May 26, 2016

ஜும்ஆ தொழுகை - 2

ஜும்ஆ தொழுகை - 2

எம். ஷம்சுல்லுஹா
ஜும்ஆ நாளின் சிறப்புக்களையும்அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களையும் கடந்த இதழில் கண்டோம். ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களில் மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த இதழில் காண்போம்.
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம்மாடுஆடுகோழிமுட்டை ஆகியவற்றைக் கொடுத்து,இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 881
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள்
"ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை - அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1416
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.
நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், "வாய் மூடுஎன்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 934
"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1419
மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும்கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்'' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல் : அபூதாவூத் 939
இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.
ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள்
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
"அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும்அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163-166)
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.
இதயங்கள் இறுகி விடும்
"ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1432
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுல் ஜஃது (ரலி),

நூல் : திர்மிதி 460
இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு,ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் 1043
இறைத் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!
EGATHUVAM - SEP 2003