Feb 19, 2017

மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா?

மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா?
இவ்வுலகில் இரண்டு சாரார் ஏசு என்று அழைக்கப்படக்கூடிய ஈஸா (அலை) மரணித்து விட்டதாக மரண வாக்கு மூலம் கொடுக்கின்றனர். அதில் ஒரு சாரார் இறை மறுப்பாளர்களான உலகில் மிக அரிதிலும் அரிதாகவும் அற்பத்திலும் அற்ப சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்ற காதியானிகள். பொய்யை மூலதனமாகக் கொண்ட இந்தப் போலி மதத்தினர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே என்று கூறுகின்றார்கள். இன்னொரு சாரார் உலகில் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கின்ற கிறிஸ்துவர்கள் ஏசு சிலுவையில் அறையப்பட்டதாகப் பொய்யுரைக்கின்றனர்.

அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:156-158

தூய திருக்குர்ஆன் இவ்விரு சாராரின் பொய்யை சிலுவையில் அறைந்து விடுகின்றது. இயேசு விண்ணுலகில் இருக்கின்றார் என்று பறை சாற்றுகின்றது. இதற்குப் பின்வரும் அல்குர்ஆனின் வசனமும் ஹதீஸ்களும் சான்று பகர்கின்றன.

"அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)
அல்குர்ஆன் 43:61

அவரை கியாமத் நாளின் அத்தாட்சி அதாவது உலகம் அழியும் நாளுக்கு முன்னர் வருவார் என்று கூறுகின்றது.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஈஸா நபி இறுதி நாள் நெருங்கும் போது வருவார் என்று கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 2222, 2476, 3448, முஸ்லிம் 221

திருக்குர்ஆன், தான் கூறுகின்ற இந்த வாதத்தில் மட்டுமல்லாமல், ஏனைய வாதங்களிலும், இது பொய்யாக இருந்தால் அதை உடைத்துக் காட்டும் படி அகில உலகத்தின் ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் ஒரு பகிரங்க அறைகூவலும் விடுக்கின்றது. இது வரைக்கும் அது விடுக்கின்ற அறைகூவலைச் சந்திக்க எவனும் வரவுமில்லை. இனி எவனும் பிறக்கப் போவதுமில்லை.

ஈஸா நபி விண்ணுலகில் இருக்கின்றார் என்று சொல்லும் போது அவர் மூச்சு விடுகின்ற பிராண வாயு எப்படி கிடைக்கின்றது? அவருக்கு உணவு எப்படி கிடைக்கின்றது? என்று குருட்டுத்தனமான கேள்விகளை ஈஸா நபி இறக்கவில்லை என்று வாதிடும் இவர்கள் தொடுக்கின்றனர். இதற்கு ஈஸா (அலை) அவர்களே தான் பிறந்தவுடன் தெளிவான பதிலை அளிக்கின்றார்கள்.

நான் எங்கே இருந்தபோதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
அல்குர்ஆன் 19:31

இந்த வசனத்தில், நான் எங்கிருந்தாலும் பாக்கியம் பொருந்தியவன் என்ற அவர்களது வார்த்தை ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும். அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர். அவர்களைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. ஒருக்கால் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பூபாகத்தைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. அப்படியானால் இந்த வார்த்தை அவர்களுக்கு இந்த பூபாகத்தைத் தாண்டி எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அந்த வாழ்க்கையில் எனக்கு இறைவனுடைய பாக்கியம் இருக்கின்றது. இறுதி நாள் வரை தாக்கு பிடிக்கின்ற அளவுக்கு என் உடற் கூறில் பாக்கியம் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு பதிகின்றார்கள்.

கால நீட்சி
விண்ணுலகப் பயணம் என்பது ஒளியின் வேகத்தில் அமைந்தது.
ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பியதிலிருந்து ஓராண்டுக் காலத்தில் பயணம் செய்யக்கூடிய தூரமே ஒளியாண்டுத் தொலைவு.

ஒளி ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. தூரம் செல்லும். அந்த அளவில் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. ஆகும். நட்சத்திரங்களுக்கான தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்வதானால், நிறைய பூஜ்ஜியங்களைப் போட வேண்டியிருக்கும் என்பதால், ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர்.

