Oct 26, 2015

அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 15

அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 15

காலிதுக்கு எதிரான புகார்கள்

எம். ஷம்சுல்லுஹா

மதமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பனூதமீம் கிளையினர் பல்வேறு விதமாக சிதறிக் கிடந்தனர். ஒரு சாரார் ஜகாத் கொடுக்க மறுத்து மதம் மாறினர். மற்றொரு சாரார் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தொடர்ந்து ஜகாத்தை செலுத்தி வந்தனர். இன்னொரு சாரார் என்ன தான் நடக்கின்றது என்று பார்ப்போம் என்று காத்திருந்தனர்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான் பனூ தமீம் கிளையாரிடம் ஒருத்தி நுழைகின்றாள். தக்லிபிய்யா கிளையைச் சேர்ந்த ஹாரீஸ் என்பவரின் மகளான ஸிஜாஹ் என்ற அப்பெண் தன்னை ஓர் இறைத்தூதராக (நபிய்யாவாக) பிரகடனப்படுத்திக் கொண்டு இவர்களிடம் பிரவேசிக்கின்றாள். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அவளுடன் அவளது கிளையாரும் இன்னபிற மக்களும் இணைந்திருந்தனர்.

இவர்கள் ஏற்கனவே அபூபகர் (ரலி) அவர்களை எதிர்த்துப் போராடுவது என்று முடிவு கட்டியிருந்தனர். இந்த நிலையில் தமீம் கிளையாரிடம் தான் நபி என்ற வாதத்தை இவள் எடுத்து வைத்தாள். அவளுடைய கருத்தை ஒரு பெரும் கூட்டம் ஆதரித்தது. அப்போது அந்தக் கருத்தை மாலிக் பின் நுவைரா தமீமிய்யா, அதாரித் பின் ஹாஜிப் இன்னும் இது போன்ற முக்கியப் புள்ளிகள் ஆதரவளித்தனர்.

இவளுடைய ஆதரவாளர்களுக்கும் எதிரணியினருக்கும் கடுமையான போர் நடந்தேறியது. இரு அணியிலும் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. பின்னர் இவ்விரு அணியினரும் சமாதானமாயினர். எனினும் தனக்கென்று தனியிடம் இம்மக்களிடம் கிடைக்காததால் ஸிஜாஹ் என்ற போலிப் பெண் நபி யமாமாவுக்குப் புறப்படத் தீர்மானித்தாள்.

யமாமாவிலிருந்த போலி நபி முஸைலமா இவளிடம் பேரம் பேசி சமாளித்து விடவே இவள் தன் ஊரை நோக்கித் திரும்பி விடுகின்றாள். (பின்னர் இவள் முஆவியா (ரலி)யின் ஆட்சிக் காலத்தில் நாடு கடத்தப் படுகின்றாள். அது வரை தன்னுடைய தக்லப் கிளையாரிடமே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்)

ஸிஜாஹ் இப்படி முஸைலமாவுடன் கை கோர்த்து பின்னர் தன்னுடைய நாட்டிற்குத் தப்பியோடிய செய்தியை அறிந்து அவளை வற்புறுத்தி சண்டையிடச் செய்த மாலிக் பின் நுவைரா தனது தவறை எண்ணி வருந்துகின்றார். இவ்வாறு அவர் வருந்துவதற்குக் காரணமும் இருந்தது. அவர் பிதாஹ் என்ற ஊரில் தங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். மாலிக் பின் நுவைரா அங்கு ஆட்சியாளராக இருக்கின்றார் என்பதை அறிந்த காலித் பின் வலீத் அந்த ஊரை நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டிருந்தார்.

