Oct 26, 2016

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 12

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 12


பெண்களைத் தொட்டால்


பி. ஜைனுல் ஆபிதீன்

ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:43)


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 5:6)


இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.

இந்த வசனங்களில், "பெண்களைத் தீண்டினால்'' என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களுடன் "உடலுறவு கொண்டால்' என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் குறுக்கே ஜனாஸாவைப் போல் படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(நூல்: புகாரி 519, 382, 513, 1209)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் குறுக்கே படுத்துக் கொள்வார்கள். இதன் காரணமாக ஸஜ்தா செய்ய இடம் போதவில்லை. எனவே ஸஜ்தாவுக்குச் செல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்களின் கால்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது விரல்களால் குத்துவார்கள். ஆயிஷா (ரலி) கால்களை மடக்கிக் கொண்டதும் அந்த இடத்தில் ஸஜ்தா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்ற எழும் கேள்விக்கும் - இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் - விடையளித்துள்ளார்கள். "அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது'' என்பது தான் அந்த விடை!
(நூல்: புகாரி 382, 513)


வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் அவர்கள் ஸஜ்தா செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.

இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.

தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. கால்களை மடக்கிக் கொள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே பெண்களைத் தீண்டினால் என்பதற்கு, பெண்களைத் தொட்டால் என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சில பேர் புதுமையான விளக்கத்தையெல்லாம் கூறி தங்களின் நிலையை நியாயப் படுத்த முனைகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும். அந்த ஆடையின் மேல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.

யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்தால் ஆடையால் மூடப் பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால், காலில் ஆடை கிடக்கின்றதா? இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது.

ஒரு நாள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் படுக்கையில் நான் காணவில்லை. அவர்களைத் தேடி (துளாவிப்) பார்த்தேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் இரு கால்களையும் நாட்டி வைத்து (ஸஜ்தாவில்) இருந்தனர். அவர்களின் உள்ளங்கால்கள் மீது எனது கைகள் பட்டன என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(நூல்: முஸ்லிம் 751)


ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளங்கால்களைத் தொட்டுள்ளனர். இதனால் உளூ நீங்கி விடும் என்றால் உடனே அவர்கள் ஸஜ்தாவிலிருந்து எழுந்து உளூச் செய்து மீண்டும் தொழுதிருப்பார்கள். அல்லது ஸஜ்தா செய்திருப்பார்கள். பெண்களைத் தொடுவதால் உளூ நீங்காது என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஸும் விளக்குகின்றது.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்று கூறுபவர்களில் பலர், சிறு பெண் குழந்தைகளைத் தொட்டாலும் உளூ நீங்கும் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவும் தவறானது என்பதற்குத் தெளிவான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளுடைய மகளான உமாமாவைத் தூக்கிக் கொண்டு தொழுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போது உமாமாவைக் கீழே இறக்கி விடுவார்கள். ஸஜ்தாவிலிருந்து எழுந்ததும் அவரைச் சுமந்து கொள்வார்கள்.

(நூல்: புகாரி 516)


மேலும் மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் தீண்டுதல் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் "லாமஸ்தும்' என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது "லாமஸ' என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதே பொருளைத் தரும் இன்னொரு சொல் "மஸ்' என்பதாகும். இச்சொல்லுக்கும் தொடுதல் என்பதே நேரடிப் பொருளாகும். ஆயினும் இச்சொல்லைப் பெண்களுடன் தொடர்பு படுத்திக் கூறும் போது உடலுறவு கொள்வது என்ற பொருளில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

(அல்குர்ஆன் 2:236)


அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாக ரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 2:237)


"இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று இறைவன் கூறினான்.

(அல்குர்ஆன்3:47)


"எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.


(அல்குர்ஆன்19:20)


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

(அல்குர்ஆன் 33:49)


உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கு கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 58:3,4)


பெண்களை ஆண்கள் தீண்டுதல் என்பதும், ஆண்களை பெண்கள் தீண்டுதல் என்பதும், இருவரும் ஒருவரை மற்றவர் தீண்டுதல் என்பதும் உடலுறவு கொள்ளுதல் என்ற பொருளில் தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் அடிப்படையிலும் பெண்களைத் தீண்டுதல் என்பது உடலுறவு கொள்ளுதல் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதன் அடிப்படையிலும் பெண்களைத் தொடுவதால் உளூ நீங்காது.