அண்டவெளியில் உள்ள ஏதோ ஒரு கிரகத்துக்கு ஒருவர் அல்லது பலர் கிளம்புகிறார்கள். போக, வர அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். இங்கு வந்து பார்த்தால், அவர்களது பிள்ளைகளும் பெண்களும் படு கிழவர்களாகியிருப்பார்கள். விண்வெளிப் பயணம் செய்தவர்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகள்தான் கடந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகள் கடந்திருக்கும். இது எப்படி?

கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பயணம் செய்யும்போது, அவர்களின் கடிகாரங்கள் மிக மெதுவாகச் செயல்படும். அதாவது, காலம் நிதானப்பட்டுவிடும். ஆனால், அது அவர்களுக்குப் புலப்படாது. கடிகாரங்கள் மெதுவாகச் செயல்படும்போது காலண்டரும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஓராண்டு முடியும்போது பூமியில் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும். ஐன்ஸ்டைன் கூறிய கொள்கையின்படி இவ்விதம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐன்ஸ்டைன் கூறியது சரிதான் என்பது பின்னர் நிரூபணமாகியுள்ளது.

அண்டவெளியில் பூமியைவிடப் பல மடங்கு பெரிய கிரகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் விளைவாக அந்தக் கிரகம் அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். அப்படியான கிரகத்தில் கடிகாரம் மெதுவாகச் செயல்படும். அவர்களின் ஒரு மணி நேரம் என்பது பூமியில் உள்ளவர்களுக்குச் சில ஆண்டுகளாக இருக்கலாம். இது ஈர்ப்பு சக்தியின் விளைவாக ஏற்படுகிற கால நீட்சி ஆகும். இதுவும் ஐன்ஸ்டைனின் கொள்கையின்படி ஆனதே. எங்கோ இருக்கும் கிரகத்துக்குச் செல்ல வேண்டாம். பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக் கோள்கள் விஷயத்தில் மிக அற்ப அளவுக்குக் கால நீட்சி நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால் ஈஸா நபியின் விண்ணுலகப் பயணம் கால அளவிலும் பாக்கியம் செய்யப்பட்டுள்ளதாகவே அமைந்துள்ளது. ஆம்! இங்கும் அவரைப் பற்றி அல்லாஹ் இறுதி நாளின் அடையாளம் என்ற வார்த்தையின் அர்த்தம் விண் மீன்களைப் போன்று பன்மடங்கு பரிமாணங்களில் ஜொலிக்கின்றது. இந்த வகையில் நம்மையும் அறியாமல் நமது நாவுகள் அந்த நாயனை நோக்கி சுபஹானக்க - நீ தூயவனே - என்று போற்றிப் புகழ்ந்து விடுகின்றன!
இப்போது ஈஸா (அலை) அவர்களுக்கு எப்படி உணவு இல்லாமல் வாழப் போகின்றார்கள் என்று அறியாமை வாதத்தை எழுப்புகின்ற அறிவிலிகளுக்கு, துருவப் பகுதியில் வாழ்கின்ற சில பிராணிகளுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது என்ற அற்புதத்தை அறிவியல் அடிப்படையில் பார்ப்பதற்காக, நீள் துயில் ரகசியம் என்ற தலைப்பில் ராமதுரை அவர்கள் தமிழ் இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில் ஒரு துருவப் பயணத்தை மேற்கொள்வோம்.

மனிதனால் விலங்குகளைப் போல் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது.

மனிதனால் தொடர்ந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால், வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி, ரஷ்யாவின் வட பகுதி போன்றவற்றில் குளிர் காலம் வந்தால், சில வகை விலங்குகள் அன்ன ஆகாரம் இன்றி இயல்பாக மாதக் கணக்கில் உறங்க ஆரம்பித்துவிடும். என்ன முயன்றாலும் அவற்றை எழுப்ப முடியாது. இந்த வகை உறக்கத்துக்கு நீள் துயில் என்று பெயர். குளிர் காலம் அகன்றதும் அவை விழித்துக்கொண்டு நடமாட ஆரம்பித்துவிடும்.

