Oct 26, 2015

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர்: 30 - சங்கிலிப் போரில் சரிந்த பாரசீகம்

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர்: 30 - சங்கிலிப் போரில்  சரிந்த பாரசீகம்
எம். ஷம்சுல்லுஹா

தனக்கு ஒரு அந்தஸ்து கூடும் போதெல்லாம் தனது தொப்பியில் விலை உயர்ந்த அணிகலன்களை அதிகரித்துக் கொண்டு ஆட்டம் போட்ட அநியாயக்கார ஆளுநர் ஹுர்முஸுக்கு, இஸ்லாமிய போர்ப் படையின் தளபதி காலித் ஒரு கடிதம் அனுப்புகின்றார்.

அமைதி மார்க்கம் இஸ்லாத்தில் இணைக! அமைதி பெறுவாய்! அல்லது நீயும், உனது குடி மக்களும் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தும் இழிவுக்காக நீ யாரையும் பழித்துக் கொள்ளாதே! உன்னையே நீ பழித்துக் கொள்! இதற்கு இணங்க மறுப்பின் நான் ஒரு படையை அழைத்து வரவுள்ளேன். அந்தப் படையினர் யார் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வேறு யாருமல்லர்! நீங்கள் வாழத் துடிக்கும் கூட்டமெனில் அவர்கள் சாகத் துடிக்கும் கூட்டத்தினர்! அவர்கள் தான் எனது படையினர்!

இது தான் காலிதின் கடித வரிகள்.

படை திரட்டும் பணியில் பாரசீக ஆளுநர்

கடிதம் கையில் கிடைத்ததும் ஹுர்முஸ் அதைத் தனக்கு மேலுள்ள அரசர்களான ஷீரா பின் கிஸ்ரா, அர்தஷீர் பின் ஷீராவுக்கு அனுப்பி வைத்து விட்டு உடனே படை திரட்டும் பணியில் இறங்குகின்றான். பாரசீகத்திலிருந்து அரச குடும்பத்தைச் சார்ந்த குபாத், அனூஷஜான் ஆகிய இரு தளபதிகள் போரில் பங்கெடுக்க நேரில் வந்தனர். தலைமைத் தளபதி ஹுர்முஸின் வலது, இடது பக்கங்களின் படைத் தளபதிகளாக இவர்கள் இருவரும் நின்று போராட பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தங்களுடைய படை வீரர்கள் சாவுக்குப் பயந்து ஓடி விடக் கூடாது என்தற்காக அவர்களைச் சங்கிலிகளில் பிணைத்துக் கொள்ளும்படி பாரசீகத் தளபதிகள் உத்தரவிட்டனர். இவ்வாறு படை வீரர்கள் தங்களைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டதால் இந்தப் போருக்கு, சங்கிலிப் போர் என்ற பெயர் வந்தது.

யமாமாவிலிருந்து இராக் நோக்கிப் புறப்பட்ட காலித், அதன் எல்லையை அடைந்ததும், முஸன்னா பின்  ஹாரிஸா பின் அஷ்ஷைபானியின் தலைமையிலான படையைச் சந்திக்கின்றார். இந்தப் படையினர் ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களால் காலித் (ரலி) அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைத் தான் காலித் இராக் எல்லையில் சந்திக்கின்றார்.

காலித் அந்தப் படையை மூன்று அணிகளாகப் பிரித்து, முஸன்னா பின் ஹாரிஸா தலைமையிலான படையை இரண்டு நாட்களுக்கு முன்னரும், அதீ பின் ஹாத்தம் தலைமையிலான படையை ஒரு நாளுக்கு முன்னரும் ஹுபைர் என்ற இடத்திற்கு அனுப்பி விட்டு மூன்றாவதாக காலித் தலைமையிலான படை புறப்படுகின்றது.

