Feb 27, 2017

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம் - 2

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம் - 2
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
சென்ற இதழின் தொடர்ச்சி....
இணை கற்பித்தல் என்றால் ஏன்ன?
நாம் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர் மறையான இணை வைத்தல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்துமே இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் பெரும் அறியாமையிலேயே வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
அவர்கள் இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக, முன்னேற்றத்திற்காகச் செய்கின்ற முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட இந்த மாபெரும் அநியாயத்தை அகற்றுவதற்காகவோ அல்லது அவர்கள் அதனை அறிந்து தவிர்ந்து வாழ்வதற்காகவோ செய்வது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் தீனை நிலைநாட்டப் போகிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் கூட தீனின் அடிப்படையைத் தகர்க்கக் கூடிய இந்த இணைவைத்தல் எனும் பாவத்தை அறியாதவர்களாகத் தான் உள்ளனர்.
திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவையெல்லாம் இணை கற்பிக்கின்ற காரியங்கள் என்று நமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அவற்றை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அல்லாஹ் எந்த ஆற்றலையும் ஏற்படுத்தாத பொருட்களில், காரியங்களில், இடங்களில் நமக்குப் பலன் இருப்பதாக நம்புதல். அதாவது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை அவற்றால் நீக்கிவிட இயலும், நமக்கு நன்மைகளை அவை தந்து விடும் என்று நம்பிக்கை வைப்பது. இவ்வாறு ஒருவன் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்.
2. அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது. அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள் பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ, மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல். மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறுவது கூடாது. இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான்.
3. இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை இறைவனல்லாதவர்களுக்குச் செய்தால், அல்லது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அவனுக்காகச் செய்வதற்கு மறுத்தால் அவனும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
4. இறைவன் வஹீயாக இறக்கி வைத்த இறைச் சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும். ஒருவன் இறைவனுடைய வஹீயான இறைச் சட்டங்களை மறுத்தாலோ, அல்லது இறைவனல்லாத மற்றவர்களின் கருத்தையோ அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்டவற்றையோ, அல்லது தன்னுடைய மனோ இச்சையையோ மார்க்கமாகக் கருதினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த வனாவான். இறைவனல்லாதவர்களைக் கடவுளர்களாக வணங்கியவனாவான்.
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் நடைபெறுகின்ற சில இணை கற்பிக்கின்ற காரியங்களில் மேற்கண்ட நான்கு வகையுமோ அல்லது அதிகமானவையோ நிறைந்து காணப்படும்.
உதாரணமாக சமாதி வழிபாட்டை எடுத்துக் கொள்வோம். அதில் சமாதி எனும் மண்சுவர் நமக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தடுத்துவிடும்; நமக்கு நன்மைகளைக் கொண்டு வந்து விடும் என்று சமாதி வழிபாடு செய்பவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதன் காரணமாகத் தான் சமாதிகளைச் சுற்றி வலம் வருகின்றனர்.
சமாதிகளையும், தர்ஹாவின் நிலைப்படிகளையும், மூலைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். சமாதியில் வழங்கப்படும் சந்தனத்தைக் கழுத்திலும் தலையிலும் பூசிக் கொள்கின்றனர். கொடிமரங்களைத் தொட்டு முத்தமிடுகின்றனர். சாம்பலும் சர்க்கரையும் கலந்து வழங்கப்படும் பொருளைப் புனிதமாகக் கருது கின்றனர். இது நாம் வகைப் படுத்தியதில் முதலாவது வகையான இணை வைத்தலாகும்.
மறைவானவற்றை அறிதல், உள்ளத்தில் உள்ளவற்றை அறிதல், ஒரே நேரத்தில் பலர் பேசுவதை அறிதல் போன்ற இறைவனுக்கே மட்டும் உரித்தான பண்புகள் சமாதிகளில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களுக்கும் இருப்பதாக, சமாதி வழிபாடு செய்வோர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான், "யா முஹ்யித்தீன் கவ்சுல் அஃலம் (முஹ்யித்தீனே! மகதத்தான இரட்சகரே!)' என்றெல்லாம் அழைக்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் இரண்டாவது வகையான இணை கற்பித்தலாகும். அதாவது இறைத் தன்மைகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புதல்.
இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளான பிரார்த்தனை செய்தல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், ஸஜ்தாச் செய்தல் போன்ற பல வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் மூன்றாவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.