மரத் தவளைகள், தரை அணில், வெளவால், சில வகை எலிகள், ஒரு வகைப் பாம்புகள் எனப் பல சிறிய பிராணிகளுக்கு இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடும் திறன் உள்ளது.
இயற்கை அளித்த வரம்

எங்கும் வெண் பனியால் மூடப்படும் பிராந்தியத்தில் கடும் குளிர் காலத்தில் இரை தேடிப் போவது கடினம். தவிர, இரை கிடைக்காது. எனவே, குளிர் காலத்தில் உயிர் பிழைக்க இப்பிராணிகள் உணவு, தண்ணீர் இன்றிப் பல மாத காலம் தொடர்ந்து உறங்குகின்றன. இது இயற்கை அளித்த வரம். நீள் துயில் ஆங்கிலத்தில் ஹைபர்னேஷன்’ (Hibernation) எனப்படுகிறது.

நீள் துயில் காலத்தில் இவை சுருண்டு படுத்துக்கொள்ளும். தரை அணில் ஒன்பது மாத காலம் கூட நீள் துயிலில் இருக்கும். நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளைப் பார்த்தால் செத்த மாதிரி இருக்கும். உடலின் மேற்பகுதியில் பனித் துகள்கள் படிந்திருக்கலாம். உடல் பயங்கரக் குளிர்ச்சியாக இருக்கும். தொட்டுப் பார்த்தால் இதயத் துடிப்பு அறவே நின்றுவிட்டது போல இருக்கும்.

சாதாரணக் காலங்களில் துருவ வெளவாலின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 400 தடவை துடிக்கும். நீள் துயில் காலத்தில் அது ஒரு நிமிடத்துக்கு 25 ஆகக் குறைந்துவிடும். சுவாசம் ஒரு மணிக்கு ஒரு தடவை என்ற அளவுக்குக் குறைந்து போவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அயர் நிலைத் துயில்
துருவ வட்டாரப் பிராணிகள் நீள் துயிலில் ஈடுபடுவதும் பின்னர் விழித்தெழுவதும் எப்படி என விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் இன்னமும் இதன் ரகசியம் தெரியவில்லை. இது ரத்தம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருமுறை விஞ்ஞானிகள் நீள் துயிலில் இருந்த தரை அணிலின் உடலிலிருந்து சிறிது ரத்தத்தை எடுத்து நீள் துயிலில் ஈடுபடாத தரை அணிலின் உடலில் செலுத்தினர். அதுவரை விழித்த நிலையில் இருந்த அந்தத் தரை அணில் உடனே நீள் துயிலில் ஈடுபட்டது.

நீள் துயில் மாதிரியில் இன்னொரு நிலையும் உண்டு. இது அயர் நிலை எனப்படுகிறது. அதாவது, துருவக் கரடிகள் இவ்வித நிலைக்கு உள்ளாகின்றன. அயர் நிலைக்கும் நீள் துயில் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. அயர் நிலையில் உள்ள பிராணிகளை உலுக்கினால் அவை விழித்துக்கொள்ளும். நீள் துயிலில் உள்ள பிராணிகளை எழுப்ப முடியாது.

அயர் நிலைக்குச் செல்கின்ற விலங்குகளும் உணவு எடுத்துக்கொள்ளாமல் பல நாட்களுக்குச் சுருண்டு உறங்கும். ஆனால், குளிர் காலம் என்று இல்லாமல் நினைத்த நேரத்தில் அவற்றால் அயர் நிலைக்குச் செல்ல முடியும். ஆங்கிலத்தில் இதை டோர்போர்' (Torpor) என்று கூறுகின்றனர்.

நீள் துயில் ஆய்வு
உலகில் சில பகுதிகளில் கடும் வெயில் காலத்தில் சில வகைப் பிராணிகள் பெரும்பாலும் நிலத்துக்குள் புதைந்துகொண்டு நீள் துயிலுக்குச் செல்கின்றன. சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, முதலை, சில வகைத் தவளைகள் இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடுகின்றன. இந்த வகை நீள் துயிலை ஆங்கிலத்தில் எஸ்டிவேஷன்' (Estivation) என்று கூறுகின்றனர்.

மனிதனால் இப்படிப் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது. ஒருவர் பல மணி நேரம் தொடர்ந்து உறங்கலாம். ஆனால், அப்படி உறங்கும்போதும் உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருந்தாக வேண்டும். ரத்த ஓட்டம் வழக்கம்போல இருக்க வேண்டும். இதயமும் வழக்கம்போலச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் உடலுக்குச் சக்தி வேண்டும்.

