Jul 23, 2015

நமது பொறுப்பு அதிகமாகின்றது

நமது பொறுப்பு அதிகமாகின்றது

மலரும் நினைவுகள்!
பீ,ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அண்ணனும், மார்க்க அறிஞருமான பீ.ஷேக் அலாவுத்தீன் அவர்கள் இளம் வயதில் மரணித்ததை ஆரம்ப காலக் கொள்கைச் சகோதரர்கள் அறிவார்கள். மிகச் சிறந்த வசீகரமான பேச்சாளராகவும், பீஜே அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். ஷேக் முரீது என்ற பித்தலாட்டத்தை எதிர்த்து வந்த அவர்கள் தனது பெயரில் கூட ஷேக் என்ற சொல் வேண்டாம் என்பதற்காக பீ. ஷேக் அலாவுதீன் என்பதை பீ. எஸ். அலாவுதீன் என்று மாற்றிக் கொண்டார்கள்.
பீஜே அவர்கள் அந்நஜாத் எனும் மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களில் பீ.எஸ். அலாவுத்தீன் அவர்கள் மரணித்த போது பீஜே அவர்கள் அந்நஜாத் மாத இதழில் எழுதிய தலையங்கத்தை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.

1986 மே, அந்நஜாத் தலையங்கம்...

பேரன்பு கொண்ட செயல் வீரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், ஓரிறைக் கொள்கையில் ஆழ்ந்த உறுதி கொண்ட நம் சகோதரர்களால் “பீஎஸ்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, எனது அண்ணன் P.S. அலாவுதீன் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து நமது பொறுப்பு அதிகமாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் முன்னே எடுத்து வைத்த கொள்கையில் கடைசி வரை “P.S.” அவர்கள் உறுதியாக நின்றார்கள். மரணத்தின் விளிம்பை அடைந்து விட்ட நேரத்தில் கூட, “மாயம் மந்திரங்கள்” மூலம் இந்த நோய் குணமாகும் என்றால் அல்லது தர்ஹாக்களில் சென்று தங்குவதால் இந்த நோய் குணமாகும் என்றால் என் நோய் குணமடைய வேணடாம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்கள்.
தர்ஹாக்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கண்டித்துப் பேசியதால் தான் அவர்களுக்கு நோய் வந்ததாகக் கதை கட்டினர் சிலர்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்பட பல நபிமார்களும், நல்லவர்களும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்” என்ற வரலாற்று உண்மை தெரியாதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள்.
“தர்ஹாக்களின் பெயரால் நடக்கும் தில்லுமுல்லுகளைச் சுட்டிக் காட்டியதால் தான் இந்தச் சின்ன வயதிலேயே மரணத்தை தழுவிக் கொண்டார்”என்று நாக்கில் நரம்பின்றி பேசுவோர் சிலர்.
நபிகள் நாயகத்தின் அருமை மகள்கள் பாத்திமா (ரழி) அவர்களும், ருகையா (ரழி) அவர்களும், நபிகளின் அன்பு மகன் இப்ராஹிம் (ரழி) அவர்களும் P.S.ஐ விட சின்ன வயதில் மரணமடைந்த வரலாறு நமக்கு நன்றாகத் தெரியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்துக்கு புறப்படும் வேளை, அவர்களின் அன்பு மகளார் ருகையா (ரழி) அவர்களின் உடல் நிலை, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது தனது மருமகன் உஸ்மான் (ரழி) அவர்களை தம் மகளின் அருகே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு போர்க்களம் சென்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
போர் அங்கே மும்முரமாக நடக்கும்போது, இங்கே அவர்களின் மகளார் (மிகவும் சின்ன வயதில்) மரணமடைந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில், மக்கத்துக் காபிர்களும், மதீனத்து யூதர்களும் சொன்ன அதே வார்த்தைகளைத்தான், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்போர் இன்றைக்கு சொல்கிறார்கள்.
நஜாத் என்ற திருப்பணியை நான் ஏற்ற நேரத்தில், அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில் எனது அண்ணனை அல்லாஹ் அழைத்துவிட்டான். அவனது முடிவு எதுவானாலும், அதனைப் பொருந்திக் கொள்வதுதூனே ஒரு மூமினுடைய பண்பாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற விமர்சனங்கள் எனது கொள்கையிலிருந்து எள்ளளவும், எள்ளின் முனையளவும் என்னை மாற்றிவிடாது. உலகத்து விளைவுகளை வைத்து மார்க்கத்தை முடிவு செய்கின்ற நிலமையில் நாம் இல்லை.
இந்த இதழில் இடம் பெற்றுள்ள P.S. அவர்கள் ஆற்றிய உரை இதனை நமக்கு நன்கு தெளிவுபடுத்தும்.
நான் காயல்பட்டிணத்தில் முபாஹலா செய்ததால் தான் இந்த இதய நோய் ஏற்பட்டது என்றும் கூட சிலர் பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுவர். P.S.அவர்கள் இரண்டு ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டார்கள். முபாஹலா நடந்து ஆறேழு மாதங்களே ஆகின்றன.
P.S. அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் நான் முபாஹலாவுக்குச் சென்றேன்.
அல்லாஹ்வினால் நமக்குத் தரப்பட்ட இந்த மார்க்கம் எவரையும் நம்பி இருக்கவில்லை.
அவன் யாரை வைத்து வேண்டுமானாலும் இந்த தீனுடைய வேலையை வாங்கிக் கொள்வான்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு கூட இந்த இஸ்லாம் அழிந்து விடவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற பணியினை நாம் தொடர்ந்து செய்வோம். இன்னும் வேகமாக, உறுதியாகச் செய்வோம். அந்த நெஞ்சுறுதியை அல்லாஹ் நமக்குத் தருவான்.
ஒரு P.S. மறைந்துவிட்டாலும், ஆயிரம் P.S.களை நாடெங்கும் உருவாக்கிச் சென்றுள்ளார்கள். P.S. அவர்கள் துவக்கி வைத்த திருக்குர்ஆன் விரிவுரை திறமை மிக்க அறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து நஜாத்தில் இடம் பெறும்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்
குறிப்பு : P.S. அவர்களின் மரணச் செய்தியை நான் எவருக்கும் தந்தி மூலமோ, தொலைபேசி மூலமோ தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.
Source : www.onlinepj.com