மேலும் ஊர்வலம், சந்தனக்கூடு, கந்தூரி, உரூஸ் போன்றவற்றை உருவாக்கி அவற்றை மார்க்கமாகப் பின்பற்றுகின்றனர். இறைவனால் இறக்கப்பட்ட இறைச் சட்டமாகிய வஹீயில் இது போன்ற கட்டளைகள் கிடையாது. மொத்தத்தில் சமாதி வழிபாடு என்ற ஒன்றே இறைக் கட்டளைகளில் கிடையாது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது நாம் வகைப்படுத்தியதில் நான்காவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.
நாம் வகைப்படுத்திய நான்கு வகைகளையும் நாம் மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல வழிகெட்ட கொள்கைகள் ஒரு மனிதனிடம் புகுந்து விடும் போது ஓரிறைக் கொள்கையை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு தான் உத்தரவிடுகிறான்.
வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதைக் கற்றுக் கொள்வீராக.
அல்குர்ஆன் 47:19
பின்வரும் வசனத்தில் இறைக் கட்டளைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவுமே உண்மையான இறையடியார்களாக, அதாவது ஏகத்துவவாதிகளாக ஆக முடியும் என்பதைத் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள் என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப் பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்! (என்றே கூறினர்)
அல்குர்ஆன் 3:79
நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் இவற்றைத் தாமும் கற்றுக் கொள்வதோடு தர்பியா போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி பெரியவர் களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் முயற்சி, தியாகம் செய்ய வேண்டும்.
வழிகெட்ட இயக்கத்தினர்கள் தங்களுடைய வழிகேட்டைப் பல வழிகளிலும் புகுத்தி மறுமையில் நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காலகட்டத்தில், மக்களை இதிலிருந்து பாதுகாப்பது, எச்சரிக்கை செய்வது நம்முடைய தலையாய கடமையாகும். நிச்சயமாக இந்தக் கொள்கையை அறிந்தவர்களைத் தவிர வேறு யாரும் இதற்காகத் தியாகம் செய்ய மாட்டார்கள்.
இனி நாம் இணைவைத்தலின் முதல் வகையை விரிவாகக் காண்போம்.
இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல்
அல்லாஹ் இவ்வுலகில் பல்வேறு பொருட்களைப் படைத்துள்ளான். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு தன்மைகளை வழங்கியுள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் என்ன தன்மையை வழங்கியுள்ளானோ அதை மீறிய சக்தி ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் நிச்சயமாக அது இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
உதாரணமாக எலுமிச்சையை எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் சர்பத் தயாரிக்கலாம்; எலுமிச்சையை ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம்; சமையலுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற காரியங்களுக்காக ஒருவன் எலுமிச்சையைப் பயன்படுத்தினால் அது இணை கற்பித்தலாகாது. மாறாக ஒரு எலுமிச்சையை வாகனத்தின் முன்னால் கட்டித் தொங்க விட்டால் அது வாகனத்தையே காப்பாற்றும் என நம்புவது அதில் அல்லாஹ் என்ன பலனை ஏற்படுத்தவில்லையோ அதை இருப்பதாக நம்புவதாகும். இது இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும்.
இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என உலக மக்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ள சிலை வழிபாடும் இவ்வகையான இணை வைத்தலைச் சார்ந்தது தான்.
சிலை வழிபாட்டில் நாம் வகைப்படுத்திய நான்கு வகையான இணை வைப்பும் நிறைந்துள்ளன என்றாலும் அதற்கு அடிப்படையான காரணம் இந்த முதல் வகையான இணைவைப்பு தான். அதாவது கற்களில் இல்லாத பலனை இருப்பதாக நம்புவது.
சிலை வழிபாட்டைத் தகர்த்த இஸ்லாம்
திருமறைக் குர்ஆன் சிலை வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. பின்வரும் திருமறை வசனங்கள் இதைத் தெளிவாக விளக்குகிறது.
சிலைகள் எனும் அசுத்தத் திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 22:30
இறைவா! இவ்வூரை அபய மளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!. இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 14:35, 36
சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 6:90
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக! என்று கேட்டனர். நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள் என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. அல்லாஹ் அல்லாதோரையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக் கிறான் என்று (மூஸா) கூறினார்.
அல்குர்ஆன் 7:138-140
நபியவர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமே சிலை வழிபாடுகளை ஒழிப்பதற்குத் தான்.
"அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், "என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?'' என்று கேட்டேன். அதற்கு, "இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவு மில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1512
சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?
கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல.
அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரை களையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.
அல்குர்ஆன் 34:13
ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்திற்கு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சிலை வடிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உருவம் வரைபவனைச் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி),
நூல்: புகாரி 2086
உருவம் வரைதல் என்பது சிலை வடிப்பதையும், படங்கள் வரை வதையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.
