமா?'' என்று கேட்டேன். அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட
இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), நூல் : புகாரி (293)
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா
விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட
கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (526), திர்மிதீ (102)
இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில்
கொள்ளாதவர்கள் ஆரம்ப காலச் சட்டத்தைக் கூறி அதற்குரிய சான்றை மட்டும் கூறுவதால்
மாறுபட்ட சட்டத்திற்கு நபிமொழியில் ஆதாரம் இருப்பதைப் போன்று தோற்றம்
ஏற்படுகின்றது.
இதைப் போன்று நெருப்பால் சமைக்கப்பட்ட
உணவுகளைச் சாப்பிட்டவரின் உளூ முறியுமா?அல்லது முறியாதா? என்பதிலும் இரண்டு கருத்துக்கள் இரண்டு நபிமொழிகளை
எடுத்துரைத்து ஆதாரம் காட்டுகின்றன.
"நெருப்பு தீண்டியவற்றில் உளூச் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : முஸ்லிம் (527, 529), இப்னுமாஜா (478), அஹ்மத் (23439)
நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்ட போது
நானும் அவர்களுடன் சென்றேன். அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில்
அவர்கள் நுழைந்தார்கள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து
விருந்து படைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். பேரீச்சம்பழங்கள்
நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார். அதையும் சாப்பிட்டார்கள். பின்னர்
லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதார்கள். பின்பு (மீதமிருந்த) இறைச்சியில்
சிறிதளவை அந்தப் பெண் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்ட பின் உளூச்
செய்யாமல் அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : திர்மிதீ (75), அபூதாவூத் 163), அஹ்மத் (13931)
இந்த இரண்டு செய்திகளில் ஒருவர் ஒரு
செய்தியையும் மற்றொருவர் இன்னொரு செய்தியையும் வைத்து சட்டம் சொல்லியுள்ளனர். ஆனால்
பின்வரும் செய்தியை கவனிக்கத் தவறி விட்டனர்.
"இரண்டு விஷயங்களில் நெருப்பு தீண்டியவைகளில் உளூச்
செய்யாமல் இருப்பது தான் நபி (ஸல்) அவர்களின் கடைசியான செயலாகும்''
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : நஸயீ (185), இப்னு
ஹுஸைமா (43), இப்னு
ஹிப்பான் (1134)
ஒரே சட்டம் தொடர்பான சில ஹதீஸ்கள் ஆதாரப்
பூர்வமானவையாகவும் சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் இடம் பெற்றிருக்கும். சிலர்
தமது மத்ஹபை நிலைநாட்ட பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஸஹ்ல் பின் பைளா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)
அவர்கள் பள்ளிவாசலில் தான் (ஜனாஸா) தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (1615)
"யார் பள்ளியில் மய்யித்திற்குத் தொழுவிப்பாரோ அவருக்கு எந்த
ஒன்றும் கிடையாது''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (2776), இப்னுமாஜா (1506), அஹ்மத் (9353)
இந்த செய்தி பலவீனமானதாகும். இதில் இடம்
பெற்றுள்ள ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால்
விமர்சிக்கப்பட்டவர்.
ஆதாரப்பூர்வமான செய்தியை எடுத்துக் கொள்ளாமல்
பலவீனமான செய்திகளை எடுப்பதால் சட்டத்தில் இரு வேறுபட்ட வடிவங்கள் தெரிகின்றன.
திருக்குர்ஆன் நபிமொழியின் அடிப்படையில் தான்
சட்டங்களை வகுக்க வேண்டுமென்ற நிலையிலிருந்து இறங்கி, நபித்தோழர்களின் கூற்றுக்களையும் ஏற்றுக்
கொள்வதால் முரண்பட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி)
அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு
காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி)
அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு
விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால்
(என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (2689)
முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்)
அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னர்
சிலர், உமர் (ரலி) அவர்களின் சட்டத்தின் அடிப்படையில்
முத்தலாக் என்று கூறினாலும் மூன்று தலாக்காகவே எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.
நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களிடமும்
தவறுகள் ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம்
பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதைக் கவனித்து செயல்பட்டுள்ளனர்.
நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்
(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும்
தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய
சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்,
நூல் : புகாரி (1563)
அன்றைய ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் (ரலி)
அவர்கள், தமத்துஉ என்ற ஹஜ் செய்யக் கூடாது என்று கூறிய
போது, "நபி (ஸல்) அவர்கள் செய்த செயலை எந்த மனிதரின்
சொல்லிற்காகவும் விட மாட்டேன்' என்று கூறி நபி (ஸல்) அவர்களின் கூற்றே முதன்மையானது, பின்பற்ற ஏற்றது என்பதை அலீ (ரலி)
தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக்
களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த
அம்மனிதர், "உங்கள்
தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!''என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி
(ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப்
பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற
வேண்டும்''என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்''என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸாலிம்,
நூல் : திர்மிதீ (753)
அன்றைய ஜனாதிபதியும் தமது தந்தையுமான உமர்
(ரலி) அவர்களின் கூற்றை இப்னு உமர் (ரலி) புறக்கணித்ததிலிருந்து நபித்தோழர்களின்
கூற்று ஆதாரமாகாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இது போன்ற காரணத்துக்காகத் தான் இஸ்லாமிய
சட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் காண்கின்றோம். இந்நிலையில் உண்மையில் நாம்
பின்பற்ற வேண்டிய நபிமொழிகள் எவை?என்பதைத் தெளிவாக அறிவதற்காகத் தான் இந்தப் பகுதி ஆரம்பம்
செய்யப்படுகின்றது.
இத்தொடரில் நம்மிடம் மாறுபட்ட கருத்துள்ள
சட்டங்களின் ஹதீஸ்களை எடுத்துரைத்து அதில் சரியான கருத்து என்னவென்பதை இன்ஷா
அல்லாஹ் தெளிவுபடுத்துவோம்.
மேலும் அந்த ஹதீஸ்களின் அரபி மூலத்தையும்
வெளியிட்டு தெளிவு படுத்துவோம். இதனால் சரியான சட்டங்களை அறிந்து நாம் செயல்படுத்த
மிக உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
ஏகத்துவம் மார்ச் 2003