(உடலில் சக்தி இல்லாமல் கஹ்ஃப் வாசிகள் தூங்கியது இந்த வகையில் ஓர் அற்புதமாகும்)

நீண்ட விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளி வீரர்களைத் துருவப் பகுதி பிராணிகளைப் போல் நீள் துயிலில் ஈடுபடச் செய்தால் பல வகைகளிலும் வசதியாக இருக்கும். இந்த நோக்கில் நாஸா 1950-களில் நீள் துயில் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. ரஷ்யர்களும் இவ்வித ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாஸா இப்போது மறுபடியும் நீள் துயில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தில் கிளம்பினால் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும். விண்கலத்தில் 6 பேர் ஏறிச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த நேரத்திலும் 4 பேர் நீள் துயிலில் ஈடுபடுவதாக வைத்துக்கொண்டால் சாப்பாட்டுப் பிரச்சினை உட்படப் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். விண்கலத்தில் 2 பேருக்கு 8 மாதக் காலத்துக்கான உணவு இருந்தால் போதும். எனவே, விண்கலத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்களின் அளவு குறையும். அந்த அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய எடை குறையும்.

எதிர்காலத்தில் அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற ஒரு கிரகத்துக்குச் செல்ல பல ஆண்டுப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவ்விதப் பயணத்துக்கு நீள் துயில் ஏற்பாடு மிகவும் உதவும்.

நீள் துயில் பயன்கள்
உணவுத் தேவை மட்டுமன்றி, விண்கலத்தில் ஆக்சிஜன் தேவையும் குறைந்துவிடும். ஏனெனில், நீள் துயிலில் ஈடுபட்டவர்களின் சுவாசம் குறைவாக இருக்கும். தவிர, விண்கலத்தில் சேரும் கழிவுகளும் குறைவாக இருக்கும். வட துருவப் பகுதியில் நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளின் உடலிலிருந்து கழிவுகள் வெளியாவதில்லை.

மனிதனால் நினைத்தபோது நீள் துயில் நிலைக்குச் செல்ல முடியும் என்றால் அது பெரும் புரட்சியாக இருக்கும். வேலைக்குச் சென்று சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் நீள் துயிலில் ஈடுபட்டுவிடலாம். வீட்டில் சமையல் செய்ய விரும்பாத பெண்கள், தங்களது கணவன்மார்கள் திண்டாடட்டும் என்ற எண்ணத்தில் நீள் துயிலில் ஈடுபடலாம்.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வதன் மூலம் அல்லது ஊசி போடுவதன் மூலம் ஒருவரைத் திட்டமிட்டு நீள் துயிலில் ஈடுபடும்படி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

நீள் துயில் நிலையில் இதயத் துடிப்பு குறையும். சுவாசம் குறையும் என்பதால் மருத்துவ நிபுணர்களும் நீள் துயில் விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். விபத்து காரணமாக அல்லது வேறு காரணத்தால் ஆபத்தான நிலையில் உள்ள ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரை செயற்கையாக நீள் துயிலில் ஈடுபடும்படி செய்தால் டாக்டர்களால் உரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போதுமான அவகாசம் கிடைக்கும்.

ராமதுரையின் நீள் துயில் ரகசியம்என்ற இந்தக் கட்டுரையில் துருவப் பிராணிகள் எப்படி உணவின்றி கழிக்கின்றன; காலந்தள்ளுகின்றன என்பதையும் பார்க்கின்றோம். இன்றைக்கு விண்ணுலகப் பயணத்திற்கு இந்த நீள் துயில் பயணம் தான் கை கொடுக்கும் என்ற விஞ்ஞானிகளின் பார்வையையும் அந்த திசையை நோக்கிப் பயணம் செய்வதையும் நாம் பார்க்கின்றோம்.

இது உணர்த்துகின்ற பாடம் என்ன? ஏசு என்ற ஈஸா நபியின் விண்ணுலக வாழ்க்கையில் மனித சமுதாயம் கடுகளவு கூட சந்தேகப்படாத அளவுக்கு உண்மை என்பது நிரூபணமாகி விடுகின்றது. அதைத் தான் அல்குர்ஆன் 43:61 வசனம் அடித்துச் சொல்கின்றது. இஸ்லாம் தான் அல்லாஹ்வின் உண்மை மார்க்கம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி உள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்

EGATHUVAM AUG 2016