(பள்ளிக் கூட மாணவர்கள் படம் வரைவது, சிறிய அளவிலான உருவங்கள், ஆதாரங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்காக போட்டோ எடுப்பது இவற்றைப் பற்றி முந்தைய ஏகத்துவ இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பி னார்களோ அந்தப் பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ
நூல்: முஸ்லிம் 1764
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் வைத்து, "மது பானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின்  அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3223
சிலைகள் அறவே கூடாது என்று இறைவன் கட்டளையிட்டதற்குக் காரணம் கற்களில் இல்லாத சக்தியை இருப்பதாக நம்பிக்கை கொள்வது தான். இந்த நம்பிக்கை தான் அச்சிலைகளை வணக்கத்திற்குரியதாக மாற்றி விட்டது.
ஒரு கற்பாறையை வீட்டின் வாசற்படியாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதையே கற்சிலையாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதற்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அதன் தன்மை மாறாது. ஆனால் சிலை வணங்கிகள் உருவமாகச் செதுக்கப்பட்ட கற்களில் இல்லாத தன்மையைக் கற்பனை செய்து இறைவனுடைய ஆற்றல்களெல்லாம் அதற்கு இருப்பதாக இட்டுக் கட்டுகின்றனர்.
திருக்குர்ஆன் சிலைகளைப் பற்றி பேசும் அதிகமான இடங்களில் இரண்டு வாதங்களை முன் வைக்கின்றது.
*          ஒன்று, அந்தச் சிலைகள் எந்தப் பயனையும் தராது.
*          இரண்டாவது, அவற்றால் எந்த இடையூறையும் செய்ய முடியாது.
பயனையும், இடையூறையும் செய்கின்ற ஆற்றல் சிலைகளுக்கு இருக்கிறது என்று நம்பிய காரணத்தினால் தான் அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். இணை வைப்பாளர்களாக ஆனார்கள்.
இதோ இறை வசனங்களைப் பாருங்கள்:
இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந் தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராத வற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? (என்றும் கேட்டார்.)
அல்குர்ஆன் 21:62-67
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
அல்குர்ஆன் 29:16, 17
அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 5:76
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:55
நன்மையோ, தீங்கோ செய்ய இயலாத கற்களிடம் அந்தச் சக்தி இருப்பதாக நம்பிய காரணத்தினால் சிலைகளை உடைக்குமாறும் அவ்வாறு நம்பிக்கை வைத்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் திருமறை பேசுகின்றது.
கலையழகிற்காக ஒருவன் சிற்பங்களை வடித்தாலும் அறியாத சமுதாயத்தினர் அதை வணங்கப்படும் பொருளாக ஆக்கி விடலாம் என்பதால் தான் நபியவர்கள் உருவப் படங்களை வரைவதற்குக் கூடத் தடை விதித்தார்கள். விபச்சாரத்தைத் தடுக்கின்ற இஸ்லாம் விபச்சாரத்தைத் தூண்டும் சிறிய, பெரிய வாயில்கள் அனைத்தையும் அடைக்கின்றது. அதுபோல் நபியவர்கள் உருவ வழிபாட்டைத் தோற்றுவிக்கும் அனைத்து வாயில்களையும் அடைப்பதற்கு வழிகாட்டியுள்ளார்கள்.
சிலை வழிபாடு என்பதன் பொருள், உருவமாகச் செதுக்கப்பட்டவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புவது மட்டுமல்ல. மாறாக எந்த ஒரு பொருளுக்கு இது போன்ற ஆற்றல் இருப்பதாக நம்பினாலும் அது சிலை வழிபாடு தான். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.
சமாதி வழிபாடும் சிலை வழிபாடே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வே! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக்கி விடாதே! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக எடுத்துக் கொண்ட சமுதாயத்தை அல்லாஹ் சபித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத் 7054
நபியவர்கள் தன்னுடைய கப்ர், சிலையாக ஆகி விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். கப்ர் என்பது சிலை அல்ல. பிறகு ஏன் நபியவர்கள் கப்ரை சிலையாகக் குறிப்பிட்டார்கள் என்பதை நாம் நன்றாகச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
உருவமாகச் செதுக்கப்பட்ட கற்சிலை நன்மையோ, தீங்கோ செய்ய முடியுமென்று நம்பிக்கை வைத்த வர்கள் இணை வைப்பாளர்கள் என்றால் கப்ர் என்ற மண்சுவர் நன்மையோ, தீங்கோ செய்ய முடியும் என்று நம்பிக்கை வைப்பவர்களும் இணை வைப்பாளர்களே!
இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உயர்த்தப்பட்ட கப்ருகளையும் இணைத்து அதனைத் தரைமட்டமாக்குமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1764
ஏதாவது ஒரு பொருளில் இறைவன் ஏற்படுத்தாத தன்மைகள் இருப்பதாகக் கருதி அதனால் நமக்கு நன்மைகளைக் கொண்டு வரவோ, தீமைகளைத் தடுக்கவோ இயலும் என்று ஒருவன் நம்பினால் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
சிலை வணக்கமும் கொடி மரமும் சமமே!
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத் என்று அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலீ)
நூல்: திர்மிதீ 2106, அஹ்மத் 20892
இலந்தை மரத்தின் கீழ் ஒருவன் நிழலுக்காகப் படுத்தால் அது இணை வைத்தலாகாது. ஏனென்றால் மரத்தின் மூலம் நிழல் பெறும் பாக்கியத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் அதே மரத்தின் கீழ் தங்கினால் நமக்கு நல்லது நடக்கும் என்று இல்லாத ஒன்றை நம்பி அதன் கீழ் தங்குவதை, அதைப் புனிதப்படுத்துவதை நபியவர்கள் சிலை வணக்கத்திற்கு நிகராகக் குறிப்பிடுகிறார்கள்.
சிலுவையை உடைத்தெறிந்த இஸ்லாம்
சிலுவை என்பது கூட்டல் குறியீட்டைப் போன்று மரத்தாலோ அல்லது ஏதாவது ஒரு உலோகப் பொருளாலோ ஆன ஒன்று தான். ஆனால் கிறிஸ்தவர்கள் சிலுவையின் மூலம் நன்மை தீமை உண்டாக முடியும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உருவச் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியது போல் சிலுவைகளையும் அப்புறப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்ததில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 5952
சிலுவையை வணங்கியவர்கள் மறுமையில் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை நபியவர்கள் குறிப்பிடும் போது, சிலை வணக்கம் செய்தவர்களோடு இணைத்துத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நால்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள்.
நூல்: புகாரி 7439
சிலுவையை நபியவர்கள் சிலை யோடு இணைத்துக் கூறுதவற்குக் காரணம் சிலைகளுக்கு எப்படி இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புகிறார்களோ அதுபோல் சிலுவைகளில் இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புவதால் தான்.
தாயத்து, தகடுகள்
எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வைத்தல் ஆகியவையாகும். இதில் இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல.
நாம் உடலில் தொங்க விடும் ஒரு பொருளை தாயத்து என்கிறோம். ஆனால் அது மட்டும் தாயத்து அல்ல! மாறாக நமக்கு நன்மையைக் கொண்டு வரும், தீமையைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் எந்த ஒரு பொருளைத் தொங்க விட்டாலும், மாட்டி வைத்தாலும், கட்டி வைத்தாலும் அது தாயத்தே ஆகும்.
இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இது போன்ற இணை கற்பிக்கும் காரி யங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
திருமணப் பந்தலில் குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர்.
மஞ்சள் நிறமும், மஞ்சள் பைகளும் மங்களகரமானது என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆரத்தி எடுத்தால் அது கண் திருஷ்டியைப் போக்கி விடும்.
தாலி என்பதைக் கழுத்தில் தொங்க விடுவதால் பல்வேறு பலன்கள் ஏற்படும்.
மணமகன் மாலை மாட்டுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை, மணமகன் அணிந்த மாலையில் கால்பட்டு விட்டால் கணவன் மனைவிக்கு ஆகாது; எனவே திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து அந்த மாலையை கால் படாதவாறு எங்காவது கிணற்றிலோ ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.
வீடு கட்டும் போது பூசணிக் காயையோ, சோளக்கொல்லை பொம்மையையோ தொங்கவிட்டால் அது வீட்டிற்கு வரும் ஆபத்துகளைத் தடுக்கும்.
வீட்டிற்கு மேல் கருப்பு வெள்ளைப் புள்ளிகள் போடப்பட்ட பானைகளை வைத்தால் அது கண் திருஷ்டியைத் தடுக்கும்.
வீட்டு வாசலில் சங்கு, சீனாக்காரம், சிப்பி போன்றவற்றைத் தொங்க விட்டால் அவை வீட்டிற்கு ஏற்படும் முஸீபத்துகளைத் தடுக்கும்.
புது வீடு கட்டுவதற்கு முன்னால் சேவலை அறுத்து அதன் இரத்தத்தைத் தெளித்தால் அது அந்த இடத்திலுள்ள பேய் பிசாசுகளை விரட்டி விடும்.
