Sep 14, 2016

வரலாற்று இடங்களும் நிகழ்வுகளும்

இது வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட மாபெரும் ஆலயமாகும். (திருக்குர்ஆன் 52:4)

இதில் தினமும் எழுபதினாயிரம் வானவர்கள் தொழுவர் என்றும், ஒருமுறை தொழுதவர்கள் மறுபடி அங்கே செல்ல மாட்டார்கள் என்றும், இது ஏழாம் வானத்தில் இருப்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரி 3207)


கஅபாவுக்கு நேர் மேலே இது அமைந்துள்ளது என்று சில அறிவிப்புக்கள் உள்ளன. அவை பலவீனமான அறிவிப்புகளாகும். மேலும் பூமி சுழல்வதால் எப்போதும் கஅபாவுக்கு நேர் மேலே பைத்துல் மஃமூர் இருக்க முடியாது.


கஅபா
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96)

ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது.

ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக்கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.

இறைவனின் அற்புதமாக வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் 30 லட்சம் மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது.


அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.


யஸ்ரிப்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பழைய பெயர் யஸ்ரிப். (பார்க்க திருக்குர்ஆன் 33:31)


பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.

ஸஃபா - மர்வா
இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக்குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.

அப்போது குழந்தை தாகத்தால் தவித்தபோது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள்.

அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஊற்று நீருக்கு உண்டு. இங்கே 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. (இது பற்றி மேலும் விபரமறிய 438வது குறிப்பைப் பார்க்கவும்)

அந்த இரு மலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக்குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்டவெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

(திருக்குர்ஆன் 2:158)


அரஃபாத்
மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும்.

ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும். அரஃபாத் பற்றி 2:198 வசனத்தில் குறிப்பிடப்படுள்ளது.




மஷ்அருல் ஹராம்

மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும்.


பாபில் நகரம்

திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது இராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்