இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்: 23
இஹ்யாவில்
இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ
மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
இதுவரை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்
செய்யக்கூடாது என்று விரிவாகப் பார்த்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏற்படுகின்ற பயங்கர
விளைவுகள் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் பார்த்தோம்.
இந்த அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக கஸ்ஸாலி
தனது இஹ்யாவில் அள்ளிக் கொட்டியிருக்கின்ற பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, அறிவிப்பாளர் தொடரில்லாத சில ஹதீஸ்களைப்
பார்ப்போம்.
பொய்யான ஹதீஸ் - 1
நான் அறிவுமிக்கவன். ஒவ்வொரு அறிவுமிக்கவனையும்
நான் நேசிக்கின்றேன் என்று இப்ராஹீம் நபிக்கு கண்ணியமும் மகத்துவம் நிறைந்த
அல்லாஹ் வஹீ அருளினான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு அப்துல் பர்ரு இந்தச் செய்தியை தொடர்பு
அறுந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதற்கு நான் எந்த தொடரையும் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கீ தெரிவிக்கின்றார்கள்.
இப்னு சுபுக்கியும் இதை அறிவிப்பாளர் தொடர்
கிடைக்காத ஹதீஸ்களின் நூலான தபக்காத் என்ற நூலில் கொண்டு வருகின்றார்.
பொய்யான ஹதீஸ் - 2
சீனா சென்று கூட கல்வி தேடுங்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு அதிய்யி பதிவு செய்திருக்கின்றார். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை பைஹகி மத்கல், ஷுஃபுல் ஈமான் நூலில் பதிவு செய்து, "இந்த ஹதீஸ் பிரபலமானது; ஆனால் இதன் அறிவிப்பாளர் தொடர்கள் பலவீனமானவை' என்று தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறே இது தொடர்பாக ஹாபிழ் இராக்கி அவர்களும்
தெரிவிக்கின்றார்கள்.
இது தவறான செய்தியாகும். இப்னுல் ஜவ்ஸி அவர்கள்
இதை தனது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலில் கொண்டு வருகின்றார்
என அல்பானி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சீனம் சென்றேனும் ஞானம் தேடு என்று கவிதை
நடையில் தமிழக ஆலிம்கள் தங்கள் பயான்களில் அடித்து விடுவார்கள். ஆலிம்களும்
இஸ்லாமியப் பேச்சாளர்களும் கல்வியைப் பற்றிப் பேசும் போது இந்த ஹதீஸைச் சொல்லாமல்
விட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பொய்யான ஹதீஸுக்கு மதிப்பும் மரியாதையும்
மக்களிடம் பெற்றிருக்கின்றது.
பொய்யான ஹதீஸ் - 3
"ஆயிரம் ரக்அத்துகள் தொழு
வதை விடவும் ஆயிரம் நோயாளிகளை நலம் விசாரிப்பதை விடவும் ஆயிரம் ஜனாஸாக்களில்
கலந்து கொள்வதை விடவும் ஓர் ஆலிமின் அவையில் வருகை அளிப்பது மிகச் சிறந்ததாகும்'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின்
தூதரே! குர்ஆன் ஓதுவதை விடவுமா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு, "கல்வி இல்லாமல் குர்ஆன் பயனளிக்குமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அதுவும் உமர்
(ரலி) அறிவிப்பதாகத் தான் இந்த ஹதீஸ் வருகின்றது. கஸ்ஸாலி குறிப்பிடுவது போன்று
அபூதர் (ரலி) வழியாக இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி அறிவிக்கப்படவில்லை.
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் மவ்லூஆத் என்ற
நூலில் இதைக் கொண்டு வந்துள்ளார்கள் என ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஒரு
போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று இதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து
கொள்ளலாம்.
ரசூல் (ஸல்) அவர்கள் ஆயிரம் ரக்கஅத்துகள்
அளவிற்கு தொழ வேண்டும் என்று சிறப்பித்துச் சொன்ன எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண
முடியாது. அதே சமயம், கடமையல்லாத உபரியான தொழுகைகளின் பெயர்
குறிப்பிட்டும் பெயர் குறிப்பிடாமலும் நபி (ஸல்) அதிகம் அதிகம்
கூறியிருக்கின்றார்கள்.
நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது, குர்ஆன் ஓதுவது குறித்தும் நபி (ஸல்) சிறப்பித்துக் கூறிய
ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஹதீஸ் வீதம் எடுத்துக்காட்டாகப்
பார்ப்போம்.
யார் இரவு பகலில் பன்னிரண்டு ரக்கஅத்துகள்
தொழுகின்றாரோ அவருக்கு அதற்குப் பதிலாக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது
என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1198
"ஆதமின் மகனே! நான்
நோயுற்றிருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?' என்று (அடியானிடம்) அல்லாஹ் மறுமை நாளில் விசாரிப்பான். "இறைவா! நீ அகிலத்தின்
ரட்சகன் ஆயிற்றே! (நீ எப்படி நோயுறுவாய்) உன்னை நான் எப்படி விசாரிக்க முடியும்?' என்று அடியான் கேட்பான். அதற்கு அல்லாஹ், "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான். அவனை நீ
விசாரித்திருந்தால் என்னைக் கண்டிருப்பாய்' என்று பதில் அளிப்பான்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4661
"ஜனாஸா தொழுகையில் பங்கேற்
கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து
கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது
"இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1325
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார்.
குர்ஆனை (மனனம் செய்திரா விட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி
வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4937
இவை ஒவ்வொன்றும் இஹ்யாவில் இடம்பெற்ற மேற்கண்ட
பொய்யான ஹதீஸில் கூறப்பட்ட அமல்களுக்கு ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய சிறப்புகளாகும்.