தவறுதலாகப் பட்டாலும் உளூ நீங்காது. வேண்டுமென்றே தொட்டாலும் உளூ நீங்காது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் மனைவியரும் ஏராளமான பெண்களும் ஹஜ் செய்தனர். ஹஜ்ஜின் போது தவாஃப் செய்வது கட்டாயக் கடமை என்பதையும், தொழுகையைப் போலவே தவாஃபுக்கும் உளூ அவசியம் என்பதையும் நாம் அறிவோம். இஸ்லாமிய அறிஞர்கள் எவருக்கும் இதில் இரண்டாவது கருத்து இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் கலந்தே தவாஃப் செய்தனர். ஆண்களுக்கு ஒரு நேரம் பெண்களுக்கு ஒரு நேரம் என்று தனியாக ஒதுக்கப் படவில்லை.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, "மக்களுக்குப் பின்னால் வாகனத்தின் மேல் அமர்ந்து தவாஃப் செய்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 464, 1619, 1633, 4853)


நோய்வாய் படாதவர்கள் ஆண்களுடன் கலந்தே தவாஃப் செய்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இவ்வாறு தவாஃப் செய்யும் போது ஆண்களின் கைகள் பெண்கள் மீதும், பெண்களின் கைகள் ஆண்களின் மீதும் படாமல் இருக்க முடியாது. இதனால் உளூ நீங்கும் என்றால் அவர்களின் தவாஃப் செல்லாமல் போய்விடும்.

பெண்களைத் தொடுவதால் உளூ நீங்கும் என்றிருந்தால் இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்க ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள். தொழுகையில் முன்வரிசையில் ஆண்களும், பின்வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும் என்று சட்டம் வகுத்துத் தந்தது போலவே தவாஃபுக்கும் சட்டம் வகுத்திருப்பார்கள்.

அல்லது ஆண்கள் மட்டும் தவாஃப் செய்ய ஒரு நேரத்தையும், பெண்கள் மட்டும் தவாஃப் செய்ய இன்னொரு நேரத்தையும் ஒதுக்கி இதைத் தவிர்த்திருக்க முடியும். இப்படியெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததன் மூலம் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் தொடுவதாலோ, கை படுவதாலோ உளூ நீங்காது என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தீர்ப்பாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

பெண்களைத் தொட்டாலே உளூ நீங்கி விடும் என்ற கருத்துடைய ஷாஃபி மத்ஹபினர் இன்றைக்கும் கூட ஹஜ் கடமையை தமது மத்ஹபின் அடிப்படையில் நிறைவேற்ற முடியாது. அவர்களின் மத்ஹபின் படி ஒருவருடைய ஹஜ்ஜும் செல்லாது.

ஏனெனில் ஹஜ்ஜுக்கு தவாஃப் அவசியம். தவாஃபுக்கு உளூ அவசியம் தவாஃப் செய்யும் போது ஒருவர் மீது ஒருவரின் கை படுவதால் உளூ நீங்கி விடும். ஏழு தடவை சுற்றி முடிப்பதற்குள் எழுபது தடவைக்கு மேல் ஒருவர் மீது ஒருவரின் கைகள் பட்டு விடும். உடனே தவாஃப் முறிந்து விடும். இதனால் ஹஜ்ஜும் செல்லாமல் போய் விடும்.

"ஹஜ்ஜுக்கு செல்லும் போது ஷாஃபி மத்ஹபிலிருந்து மதம் மாறி வேறு மத்ஹபில் சேர்வதாக நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஹஜ் கூடாமல் போய் விடும்'' என்று சொல்லி அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தச் சட்டத்தின் படி ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜையே நிறைவேற்ற முடியவில்லை என்பதிலிருந்து இது ஏற்கத்தகாத, நடைமுறைப் படுத்த இயலாத சட்டம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

(EGATHUVAM APR 2004)