இஸ்லாத்தில் இணைவது அல்லது வரி செலுத்துவது என்ற இரண்டு வழிகளையும் விட்டு விட்டு, இஸ்லாமியப் படைகளை எதிர்த்துப் போரிடுவது என்ற முடிவுக்கு வந்த ஹுர்முஸ், தனது படைத் தளபதிகளான குபாத், அனூஷஜான் ஆகியோருடன் படையைத் திரட்டிக் கொண்டு காழிமா என்ற இடத்தில் காலிதுக்காகக் காத்திருந்தான்.
இந்த நேரத்தில் காலிதின் படை ஹுபைருக்கு வருகின்றது என்று கேள்விப்பட்டு, காலித் வருவதற்கு முன்பே ஹுபைருக்கு வந்து சேர்ந்தான் ஹுர்முஸ். அங்கு நீர் நிலைகள் உள்ள இடத்தில் தனது படையை நிறுத்தி வைத்தான்.

வறண்ட பகுதியில் இஸ்லாமியப் படை

காலிதின் படை ஹுபைருக்கு வந்தது! பதினெட்டாயிரம் இராணுவ வீரர்களைக் கொண்ட இஸ்லாமியப் படை நிலை கொண்ட இடத்தில் நீர் நிலைகள் இல்லை! இது குறித்து உடனே அவர்கள் தளபதி காலித் பின் வலீதிடம் முறையிடுகின்றனர். "நீர் வளமுள்ள பகுதியில் நம்முடைய எதிரிகள் உள்ளனர். நாமோ நீரில்லாத பகுதியில் மாட்டிக் கொண்டோம்'' என்று காலிதிடம் எடுத்து வைத்தனர்.

அதற்கு காலித், "இதற்கு ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்கள் போரின் போதே நீங்கள் அவர்களை நீர் நிலைகளை விட்டுப் பின்னுக்குத் துரத்துங்கள். அந்த நீர்ப் பகுதிகளை விட்டு அவர்களைத் தப்பித்தேன், பிழைத்தேன் என்று ஓடச் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இவ்விரு சாராரில் பொறுமையாளர்களுக்கே நீர் வசதியைத் தருவான்'' என்று ஆறுதல் கூறினார்.

காலித் பின் வலீதின் அந்த வார்த்தைகளை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். காலித் எதிர்பார்த்த அந்த வழியல்லாது வேறு வழியில் போராளிகளுக்கு அல்லாஹ் தண்ணீர் அளித்தான். வானிலிருந்து மழையை இறக்கியருளினான். வனமான பகுதி வளமான பகுதியாகின்றது.

இஸ்லாமியப் படைகள் தங்கிய இடத்தில் வான் மேகங்கள் வழங்கிய மழையால் பல்வேறு நீர் தேக்கங்கள் உருவாயின! இது முஸ்லிம்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு புத்துணர்ச்சியை, புதுத் தெம்பை அளித்தது. புது ரத்தம் பாய்ந்த போராளிகளாக, பாரசீகர்களை எதிர்த்துப் போர்க்களம் புகுந்தனர்.

ஹுர்முஸின் அறைகூவல்

"காலித் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள்'' என்று ஹுர்முஸ் அறைகூவல் விடுத்தான்! ஆர்ப்பரித்தான்!

பாரசீகத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் காலித், தன் கையில் கிடைத்து மரணத்தைத் தழுவினால் பாரசீக ஆட்சியாளர் களிடமும் மக்களிடமும் தனது மதிப்பு மரியாதை உயரும்; இதனால் தன் தொப்பியில் மேலும் அணிகலன்களைக் கூட்டிக் கொள்ளலாம் என்று அவன் மனக் கண்ணில் காட்சிகள் மின்னல் போல் பளிச்சிட்டுப் பறக்கின்றன.

இந்த நேரத்தில் அவனது அறைகூவலை ஏற்றுக் கொண்டு காலித் பின் வலீத் அவனை எதிர் கொள்கிறார். இந்தச் சிங்கத்தைக் களத்தில் வீழ்த்த முடியாது என்று ஏற்கனவே கணக்குப் போட்டிருந்த ஹுர்முஸ், தன் பாதுகாப்புப் படையினரிடம் சதி செய்யச் சொல்லியிருந்தான்.