"நான் பிதாஹை நோக்கி செல்கின்றேன்'' என்று காலித் பின் வலீத் கூறிய போது அவருடைய படையில் சென்றிருந்த அன்சாரிகள், "அபூபக்ர் (ரலி) எங்களுக்கு இட்ட கட்டளையை ஓரளவு நிறைவேற்றி விட்டோம். இனிமேல் நாங்கள் மதீனா திரும்புகின்றோம்'' என்று தளபதி காலித் பின் வலீதிடம் தெரிவிக்கின்றார்கள். அதற்குக் காலித் பின் வலீத், "இது தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி)யிடமிருந்து கடிதம் வரவில்லை. எனினும் இந்தப் படையெடுப்பை, அதாவது பிதாஹை நோக்கிச் செல்லும் படை நடத்துதலை நான் மிக மிக அவசியம் என்று கருதுகின்றேன். இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று நினைக்கின்றேன். அமீர் - போர்ப்படைத் தளபதி என்ற அடிப்படையில் எனக்குச் சில தகவல்கள் கிடைக்கின்றன. அதன் படி படையைத் தொடர வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். உங்களை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன். ஆனால் அதே சமயம் நான் பிதாஹுக்கு செல்லத் தான் போகின்றேன்'' என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

அவர் புறப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அன்சாரிகள் அவருக்குத் தகவல் அனுப்பி அவர்களும் காலித் பின் வலீதின் படையில் போய் சேர்ந்து கொண்டனர்.

காலித் பின் வலீதின் படைகளுக்கு பிதாஹ் மக்கள் அனைவரும் கட்டுப்பட்டனர். ஜகாத் தொகைகளைத் தாராளமாக, எவ்வித தயக்கமும் இன்றி அள்ளிக் கொடுத்தனர். ஆனால் மாலிக் பின் நுவைராவும் அவரது ஆதரவாளர்களும் ஜகாத் கொடுப்பதற்குத் தயக்கம் காட்டினர். தடுமாறிக் கொண்டிருந்தனர். அதனால் காலித் பின் வலீதின் படையினர் அவரையும் அவரது ஆட்களையும் கைது செய்தனர்.

காலித், அபூகதாதா கருத்து மோதல்

இப்போது காலித் பின் வலீத் (ரலி)யின் படையில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு குடியேறி குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே ஜகாத்தைச் செலுத்த மறுக்கும் இந்தக் கூட்டம் தொழுகின்றதா? அல்லது தொழ மறுக்கின்றதா? என்பது தான் அந்தக் கருத்து வேறுபாடு!

கைதிகள் தொழுகையை நிலைநாட்டினார்கள் என்று அபூகதாதா - அல்ஹர்ஸ் பின் ரிஃப்யீ கூறினார். கைதிகள் தொழவில்லை என்று மற்றவர்கள் கூறினர். கைதிகள் கடுமையான குளிரில் கைவிலங்குகளுடன் இருந்ததால் தொழவில்லை என்று காரணமும் கூறப்பட்டது.

இந்நிலையில், கைதிகளுக்குச் சூடேற்றுங்கள் என்று ஒரு கட்டளை ஓர் அழைப்பாளரிடமிருந்து கிளம்புகின்றது. இது கைதிகள் குளிர் காய்வதற்கு உரிய கட்டளை என்பதைப் புரிந்து கொள்ளாமல், கொலை செய்வதற்குரிய கட்டளை என்று தவறாகப் புரிந்து கொண்டு படையாட்கள் கைதிகளைக் கொலை செய்து விடுகின்றனர்.

இதைச் செவியுற்று காலித் பின் வலீத் களத்திற்கு வருவதற்கு முன் மாலிக் பின் நுவைரா மற்றும் அவரது ஆட்களின் கதை முடிந்து போய் விட்டது. அல்லாஹ் ஒன்றை நாடினால் அது நடந்தே தீரும் என்று காலித் பின் வலீத் கூறினார். இதன் பின் மாலிக் பின் நுவைராவின் மனைவி உம்மு தமீமை காலித் பின் வலீத் திருமணம் முடித்துக் கொள்கின்றார்.

