Jul 26, 2015

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 2

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 2

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் அது தொழுகையாக ஆகாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் 5:6)

உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி (135, 6954), முஸ்லிம் (330), திர்மிதி (71), அபூதாவூத் (55), அஹ்மத் (7732) மற்றும் பல நூல்கள்

தண்ணீர்

உளூச் செய்வதற்கு தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் தமிழக முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், மழை நீர், கண்மாய், ஏரிகள், கிணறுகள், நிலத்தடி நீர் போன்றவற்றால் உளூச் செய்யலாம், குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

ஆனால் கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து பல முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.

கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர். இது பற்றிய ஹதீஸ்களில் பெரும்பாலானவை பலவீனமானவையாக இருந்தாலும் ஏற்கத் தக்க சில ஹதீஸ்களும் உள்ளன. அவற்றுள் இப்னுமாஜாவில் இடம் பெறும் ஹதீஸ் குறிப்பிடத் தக்கதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது. அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப் பட்டவை'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : இப்னுமாஜா (382)

எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்

சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது சிறிதளவு தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும் மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் (ஈரக்கையால் தடவுதல்) செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், "எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹும்ரான்,

நூல் : புகாரி (160, 164)

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபிகள் நாயகம் அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) என்ற நபித்தோழரிடம் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தனர்?'' என்று அம்ர் பின் அபீ ஹஸன் கேட்டார். அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்து மக்களுக்கு உளூச் செய்து காட்டினார்கள். தமது கைகளில் தண்ணீர் ஊற்றி மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் விட்டு மூன்று தடவை தண்ணீர் எடுத்து, மூன்று தடவை வாய் கொப்பளித்து, மூக்குக்குத் தண்ணீர் செலுத்தி, மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் கையைப் பாத்திரத்தில் விட்டு முகத்தை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் பாத்திரத்தில் கையை விட்டு மூட்டுக்கள் வரை இரு கைகளையும் இரண்டிரண்டு தடவை கழுவினார்கள். பின்னர் பாத்திரத்தில் கையை விட்டு தமது இரு கைகளையும் தலையின் முன்னும் பின்னும் கொண்டு சென்று தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் பாத்திரத்தில் கை விட்டு இரு கால்களையும் கழுவினார்கள்.

நூல் : புகாரி (192)

இது போன்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (162)

கை படக் கூடாத இடத்தில் பட்டிருக்கும் என்பதற்காகவே கையைக் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் உண்மை முஸ்லிம்கள் அதை மதிக்கத் தேவையில்லை.

கை விடுவதால் தண்ணீர் அசுத்தமாகாது. உளூச் செய்வதற்குப் பயன்படும் தகுதியை இழந்து விடாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

ஒருவர் தனது கையைப் பாத்திரத்தில் விடும் போது அவரது கையில் இருந்த தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் உள்ள தண்ணீருடன் கலக்கும். அதாவது ஏற்கனவே ஒரு உறுப்பைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப் பட்ட தண்ணீரின் துளிகள், கழுவுவதற்குப் பயன்படுத்தப் படாத தண்ணீருடன் கலந்திருந்தும் அத்தண்ணீரில் நபிகள் நாயகம் (ஸல்) உளூச் செய்துள்ளனர். ஒருவர் உளூச் செய்து விட்டு மீதி வைத்த தண்ணீரில் கூட மற்றவர் உளூச் செய்யலாம். ஏனெனில் அவர் உளூச் செய்திருப்பதால் கழுவிய தண்ணீரின் சில துளிகள் தான் அதில் கலந்திருக்கும். இது தண்ணீரை அசுத்தமாக்காது.

பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.

"கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்'' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி (263, 322)

கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க ரீதியான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்க முடியாது. தண்ணீரை எடுப்பதற்காக கையைக் கொண்டு செல்லும் போது கையிலிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதுவும் தவறான நம்பிக்கையாகும்.

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. அவர் பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தைச் சாய்த்தார். "என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?'' என்று கேட்டார். நான் ஆம் என்றேன். "இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர் : கப்ஷா

நூல்கள் : திர்மிதி 85, நஸயீ 67, 338 அபூதாவூத் 68 மற்றும் பல நூல்கள்

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும் அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது. மேலும் "இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்'' என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதையும் விளக்குகின்றது.

பூனை வாய் வைத்தால் பாத்திரத்தைக் கழுவ வேண்டும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு சிலர் மாற்றுக் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் செய்தி நபிகள் நாயகத்தின் கூற்றல்ல! அபூஹுரைராவின் சொந்தக் கூற்று என்பதை இமாம் பைஹகீ நிரூபித்துள்ளார்கள். ஹனபி மத்ஹபின் தஹாவீ போன்ற சிலர் இதை ஆதாரப்பூர்வமானது என்று வாதிட்டாலும் அவரது மத்ஹபைச் சேர்ந்த முல்லா அலீகாரி போன்றவர்களே அவரது வாதத்தை நிராகரித்து விட்டார்கள்.

மேலும் பூனை வாய் வைத்தால் ஒரு முறை கழுவ வேண்டும் எனவும், மூன்று முறை கழுவ வேண்டும் எனவும், ஏழு முறை கழுவ வேண்டும் எனவும், நாய் வாய் வைக்கும் போது கழுவுவது போல் கழுவ வேண்டும் எனவும் முரண்பட்ட பல அறிவிப்புக்கள் உள்ளதால் அது மேலும் பலவீனப்படுகின்றது.

எனவே மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.

நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பல ஹதீஸ்கள் உள்ளன. (புகாரி 172)

சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபிகள் நாயகம் (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்றும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப் பட்டதாகும். காலித் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.

எனவே வெயிலில் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.

அடுத்ததாக உளூச் செய்யும் முறை என்ன? என்ற விபரத்தை இனி காண்போம், இன்ஷா அல்லாஹ்.

ஏகத்துவம் ஏப்ரல் 2003