போரின் உச்சக்கட்டத்தில் காலித், ஹுர்முஸைக் கொல்லப் போகின்றார் என்ற கட்டம் வந்ததும் ஹுர்முஸின் காவலர்கள் என்ற சதிகாரர்கள் காலித் பின் வலீதிடம் பாய்ந்து அவரைக் கொல்ல முயன்றார்கள்.

கஃகாஃ பின் அம்ர் என்பார் அந்தக் காவலர்களைப் பார்த்துக் கொள்கின்றார். அவர்களை மடக்கிய அவர் மரணத்தின் வாயிலில் தள்ளி விடுகின்றார்.

இங்கே காலித் பின் வலீதின் வாள் முளையில் வசமாக மாட்டிய ஹுர்முஸ் கொல்லப்படுகின்றான். சாவை எதிர்த்து சாகசம் புரிவோம் என்று சங்கிலியில் பிணைத்துக் கொண்டு வந்த பாரசீக வீரர்கள், ஹுர்முஸ் கொல்லப்பட்டதும் ஓட்டம் பிடித்தனர்.

அரச குடும்பத்தைச் சார்ந்த தளபதிகள் குபாத், அனூஷஜான் ஆகியோரும் ஓடிய திக்கு தெரியவில்லை. இவ்வாறு இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியைக் கொடுத்தான்.

பாரசீகர்களை முஸ்லிம்கள் இரவு முழுக்கத் துரத்தியடித்துக் கொன்றனர். புராத் நதியில் உள்ள பெரும் பாலம் வரை அவர்களை விரட்டியடித்தனர். முஸ்லிம்களுக்கு இந்தப் போரில், ஆயிரம் ஒட்டகங்கள் சுமக்கும் அளவுக்கு வெற்றிப் பொருட்கள் கிடைத்தன.

 

மதீனாவில் யானை! மக்கள் அதிசயம்!

பெரும் பெரும் வெற்றிப் பொருட்களைப் போரில் வென்ற காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், இஸ்லாமியச் சட்டப்படி வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை மதீனாவுக்கு, ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்கள். ஸிர் பின் கலீப் என்பார் அந்த வெற்றிப் பொருட்களுடன் ஒரு யானையையும் மதீனாவுக்குக் கொண்டு வந்தார்.

மக்கா நகரம் அப்ரஹாவின் யானைப் படையைப் பார்த்திருக்கின்றது. அல்லாஹ் தனது திருமறையின் யானைப் படையைப் பற்றி அழகாக எடுத்துச் சொல்கின்றான். ஆனால் மதீனா மக்களுக்கு இது போன்ற ஒரு வரலாறு இல்லை. அவர்கள் யானையைப் பார்த்ததில்லை.

"இது அல்லாஹ்வின் படைப்பா? அல்லது பாரசீக ஆட்சியாளர்களின் மந்திரப் பொருளா?'' என்று மதீனத்துப் பெண்கள் பேசிக் கொண்டனர்.

ஆனால் அந்த யானை பாரசீக ஆட்சியாளர்களிடம் பெற்ற மதிப்பை இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் பெறவில்லை. இந்த யானையால் ஒரு பயனும் இல்லை என்று அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள்.

வெற்றிப் பொருட்களுடன் வந்த ஹுர்முஸின் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட, வேலைப்பாடுகள் மிகுந்த தொப்பியை அபூபக்ர் (ரலி) அவர்கள் காலிதிடம் வழங்கி விடுகின்றார்கள்.

ஹுர்முஸின் சாவு அரபுலகிற்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அப்போதைய வல்லரசாக வலம் வந்து கொண்டு, அரபுலகத்தில் வாலாட்டிக் கொண்டிருந்த பாரசீகம் வாலறுக்கப்பட்ட குரங்கானது. "சங்கிலிப் போர்' அதற்கு சாவு மணியாக ஆனது.

வளரும் இன்ஷா அல்லாஹ்!
ஏகத்துவம் மார்ச் 2007