இதைக் கண்டு ஆத்திரமுற்ற அபூகதாதா, அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, காலித் பின் வலீதைப் பற்றி புகார் கூறுகின்றார். அபூகதாதாவுடன், உமர் (ரலி) அவர்களும் சேர்ந்து கொண்டு, காலிதைப் பதவி நீக்கம் செய்யுங்கள். அவருடைய வாளில் அநியாயம் படையெடுத்து ஆடுகின்றது என்று குற்றம் சாட்டினார்கள். "இறை நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ் உருவி விட்டிருக்கும் வாளை நான் ஒரு போதும் உறையில் இட மாட்டேன்'' என்று உறுதியாக அபூபக்ர் (ரலி) மறுத்து விட்டார்கள். அபூகதாதாவைத் தொடர்ந்து முதம்மி பின் நுவைராவும் காலித் பின் வலீதைப் பற்றி புகார் செய்கின்றார். இதன் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் மாலிக் பின் நுவைராவுக்கு தன் தரப்பிலிருந்தே நட்ட ஈடு வழங்குகின்றார்கள். உமர் (ரலி) திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருக்க. அபூபக்ர் (ரலி) உடனே காலித் பின் வலீதை வரவழைக்கின்றார்கள்.

காலித் பின் வலீத் போர் முனையிலிருந்து நேரடியாக அப்படியே இரத்தக் கறை படிந்த கவசம், ஆடை சகிதமாக பள்ளியை நோக்கி வந்தார். அவர் பள்ளிக்குள் நுழைந்ததும் அவரை நோக்கி உமர் (ரலி) விரைந்து சென்று அவரது தலைப்பாகையுடன் இருந்த அம்புகளைத் தூக்கி தரையில் வீசியெறிந்தார்கள். "நீ முகஸ்துதிக்காக ஒரு முஸ்லிமைக் கொன்று விட்டு அவரது மனைவியையும் திருமணம் முடித்துக் கொண்டாய். உன்னை நான் சும்மா விட மாட்டேன்'' என்று அவரிடம் கடுமையாகச் சாடினார்கள். இத்தனைக்கும் காலித் பின் வலீத் (ரலி) பதில் எதுவும் கூறாமலேயே நின்றார்கள். இதன் பின் அவர்கள் அபூபக்ர் (ரலி) யிடம் சென்று நடந்த காரியத்திற்காக வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் காலித் பின் வலீதை மன்னித்தது மட்டுமல்லாமல் அவரை அதே பதவியில் நீட்டிக்கவும் செய்தார்கள். அபூபக்ர் (ரலி)யிடமிருந்து காலித் பின் வலீத் வெளியேறிச் செல்லும் போது உமர் (ரலி) மீண்டும் அழைத்தார்கள். ஆனால் அவர்களிடம் வராமலேயே வேகமாக சென்று விடுகின்றார்.

மாலிக் பின் நுவைராவை காலித் பின் வலீத் தவறுதலாக முடிவெடுத்து கொலை செய்த பின்னும் அபூபக்ர் (ரலி) அவரைப் பதவி நீக்கம் செய்யாததற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த நேரடியான முன் மாதிரியின் அடிப்படையில் தான்.

நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி)யை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும் படி அழைப்பு விடுத்தார். அவர்களுக்கு, "அஸ்லம்னா - நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்'' என்று சொல்ல வரவில்லை. ஆகவே அவர்கள், ஸபஃனா. ஸபஃனா - நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறி விட்டோம் என்று கூறினார்கள்.

உடனே காலித் (ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும், சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். உடனே நான், "அல்லாஹ்வின் மீதாணையாக என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன். மேலும் என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல மாட்டார்'' என்று கூறினேன். இறுதியில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கரங்களை உயர்த்தி, "இறைவா, காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பதை உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இரு முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 4339

இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், காலிதின் இந்த விவகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். காலிதைப் பதவி நீக்கம் செய்யவில்லை. இங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உணர்ச்சிக்குப் பலியாகி விடாமல் நிதானமாக ஓர் உறுதியான முடிவை எடுக்கின்றார்கள்.

இதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், போலி நபி முஸைலமாவை எதிர்த்துப் போரிடுகின்ற புனிதப் பணிக்கு காலித் பின் வலீதை நியமிக்கின்றார்கள். காலித் பின் வலீத் இதற்காக யமாமாவை நோக்கி படையுடன் பயணமாகின்றார்கள். யமாமாவில் வெற்றியா? தோல்வியா? என்று பார்ப்பதற்கு முன்னால் மதீனாவில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளைப் பார்த்து விட்டு யமாமா போர் முனைக்கு வருவோம். வளரும் இன்ஷா அல்லாஹ்...


ஏகத்துவம் அக்டோபர் 2004