தொழுகையின் சட்டதிட்டங்கள்
(பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 7
உளூவின் சட்டங்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
உளூச் செய்து முடித்த பின்....
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ்
எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது
நபிவழியாகும்.
??? அரபி
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது
அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும்
கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர்
விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம் 345
நூல் : முஸ்லிம் 345
வானத்தை நோக்கி பார்வையை உயர்த்தி இந்த துஆவை ஓத வேண்டும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அஹ்மத் 116, 16723, அபூதாவூத் 145 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று
அறிவிப்புகளுமே பலவீனமானவையாகும்.
ஏனெனில் அபூஉகைல் என்பார் தனது சிறிய தந்தை
மகன் வழியாக அறிவிப்பதாக இந்த மூன்று அறிவிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது.
அபூஉகைலின் சிறிய தந்தையின் மகன் யார் என்பது பற்றி எந்த விபரமும் இல்லை. எனவே
யாரென அறியப்படாத ஒருவர் வழியாக மட்டுமே இந்தச் செய்தி அறிவிக்கப்படுவதால் இதை
ஆதாரமாகக் கொள்ள முடியாது.
வானத்தை நோக்கி பார்வையை உயர்த்தி மேற்கண்ட
துஆவை ஓத வேண்டியதில்லை. மற்ற துஆக்களை ஓதுவது போலவே இதையும் ஓதலாம்.
மேற்கண்ட துஆவுடன்,
"அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன, வஜ்அல்னீ
மினல் முத்ததஹ்ஹிரீன'''என்பதையும்
சேர்த்து ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதி 50ல் பதிவு
செய்யப் பட்டுள்ளது.
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதி
அவர்கள், "இதன்
அறிவிப்பாளர் வரிசையில் குழப்பம் உள்ளது'' எனக் கூறியுள்ளார்கள்.
ஆயினும் திர்மிதியின் இந்த விளக்கத்தை இமாம்
நவவீ அவர்கள் மறுக்கின்றார்கள். குழப்பம் திர்மிதியிடம் தான் உள்ளது எனவும்
கூறுகின்றார்கள். நவவீ அவர்களின் ஆட்சேபணை ஏற்புடையதாக உள்ளது.
எனவே மேற்கண்ட துஆவுடன்
"அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன் வஜ்அல்னீ மினல் முத்ததஹ்ஹிரீன்' என்பதையும்
சேர்த்து ஓதிக் கொள்ளலாம்.
"வஜ்அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன்'' என்பதையும்
சேர்த்து ஓதும் வழக்கம் தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. இதற்கு
எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.
ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி
துஆக்கள்
ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக்
ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய
துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும்
வருகின்றனர்.
இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது ஓதுவதற்கென எந்த
துஆவையும் தாமும் ஓதியதில்லை. நமக்கும் கற்றுத் தரவில்லை.
எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின்
அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) தற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள்
நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
இரண்டு ரக்அத்கள் தொழுதல்
எப்போது உளூச் செய்தாலும் செய்தவுடன் இரண்டு
ரக்அத்கள் தொழுவது அதிகம் நன்மையைப் பெற்றுத் தருவதாகும்.
....நான் உளூச் செய்தது போல் யார் உளூச் செய்து
விட்டு வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவரது முன்
பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி),
நூல் : முஸ்லிம் 333
நூல் : முஸ்லிம் 333
ஒரு உளூவில் பல தொழுகைகளைத்
தொழுதல்
ஒரு தடவை உளூச் செய்த பின் அந்த உளூ நீங்காத
வரை எத்தனை தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் உளூச் செய்ய
வேண்டிய அவசியம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு
தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.
அப்படியானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்று அனஸ்
(ரலி) யிடம் கேட்டேன். அதற்கவர்கள், "உளூ
நீங்காத வரை ஒரு உளூவே எங்களுக்குப் போதுமானதாகும்'' என
விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஆமிர் (ரலி),
நூல் : புகாரி 214
நூல் : புகாரி 214
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்
போது ஒரு உளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது
மஸஹ் செய்தார்கள். "இன்றைய தினம் ஒருநாளும் செய்யாத ஒன்றைச் செய்தீர்களே!'' என்று
உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உமரே! வேண்டுமென்று தான் அவ்வாறு செய்தேன்'' என்று
விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி),
நூல் : முஸ்லிம் 415
நூல் : முஸ்லிம் 415
வளரும் இன்ஷா அல்லாஹ்
(EGATHUVAM SEP 2003)