அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 20
உருத் தெரியாமல் போன ஒரு பொய்த் தூதன்
எம். ஷம்சுல்லுஹா
"முஸ்லிம்களே! என்னை இந்தத் தோட்டத்திற்குள் தூக்கி வீசுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்''
இது தான் பர்ராஃ பின் மாலிக் வழங்கிய கம்பீரமான யோசனையாகும்.
பர்ரா பின் மாலிக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ் பின் மாலிக் (ரலி)யின் சகோதரர் ஆவார். இவர் உஹதுப் போரில் பங்கெடுத்தவரும் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவருமாவார். (நூல்: ஸியரு அஃலாமின் நுபலா)
இத்தகைய பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட பர்ராஃ பின் மாலிக் ஏன் இப்படி முன்னணியில் நிற்க மாட்டார்?
பர்ராஃ பின் மாலிக் படைத்த வரலாறு
உள்ளே தூக்கியெறிய எந்த ஒரு கருவியும் இல்லாத வேளையில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல், தோலினால் ஆன ஒரு கேடயத்தில் அவரை அமர்த்தி அதை ஈட்டிகளால் தூக்கினர். அவ்வளவு தான்! வரிப் புலியாய் கோட்டைச் சுவரைத் தாண்டி தோட்டத்திற்குள் பாய்ந்தார். கதவைச் சாத்தி விட்டு, அப்பாடா ஒரு வழியாய் தப்பித்தோம் என்று எண்ணிக் கொண்டு தோட்டத்திற்குள் இருந்தவர்களின் எண்ணத்தில் இடியென விழுந்தார். அவர்களிடம் வாள் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே தாழிட்டிருந்த கதவைத் திறந்து விட்டார். அவ்வளவு தான்!
உண்மைத் தூதரைத் தங்கள் உயிராக, உணர்வாகக் கொண்டிருந்த உன்னதத் தோழர் படை கடல் அலைகளாய் ஆர்ப்பரித்து உள்ளே பாய்ந்தது.
வஹ்ஷீ நிறைவேற்றிய வைராக்கியம்
உள்ளே நுழைந்த முஸ்லிம்களின் ஒட்டு மொத்த குறி, ஓட்டமெடுத்த போலித் தூதன் முஸைலமா தான்! ஆனால் மதம் பிடித்த அந்த யானையைப் பதம் பார்க்க எல்லோராலும் முடியவில்லை.
ஏனெனில் அந்தப் பாக்கியத்தை அடைவதற்கு ஏற்கனவே ஒருவர் வைராக்கியம் கொண்டிருந்தார். அவர் தான் வஹ்ஷீ ஆவார். வஹ்ஷீ தன் வைராக்கியத்தை முடிப்பதற்கு முன், இந்த வஹ்ஷீ யார்? என்று புகாரியில் சற்று பார்த்து வருவோம்.
ஜஅஃபர் பின் அம்ர் பின் உமைய்யா அள்ளம்ரீ அவர்கள் கூறியதாவது:
நான் உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸ் என்ற நகருக்கு வந்து சேர்ந்த போது, என்னிடத்தில் உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், "(உஹதுப் போரில் ஹம்ஸாவைக் கொன்ற) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க விருப்பமுண்டா? ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!'' என்று கூறினார்கள். நான் சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்ஸில் வசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அவரைப் பற்றி விசாரித்தோம். "அவர் தமது அந்தக் கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்'' என்று கூறப்பட்டது.
பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு அவருக்கு நாங்கள் ஸலாம் சொன்ன போது அவர் எங்களுக்குப் பதில் ஸலாம் சொன்னார்.
உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியால் தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாத அளவுக்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது உபைதுல்லாஹ் (ரலி), "வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?'' என்று கேட்டார்.
அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆயினும் எனக்கு இது தெரியும். அதீ பின் கியார் என்பார் உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ் என்று சொல்லப்படும் ஒரு பெண்ணை திருமணம் முடித்தார். அதீ அவர்கள் மூலம் உம்மு கித்தால் மக்காவில் ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் செவிலித் தாயை நான் தான் தேடினேன். நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு அதன் தாயுடன் சென்று பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். உன் இரு பாதங்களைப் பார்த்தால் அந்தக் குழந்தையின் பாதங்களைப் போலவே இருக்கிறது'' என்று வஹ்ஷீ கூறினார்.
அப்போது உபைதுல்லாஹ் (ரலி), மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, "ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?'' என்று கேட்டார்கள்.
சரி என்று கூறி விட்டு வஹ்ஷீ கூறியதாவது:
ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே என் எஜமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், "என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்'' என்று கூறினார்.
ஆகவே அய்னைன் (உஹது) ஆண்டில்..... அய்னைன் என்பது உஹது மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு... மக்கள் போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது அவர்களுடன் நானும் போர்க்களம் சென்றேன். மக்கள் போருக்காக அணி வகுத்து நின்ற போது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் முன்னால் வந்து, "(என்னோடு) தனியாக மோதுபவர் உண்டா?'' என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் மோத வந்திருக்கின்றாயா?'' என்று கேட்டார்கள்.
பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தினார்கள். அவன் கழிந்து சென்று விட்ட நேற்றைய தினம் போல் ஆகி (மடிந்து) விட்டான். நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொல்வதற்குத் தருணம் பார்த்து ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா (ரலி) அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது அவரது (முன் புறம் பாய்ந்து) புட்டத்திற்கு இடையிலிருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய், அங்கு இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்குச் சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) ஒரு தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள். (எனவே தூதுக் குழுவுடன் நீங்களும் செல்லுங்கள்)'' என்று கூறப்பட்டது.