வீட்டிற்கு நிலை விடும்போது அதன் குழியில் காசு அல்லது பாலை ஊற்றினால் வீட்டிற்கு நல்லது என்ற நம்பிக்கை.
வீட்டின் அடுப்பங்கரை கிழக்குப் பகுதியில் இருந்தால் தான் வீட்டிற்கு நல்லது.
காசு வாங்கும் கல்லாப் பட்டறை மேற்கு அல்லது தெற்குத் திசையில் இருந்தால் தான் கடைக்கு நல்லது.
வீட்டிற்கு வாசற்படிகள் அமைக்கும் போது தெருவிலுள்ள முதல்படி இலாபம், இரண்டாவது படி நஷ்டம், மூன்றாவது படி லாபம், நான்காது படி நஷ்டம் என்ற வரிசைப் பிரகாரம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் படி இலாபமாகத் தான் இருக்க வேண்டும். அது தான் வீட்டிற்கு நல்லது என நம்பிக்கை வைத்துள்ளனர்.
குழந்தையின் கன்னத்தில் வைக்கும் கருப்புப் பொட்டு குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டியைத் தடுத்து விடும்.
ரூபாய், வெற்றிலை அல்லது ஏதாவது ஒரு பொருளை நோய் ஏற்பட்டவரின் மீது நன்றாகச் சுற்றி வீதியில் போட்டு விடுவார்கள். இதற்குக் கழித்து வைத்தல் என்பார்கள். யார் அதைத் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு இந்த முஸீபத் சென்று விடும்.
தர்ஹாவிலுள்ள சந்தனம், கொடிமரம், எண்ணை, நெருப்பு, சர்க்கரை, யானை என அனைத்தும் நமக்கு நன்மையைத் தரும்.
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாகப் பல்வேறு நம்பிக் கைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு நமக்கு நன்மையையோ, தீமையையோ கொண்டு வருகின்ற ஆற்றல் ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் அது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த நம்பிக்கை தாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் நபியவர்கள் தாயத்து அணிவதை இறைவனுக்கு இணைகற்பித்தல் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின் றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: அஹ்மத் 16781
"நிச்சயமாக (இணைவைக்கும் வரிகளால்) ஓதிப்பார்ப்பதும், தாயத்துகள் அணிவதும், திவ்லாக்கள் அணிவதும் இணைவைத்தலாகும் என்பது நபி (ஸல்) அவர்களிட மிருந்து நாங்கள் மனனமிட்ட செய்திகளில் உள்ளதாகும்'' என்று இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். அப்போது இப்னு மஸ்வூது அவர்களின் மனைவி "திவ்லா'' என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூது அவர்கள் "தூண்டிவிடக் கூடியது'' என்று கூறினார்கள். (அதாவது அது கணவன் மனைவிக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அணிவது)
நூல்: அல் முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானீ (1442)
சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்
இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல் இணை கற்பிக்கின்ற காரியமாகும் என்பதையும் அதற்குரிய சான்றுகளையும் பார்த்து வருகின்றோம்.
சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல், உருவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.
நபியவர்கள், "இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே''என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது; மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.
சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.
அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும்.
அல்லாஹ்வின் சாபம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத் தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 925
நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்'' எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லா திருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1390
நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்குப் பணிதல், அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத் தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப் படவில்லை. இன்றளவும் நபியவர் களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.
"இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்'' என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும், ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.
மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்
உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 918
கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்கதலமாக்குவதாகும்.
இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப் படுத்துகிறது.
கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது
இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ் விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.
அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.
இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரைப் பள்ளி வாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம்.
இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்து எறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ
நூல்: முஸ்லிம் 1764
நபியவர்களின் பார்வையில் சமாதிகள்
கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1430)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)
நூல்: முஸ்லிம் (1768, 1769)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறை யையும் குளியலறையையும் தவிர
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் (11801)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: அபூ தாவூத் (1746)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே சமாதிகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
சபிக்கப்பட்ட பெண்கள்
கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி (976)
பெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக்காகப் பொது மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்ருகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.
சமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
கோமாளிக் கூத்து
தமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித் தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங் களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1430)
வீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும் வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான்.
ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு ஒரு வீடு இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே நபியவர்கள் விளக்குகிறார்கள்.
அது போன்று தான் "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டார்கள்'' என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல், ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்கியிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது  போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.
எனவே மேற்கூறப்பட்ட இணை வைத்தலின் வகைகளை நாம் விளங்கி, அவற்றிலிருந்து விலகி, நிரந்தர நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவோமாக!

EGATHUVAM FEB 2016