Jul 25, 2015

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 1

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 1

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை தொழுகை என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிவார்கள். ஆனால் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.

ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

எனவே சரியான தொழுகை முறை பற்றி தக்க சான்றுகளுடன் விளக்குவதற்காகவே தொழுகையின் சட்டங்கள் என்ற தொடர் ஏகத்துவம் இதழில் ஆரம்பமாகின்றது.

தொழுவது எப்படி என்பதை அறிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படையான விஷயங்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது.

தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித் தந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப் படுத்தி விட்டான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (3243)

எனவே நமது தொழுகை முறையும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் மட்டுமே அமைய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மேதைகள், இமாம்கள் கூறினாலும் அவற்றை நாம் நிராகரித்து விட வேண்டும்.

தமத்துஉ முறையில் ஹஜ் செய்வதை உமர் (ரலி) தடை செய்திருந்தார்கள். அப்போது அது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் தமத்துஉ முறையில் ஹஜ் செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்,

நூல் : திர்மிதீ (753)

உமர் (ரலி) அவர்கள் தமது தந்தையாக இருந்தும், ஜனாதிபதியாக இருந்தும், சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட பத்து நபர்களில் ஒருவராக இருந்தும், அவரது கருத்துக்கேற்ப சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வந்திருந்தும் அவர் கூறுவது நபிகள் நாயகம் (ஸல்) செய்த முறைக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்க முடியாது என்று அவரது மகன் பிரகடனம் செய்கின்றார்.

இது தான் உண்மை முஸ்லிம்களின் உணர்வாக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் நிலை இப்படித் தான் இருந்தது.

சிரியாவில் பிறை காணப்பட்டு ரமளான் நோன்பு நோற்ற செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறப்பட்ட போது, "நாங்கள் பிறை பார்க்க வேண்டும். அல்லது எங்களுக்கு முப்பது நாட்கள் முழுமையடைய வேண்டும். இப்படித் தான் எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டார்கள்'' என்று கூறி சிரியாவில் காணப்பட்ட பிறையை ஏற்க மறுத்து விட்டார்கள். அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த முஆவியா (ரலி) அவர்களின் நோன்பு அறிவிப்பை நிராகரித்து விட்டார்கள்.

(முஸ்லிம் 1819)

"உள்ளூரில் எவ்வாறு தொழுவது? அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழுவது என்பதை நாங்கள் குர்ஆனில் காண்கிறோம். ஆனால் பயணத்தில் எவ்வாறு தொழுவது என்பதைக் காணவில்லையே!'' என்று இப்னு உமரிடம் நான் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி), "என் சகோதரர் மகனே! நாங்கள் எதையுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் எங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். முஹம்மத் (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்யக் கண்டோமோ அவ்வாறே நாங்களும் செய்வோம்'' என்று விடையளித்தார்கள்.

(நஸயீ 1417)

நமது தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் தான் அமைய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்ற வணக்கங்களை விட தொழுகையைக் கற்றுக் கொடுப்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) தலைமையில் வெளியூர் இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர். அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விளைஞர்கள் திரும்பிச் செல்லும் போது, "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்'' எனக் கூறி அனுப்பினார்கள். (புகாரி லி 631, 6008, 7246)

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் மட்டும் தான் நமது தொழுகை அமைந்திருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது ஏறி நின்று தொழுது காட்டினார்கள். அதில் நின்றபடியே அதிலேயே ருகூவு செய்தார்கள். பின்னர் பின்வாங்கி நகர்ந்து அதன் அடித்தளத்தில் ஸஜ்தா செய்தனர். தொழுது முடித்ததும், "மக்களே! எனது தொழுகையை நீங்கள் அறிந்து பின்பற்றுவற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்றும் கூறினார்கள். (புகாரி - 917, 377)

தன்னைப் பின்பற்றி தன்னைப் போலவே மக்கள் தொழ வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு சிரத்தை எடுத்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றவர்கள் தொழுவதையும் உன்னிப்பாகக் கவனித்து திருத்திக் கொடுப்பதிலும் அவர்கள் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள்.

ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். "நீ தொழவே இல்லை. எனவே திரும்பிச் சென்று மீண்டும் தொழு!'' என்றார்கள். அவர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுது விட்டு வந்து ஸலாம் கூறினார். "நீ திரும்பிச் சென்று மீண்டும் தொழு! நீ தொழவே இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் கூறினார்கள். "உண்மையுடன் உங்களை அனுப்பியவன் மேல் ஆணையாக! இதைத் தவிர வேறு எப்படித் தொழுவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற விபரம் புகாரி 757, 973, 6251, 6667 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமும் கற்றுக் கொடுத்து, மற்றவர்களின் தொழுகை முறையையும் கவனித்து நபிகள் நாயகம் (ஸல்) திருத்தியுள்ளதால் அவர்கள் காட்டித் தந்த முறையில் மட்டுமே நமது தொழுகை அமைவது அவசியமாகும்.

நாம் எவ்வாறு இப்போது தொழுகின்றோமோ அது தான் சரியானது, அது தான் நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்தது, அவர்கள் கற்றுத் தராத ஒன்றை நமது முன்னோர்களும் மார்க்க அறிஞர்களும் கூறியிருக்க மாட்டார்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நம்பிக்கையின் காரணமாக தொழுகையில் தாங்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள மறுக்கின்றார்கள்.

தொழுகையில் நபிவழியைப் புறக்கணிப்பது இன்று நேற்றல்ல! ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்டது என்பதை விளங்கிக் கொண்டார்கள் என்றால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.

"நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்த எதனையும் இப்போது நான் காணவில்லை'' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். அப்போது அவர்களிடம் "தொழுகை இருக்கின்றதே!'' எனக் கேட்கப் பட்டது. அதற்கு அனஸ் (ரலி), "அதையும் வீணாக்க வேண்டிய அளவுக்கு வீணாக்கி விட்டீர்களே!'' என்று விடையளித்தார்கள். (புகாரி 529, 530)

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்களே நபிகள் நாயகம் (ஸல்) தொழுத முறையில் பலவற்றைக் கை கழுவி விட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நபித்தோழர்களில் சிலர் உயிருடன் வாழும் போதே இந்த நிலை என்றால் நமது முன்னோர்கள் தொழுத முறை நபிவழியில் தான் அமைந்திருக்கும் என்று கருத முடியாது. நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்தவை நபிவழியில் உள்ளது தானா என்று ஆய்வு செய்தே ஆக வேண்டும்.

ஒரு பெருநாள் தொழுகையில் அன்றைய ஆட்சியாளராக இருந்த மர்வான் மிம்பர் எனும் மேடை அமைக்கின்றார். மேலும் தொழுகைக்கு முன் மிம்பரில் ஏற முயற்சிக்கின்றார். அவரது ஆடையைப் பிடித்து இழுத்து, அபூஸயீத் (ரலி) தடுத்து நிறுத்துகின்றார்கள். அதையும் மீறி, மர்வான் மேடையில் ஏறி உரை நிகழ்த்திய பின்பே தொழுகை நடத்தினார். நபிகள் நாயகம்(ஸல்) தொழுகைக்குப் பின் தான் உரை நிகழ்த்துவார்கள் என்று அபூஸயீத் (ரலி) மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்கள்.

(புகாரி 956)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து சில ஆண்டுகளிலேயே பெருநாள் தொழுகையில் இரண்டு தவறுகள் ஏற்பட்டு விட்டன. பெருநாள் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மிம்பர் எனும் மேடை அமைக்கப் படவில்லை. மேலும் தொழுகைக்குப் பின்பே உரை நிகழ்த்தப்பட்டது. இவ்விரு முறைகளும் நல்லோரின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப் படுத்தப்பட்டதை இந்நிகழ்ச்சியில் காண்கின்றோம்.

அப்படியானால் நம் முன்னோர்கள் கற்றுத் தந்த தொழுகை முறை நூறு சதவிகிதம் சரியாகவே இருக்கும் என்று எவ்வாறு நாம் கருத இயலும்?

