Oct 27, 2016

6. ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்?

6. ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்?

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன்தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்தை நாம் கூறி அதனைநடைமுறைப்படுத்தியும் வந்தோம். அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகஎடுத்துரைக்கப்பட்டது.

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து  தலையை உயர்த்தியபோது "ஸமி அல்லாஹூலிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக்கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன்கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்றுகேட்டார்கள். அந்த மனிதர், "நான் தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதைநம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான்கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி)
நூல்: புகாரி 799

மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப்பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், ருகூவிற்குப்பிறகு நாமும் அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்தஅறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில்சொன்னார் என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகைவரிசையில் சேர்ந்து, "அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்றுகூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில்இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதைமொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறுசொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டுவானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்?' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1051)

அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாகவருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில்அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில்இருந்து தெரிகிறது.

நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக்கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும். இதுதான்தற்போது நம்முடைய நிலைப்பாடு ஆகும்.

ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால்ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.

இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம்கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்டசிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தைக் கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதேவாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.
குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்தவாசகத்தைச் சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.

வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்குசிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொருதொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாகஎந்த ஆதாரமும் இல்லை.

மாறாக, அவர்கள் தமது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்றுமட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழுவதற்காக இதே வாசகத்தைக்கூறியுள்ளார்கள்.

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமதுஉணவு விரிப்பை எடுக்கும்போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹூ ரப்பனா'' என்றுபிரார்த்திப்பார்கள்.

பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கேஉரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாததுஆகும்.
புகாரி (5458)

எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு, அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்தவாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இறைவனிடம்கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக, தொழுகையில்ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்தச் சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக்கூடாது.

நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள்என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருகூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூறவேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.

அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போதுகூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில்வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுதுமுடிந்ததும், "உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம்'' என்று பதிலளித்தனர். அதற்குநபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன(ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.  
நூல்: புகாரி 635

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச்செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும்கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 636

அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதிஇல்லை.