இந்தச் சிறப்புகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில்
தான் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் அமைந்துள்ளது. அத்துடன், ஆலிம்கள் என்ற
பெயரில் உள்ள இன்றைய கப்ரு வணக்கப் பேர்வழிகளுக்கு குறிப்பாக அப்துல்லாஹ் ஜமாலி
போன்ற ஆட்களுக்கு முன்னால் அமர்ந்தால் அதன் இலட்சணம்
எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். இந்த பலே
ஆசாமிகளின் முன்னால் அமர்ந்தால், இவர்கள் நம்மை
நிச்சயமாக நிரந்தர நரகத்தின் கொள்ளிக் கட்டைகளாக மாற்றி விட்டுத் தான் நகர்வார்கள் என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை.
இப்படி நரகத்தில் நம்மைக் கொண்டு போய்
தள்ளுகின்ற நாசகார நச்சுக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க
மாட்டார்கள் என்பதைச் சாதாரண பாமரனும் உணர்கின்றான். இதை கல்விக் கடலான
கஸ்ஸாலியால் உணர முடியவில்லை. அத்துடன் இது, ஸனது அடிப்படையில் ஆதாரமில்லாத, இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பது மட்டுமல்லாமல், கருத்து அடிப்படையிலும் அபத்தமான, மிகவும் ஆபத்தான ஹதீஸாகும்.
மொத்தத்தில், இந்தப் பொய்யான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் எந்தத் தனி நபர் வழிபாட்டைத்
தகர்த்தெறிந்தார்களோ அந்தத் தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்கின்ற விதத்தில்
அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் பாதகமான ஹதீஸாகும்.
இப்படிப்பட்ட பொய்யான ஹதீஸ்களைத் தான் கஸ்ஸாலி
இஹ்யாவில் பரவ விட்டிருக்கின்றார்.
பொய்யான ஹதீஸ் - 4
"எனது சமுதாயம் கொள்கின்ற
கருத்து வேறுபாடு (இறைவனின்) அருட்கொடையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இது எந்த அடிப்படையும் இல்லாத செய்தியாகும்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் இதற்கு ஒரு ஸனதைத் தேடி பெருமுயற்சி எடுத்துவிட்டார்கள்.
ஆனால் அவர்களால் இதற்கு எந்த ஒரு ஸனதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
"இப்படி ஒரு செய்தி ஹதீஸ்
கலை அறிஞரிடத்தில் அறியப்பட வில்லை. இதற்கு எந்த ஒரு ஆதாரமான, பலவீனமான ஏன் இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் நான்
காணவில்லை' என்று சுபுக்கீ கூறியதாக மனாவீ
தெரிவிக்கின்றார்.
தஃப்ஸீர் பைளாவியின் அடிக்குறிப்பில் ஷைகு
ஜகரிய்யா அல் அன்சாரி இதை மேலும் உறுதிப்படுத்துகின்றார். இப்னு ஹஸ்மு அவர்கள், இது ஹதீஸே கிடையாது என்று தெரிவித்து விட்டுப் பின்வருமாறு
கூறுகின்றார்கள்:
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கருத்து படுமோசமான கருத்தாகும். "சமுதாயத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் இறைவனின் அருட் கொடை' என்றால் ஒற்றுமை, ஒத்தக் கருத்து என்பது அவனுடைய சாபக்கேடு என்ற பாதகமான கருத்தை இது
தருகின்றது. இப்படி ஒரு கருத்தை ஒரு முஸ்லிம் கூறமுடியாது.
ஏனெனில், கருத்து வேறுபாடு இருந்தால், கருத்து
ஒற்றுமை இருக்காது. அருட்கொடை இருந்தால் சாபக்கேடு இருக்காது என்று இப்னு ஹஸ்மு குறிப்பிடுகின்றார்.
மற்றொரு இடத்தில், இது பொய்யான செய்தியாகும் என்றும்
தெரிவிக்கின்றார்.
உண்மையில் இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்)
அவர்கள் கூறியிருக்கவே முடியாது. இஸ்லாமிய மார்க்கமே முரண்பாடுகளால்
சூழப்பட்டுள்ளது போன்ற ஒரு கருத்தை இந்தச் செய்தி தருகின்றது. சுன்னத் வல்
ஜமாஅத்தினர் தங்கள் மத்ஹபுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்கு, கஸ்ஸாலி பதிந்துள்ள இந்தப் பொய்யான செய்தியையே ஆதாரமாகக்
காட்டுகின்றனர்.
ஆனால் வல்ல அல்லாஹ்வோ, ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் திருக்குர்ஆன்
மற்றும் ஹதீஸில் அதற்குத் தீர்வு இருக்கின்றது என்று கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக்
கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்)
உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள்
முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும்
கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
அல்குர்ஆன் 4:59
பொய்யான ஹதீஸ் - 5
"குறைந்த இறை உதவி, அதிகமான கல்வியை விடச் சிறந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி இஹ்யாவில் அளந்து
விடுகின்றார். இது பற்றி ஹாபிழ், இதற்கு எந்த
ஓர் அடிப்படையையும் நான் காணவில்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்)
வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார்.
அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனத்திற்கு நேர்மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்
அமைந்துள்ளது.
கஸ்ஸாலி இது போன்று மார்க்கத்தின் பெயரால்
பொய்யான ஹதீஸ்களை இன்னும் ஏராளமாக இஹ்யாவில் கொட்டியிருக்கின்றார். அவற்றையும் இனி
பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
EGATHUVAM DEC 2015