நயவஞ்சகர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு
முன் ஆட்சியையும், அதிகாரத்தையும்
அனுபவித்து வந்த சிலர், உளப்பூர்வமாக
இஸ்லாத்தை ஏற்காமல் சுயநலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு
ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.
இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில்
வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும்
முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு
வழங்குவதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே
கலந்து கொள்வார்கள்.
இவர்களைத்தான் குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக்
குறிப்பிடுகிறது.