நாங்கள் உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களுடன் லுஹர் தொழுதோம். உடனே புறப்பட்டு அனஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். "என் சிறிய தந்தையே! இது எந்தத் தொழுகை?'' என்று கேட்டேன். "அஸர் தொழுகை! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இந்த நேரத்தில் தான் நாங்கள் தொழுவோம்'' என்று விடையளித்தார்கள்.

(புகாரி 549)

உமர் பின் அப்துல் அஜீஸ் நான்கு கலீபாக்களுக்குப் பிறகு நல்லாட்சி நடத்தியவர்களில் மிகச் சிறந்தவர். ஆனால் அவரே லுஹர் தொழுகையை அதன் கடைசி நேரம் வரை தாமதம் செய்து தொழுதிருக்கின்றார்கள். லுஹர் தொழுது முடித்தவுடன் அஸர் நேரம் ஆரம்பமாகும் அளவுக்கு தாமதம் செய்திருக்கின்றார்கள் என்றால் மற்ற தலைவர்களும் அறிஞர்களும் எப்படியெல்லாம் மாற்றங்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

உமர் பின் அப்துல் அஜீஸ் மட்டும் தான் இப்படி நடந்து கொண்டார் என எண்ணக் கூடாது. இத்தகைய ஆட்சியாளர்கள் அதிமதிகம் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

"தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்தும் அல்லது சாகடிக்கும் அதிகாரிகளை அடைந்தால் எவ்வாறு நடந்து கொள்வாய்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) என்னிடம் கேட்டனர். "நீங்கள் என்ன கட்டளையிடுகின்றீர்கள்?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் அத்தொழுகையைத் தொழுது விடு. அவர்களின் தொழுகையை நீ அடைந்தால் அவர்களுடன் தொழு! அது உனக்கு உபரியாக அமையும்'' என விடையளித்தார்கள்.

(முஸ்லிம் 1027)

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தொழுது காட்டிய முறை மக்களால் மறக்கடிக்கப்படும், புறக்கணிக்கப்படும் என்பதை இந்த நிகழ்ச்சிகளில் இருந்து அறிந்து கொள்கின்றோம்.

காலம் செல்லச் செல்ல ஒவ்வொரு அறிஞரும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் தொழுகை முறைகளை உருவாக்கினார்கள். மக்களும் கண்களை மூடிக் கொண்டு அதை அப்படியே பின்பற்றலானார்கள். அதன் காரணமாகவே தொழுகை முறையில் நம்மிடையே இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன.

ஆனாலும் தங்கள் நடவடிக்கைகளைத் தான் மக்கள் மாற்றி விட்டனரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத முறை எது என்பதைக் கண்டு பிடிக்கும் வகையில் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நமது தொழுகையில் நாம் செய்யும் எந்தச் செயல் சரியானது? எது தவறானது? என்பதை இப்போதும் நம்மால் கண்டு பிடிக்க முடியும். நம்மைத் திருத்திக் கொள்ள முடியும்.

இந்த அடிப்படையில் தான் தொழுகையின் சட்டங்கள் இங்கே விளக்கப் படவுள்ளன.

* தொழுகையில் ஒவ்வொரு சட்டத்துக்கும் உரிய ஆதாரங்கள்.

* நம்மிடையே ஆதாரமில்லாமல் குடி புகுந்து விட்ட முறைகள்.

* முரண்பட்ட இரு வேறு நடைமுறைகளுக்கும் ஆதாரம் இருந்தால் அதில் எது சரியானது என்பது பற்றிய முழுமையான ஆய்வு!

என்று மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் இத்தொடரில் விளக்கவுள்ளோம்.

வாயால் கூற வேண்டியவைகளின் அரபு மூலம், அதன் தமிழ் உச்சரிப்பு, அதன் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றுடன் இத்தொடரில் இடம் பெறும்.

நம்மோடு மாற்றுக் கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்களுக்கும் விளக்கம் சொல்லப்படும்.

விரிவாகவும் விளக்கமாகவும் வெளியாகவுள்ள இத்தொடர் அறிந்து பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் போதுமான விளக்கம் கொண்டதாக இன்ஷா அல்லாஹ் அமையும்.


அடுத்த இதழிலிருந்து தொழுகையின் சட்டத்தைக் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

 ஏகத்துவம் மார்ச் 2003