Feb 28, 2017

8. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு

தொடர்: 8             ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

நோய் நிவாரணம் தருவது யார்?

எம். ஷம்சுல்லுஹா
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும்.
பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலாம், ஸலவாத்துச் சொல்லியும் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் அருமையாகத்  துவங்கும். இவற்றைப் படிக்கவும், பாடவும் ஆரம்பித்தவர், இவை தன்னை ஏகாந்த லயிப்பிலும், ரசிப்பிலும் ஏகத்துவ உலகத்திற்கு இழுத்துச்  செல்வதைப் போன்ற ஒரு ஸ்பரிசத்தை உணர்வார்.
அதன் பிறகு வரக்கூடிய இணை வைப்புப் பாடல் வரிகள் முன்னால் சொன்ன ஏகத்துவக் கருத்துகளை  அப்படியே தலைகீழாகப் புரட்டி விடும். அப்போது, இணைவைப்பு என்னும் இருட்டறைக்கு, குமட்டலைத் தருகின்ற பிண வாடை வீசும் பிணக் கிடங்கிற்கு நாம் வந்து விட்டோம் என்று உணர்வார். அந்த அவலத்தையும் அலங்கோலத்தையும் தான் இப்போது நாம் இந்தக் கவிதை வரிகளில் பார்க்கின்றோம்.
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாதிமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். இந்தக் கவிதை வரிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை.  இதன் பின்னால் வருகின்ற விஷயம் தான் தவ்ஹீத் கருத்தைக் குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.
ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் என்ற (இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இதை எழுதிய காயல்பட்டினத்தைச் சார்ந்த முஹம்மது பின் அஹ்மத் என்பவர்  "வேண்டுதல் வைக்கப் படக்கூடியவர் ஹுசைன் (ரலி)' என்று கூறுகின்றார்.
முதலில் இந்தக் கவிஞன் செய்கின்ற குற்றம், இறந்து போன ஹுசைனிடம் உதவி தேடுவதாகும். இது மாபெரும் இணை வைப்பாகும்.,
ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:20, 21
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர்ஆன் 35:14
இந்த வசனங்கள் இன்னும் இதே கருத்தில் அமைந்த வசனங்கள் மிகத் தெளிவாக இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறுகின்றன. இந்த அடிப்படையில், இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்று இந்தக் கவிஞர் நம்புவது வல்ல அல்லாஹ்வுக்கு வைக்கின்ற முதல் இணை வைப்பாகும்.
வேண்டுதல் முன் வைக்கப்படுபவர் ஹுசைன் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்துகின்றார். ஆனால், வல்ல நாயன் தனது திருக்குர்ஆனில்,
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக அல்குர்ஆன் 2:186) என்று கூறுகின்றான்.
இந்த வசனத்தில் அடியார்கள் தன்னிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
"பிரார்த்தனை தான் வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' (40:59) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 3170, 2895, 3294
இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும், துஆ ஒரு வணக்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால், இவரோ ஹுசைனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த அடிப்படையில் இவர் இறைவனுக்கு வைக்கின்ற இரண்டாவது இணை வைப்பாகும்.
அடுத்து, நோய் நிவாரணம் ஹுசைனிடம் தான் இருக்கின்றது என்று கூறுகின்றார். இது அடுத்த இந்தக் கவிஞர் செய்கின்ற அடுத்த இணை வைப்பாகும்.
மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.
இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.
நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
(அல்குர்ஆன் 26:80)
நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயைத் தாமே நீக்கிக் கொள்ள வில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.
எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 21:83)
துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 6:17)
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் 10:49)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.
நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், "நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2839, 4423
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா' என்று கூறினேன். அதற்கவர்கள் "ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
நூல்: புகாரி 5648, 5660, 5667
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய்வாய்ப் பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750
பொருள்:
"இறைவா! மனிதர்களின் இரட்ச கனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!'
நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.
ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது "இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு' என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5659
அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.
அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.
அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.
நூல்: புகாரி 1248
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஆனால் ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்தக் கவிஞரோ நோய் நிவாரணம் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் இருக்கின்றது என்று கூறுகின்றார்.
திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

 EGATHUVAM DEC 2015