எனவே தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, "நீ வஹ்ஷி தானே?''என்று கேட்டார்கள். நான், "ஆம்'' என்று கூறினேன். "நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?'' என்று கேட்டார்கள். நான், "நீங்கள் கூறும் விஷயம் நடந்தது உண்மை தான்'' என்று கூறினேன்.
அப்போது அவர்கள், "(உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும். எனவே) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?'' என்று கேட்டார்கள். உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்ட போது, பொய்யன் முஸைலமா (நபியென்று) கிளம்பினான். அவன் நபித்தோழர்களுடன் போர் புரிவதற்காக பெரும் படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிக்க அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி, காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். நான், "நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். நான் அவனைக் கொல்லலாம். அதன் மூலம் நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு ஈடு செய்யலாம்'' என்று கூறிக் கொண்டேன். மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது.
அப்போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் சாம்பல் நிற ஒட்டகம் போல் இருந்தான். அவன் மீது எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கும் மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கு இடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன் தான் முஸைலமா)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகின்றார்கள்:
(முஸைலமா) கொல்லப்பட்ட போது ஒரு சிறுமி வீட்டின் முகப்பிலிருந்து கொண்டு, "அந்தோ! நம்பிக்கை யாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்து விட்டான்'' என்று சொன்னாள்.
நூல்: புகாரி 4072
ஹம்ஸாவிடம் காட்டிய அதே விளையாட்டை இந்தப் போலி நபியிடமும் வஹ்ஷீ காட்டி விட்டார். இதன் மூலம் தான் செய்த பாவத்திற்கு ஒரு பரிகாரத்தைத் தேடிக் கொண்டார்.
பலித்த கனவும் பலியான முஸைலமாவும்
ஒரு போலி நபியின் சகாப்தம் அவன் புகலிடம் சென்ற தோட்டத்திலேயே முடிந்து போனது. அடைக்கலம் கொடுத்த அந்தத் தோட்டமே அவனுக்கு அடக்கத் தலமானது. அத்துடன் அவன் கண்ட ஆட்சிக் கனவும் கலைந்து போனது. அவன் அடைய நினைத்த அதிகாரம் அவன் கண் முன்னாலேயே நிர்மூலமானது; நீர்க் குமிழியானது.
அதே சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கனவும், அவர்கள் முஸைலமாவிடம் நேரடியாகச் சொன்ன முன்னறிவிப்பும் நிறைவேறியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, "அதை ஊதி விடுவீராக!'' என்று கனவில் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய் விட்டன. அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கின்ற இரு பொய்யர்கள் என்று விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் அன்ஸிய்யாகவும், மற்றொருவன் யமாமாவாசியான பெரும் பொய்யன் முஸைலமாவாகவும் அமைந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3622, 4374
இந்த ஹதீஸின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கைகளில் உப்பிய காப்பாக இருந்த முஸைலமா, நபி (ஸல்) அவர்கள் வாயால் ஊதிய காற்றில் உருத் தெரியாமல் ஆகி விட்டான். உலகுக்கு ஒரு பாடமாகவும் ஆகி விட்டான்.
இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு ஒரு முழு வடிவத்தைப் பெற்று, முஹம்மத் (ஸல்) தான் இறுதித் தூதர் என்பதும் நிரூபணமாகி விடுகின்றது.
இதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், நபி (ஸல்) அவர்கள்,இவனைத் தன் வாழ்நாளில் கை வைக்காமல் விட்டது தான். இவனை எதிர் கொள்வதற்கு நான் தேவையில்லை; என்னுடைய தோழர் அபூபக்ர் போதும் என்று நபி (ஸல்) அவர்கள் எண்ணியது போல் நமக்குத் தோன்றுகிறது.
இதற்கொப்ப அபூபக்ர் (ரலி) அவர்களும் முஸைலமா என்ற போலி நபியைக் கொன்று யமாமா படையில் வென்று சாதனை படைக்கின்றார்கள்.
முஸைலமா கொல்லப்பட்ட நிகழ்வு நபித்தோழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,நிறைந்த மன நிறைவையும் அளித்தது என்பதைக் கீழ்க்கண்ட சம்பவம் உணர்த்துகின்றது.
அபூ அகீலின் உடலில் இறுதி மூச்சு ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை நோக்கி இப்னு உமர் (ரலி), "அபூ அகீலே!'' என்று அழைத்தார்கள். "என்ன இப்னு உமரே!'' என்று தளர்வான குரலில் கேட்டு விட்டு, "தோல்வி யாருக்கு?'' என்று வினவினார். "நல்ல செய்தி தான். அல்லாஹ்வின் விரோதி முஸைலமா கொல்லப்பட்டு விட்டான்'' என்று தெரிவித்தார்.
அப்போது அபூ அகீல், தனது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தி, "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறிய வண்ணம் அவரது உயிர் ஜோதி அணைந்து போனது.
இந்தச் செய்தியை இப்னு உமர் (ரலி), தமது தந்தை உமர் (ரலி)யிடம் தெரிவித்த போது, "அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! வீர மரணத்தையே அவர் சதாவும் தேடிக் கொண்டிருந்தார். நம்முடைய நபித் தோழர்களில் அவர் ஒரு சிறந்த நபித் தோழரும், முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவரும் ஆவார்'' என்று அவரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.
நூல்: தபகாத்துல் குப்ரா, ஸஃப்வத்துஸ் ஸஃப்வா
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் ஜூன் 2005