Feb 19, 2017

முகத்திரையைக் கிழித்த முதல் பிறை

முகத்திரையைக் கிழித்த முதல் பிறை
குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் 5 சகோதரர்கள் பிறை பார்த்ததின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாளைக் கொண்டாடியது. பிறை பார்த்து விட்டால் மார்க்கத்தின் படி பெருநாள் கொண்டாடுவதைத் தவிர வழியே இல்லை என்று தெரிந்தும் சுன்னத் வல்ஜமாஅத்தினர் அன்றைய தினம் மக்களை நோன்பு நோற்கச் செய்தனர். இதன் மூலம் மக்கள் ஒரு ஹராமைச் செய்வதற்கு காரணமாயினர். இதைப் பற்றி இந்த இதழின் தலையங்கத்தில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.

சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்கள் இவ்வாறு செய்ததில் ஆச்சரியமில்லை. தவ்ஹீத் என்று பெயர் வைத்துக் கொண்டு நமது ஜமாஅத்திலிருந்து பிரிந்த சாரார்கள் ஊரோடு ஒத்து பெருநாள் கொண்டாடி தாங்கள் யார் என்று தங்கள் வேடம் களைந்து வெளிச்சம் போட்டுக் காட்டினர்.

ஆம்! முதல் பிறையின் மெல்லிய வெளிச்சம் இவர்களது முகத்திரையைக் கிழித்துள்ளது.

இதைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னால், கடந்த 2010 ஆண்டு ஹஜ் பெருநாளை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தனித்துக் கொண்டாடியது. அதை ஒட்டி டிசம்பர், 2010 ஏகத்துவம் இதழில் வெளியான, “பிரித்துக் காட்டிய பெருநாள் பிறைஎன்ற கட்டுரையின் ஒரு பகுதியை இப்போது பார்ப்போம்.

இவர்கள் கூட்டத்திற்குத் தக்க கொள்கையை மாற்றும் கூட்டத்தினர், சுன்னத் ஜமாஅத்தை வைத்துத் தான் படம் காட்டினார்கள்; இப்போது அது வெளிச்சமாகி விடும்என்றெல்லாம் இவர்கள் நம்மை நோக்கிக் கேலியும் கிண்டலும் பேசினர். இவ்வளவு நாளும் (பெருநாள் திடல்) வசூல் மழையை எழுதினீர்கள். 18ஆம் தேதி வசூலை எழுதுங்கள், பார்ப்போம்என்று சவால் விட்டனர்.

18ஆம் தேதியன்று திடல்கள் வெறிச்சோடிக் கிடக்கும்; தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வெற்றுக் கூடாரமாகி விடும் என்று கனவு கண்டவர்களின் கண்களில் அல்லாஹ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான். அவர்களை நிலைகுலையச் செய்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்! ஒவ்வொரு பெருநாளின் போதும் அலை அலையாக வந்த அதே கூட்டம் அணை உடைத்த வெள்ளம் போல் 18ஆம் தேதி பெருநாள் திடலிலும் வந்து சூழ்ந்தது. திடல்கள் பொங்குமா கடலாய் பொங்கி வழிந்தன. படையெடுத்து வந்த பத்திரிகையாளர்களின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. ஒளி நாடாக்கள் இந்த வரலாற்று நிகழ்வை ஒன்று விடாது பதிவு செய்திருக்கின்றன.

முஃப்தி எனற பெயரில் முஃப்த்தினாக (குழப்பவாதியாக) செயல்படுகின்ற டவுண் காஜியின் ஏகபோக பிறை சாம்ராஜ்யம் இதன் மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. பிறை விஷயத்தில் இதுவரை தான்தோன்றித்தனமாக அறிவித்து வந்த ஒரு தனிநபர் ஆதிக்கத்தை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து, தனி சமுதாயமாகப் பரிணமித்தது.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
அல்குர்ஆன் 16:120

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதையில், அவர்களின் தியாகத்தை மையமாகக் கொண்ட தியாகத் திருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முத்திரையைப் பதித்தது.
இப்ராஹீம் நபி, ஊரை - உலகத்தை அல்லாஹ்வுக்காகப் பகைத்தார்கள்.

"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4

அந்த ஏகத்துவ இமாமின் நினைவாக அமைந்த இந்த இறை தியான நாட்களில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வுக்காக மக்களைப் பகைத்துக் கொண்டது. வணக்க வழிபாடுகளில், திருமண, மரண நிகழ்வுகளில் உங்களைப் பகைத்தோம். உங்களுக்கும் எங்களுக்கும் எஞ்சிய உறவு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது தான். இப்போது அதையும் அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டோம் என்று 18ஆம் தேதி தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து விட்டது.

கூட்டத்திற்காகவோ, வசூலுக்காகவோ குராபிகளுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. அவர்களது நோன்பும் பெருநாளும் ஹதீசுக்கு ஒத்திருந்தது. அதனால் அவர்களுடன் ஒத்துப் போனோம். அவர்கள் உண்மைக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் அவர்களைப் பிரிந்து விட்டோம். இது தான் உண்மை.

"இவ்வளவு நாள் எங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடினீர்கள்; இப்போது பிரிந்து விட்டீர்களே' என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் நாம் கூறுவது இது தான். நாங்கள் எதையுமே ஆதார அடிப்படையில் தான் பின்பற்றுவோம்; அனுமான அடிப்படையில் அல்ல. இதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:143

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கிப்லா மாற்றம் நயவஞ்சகர்களை அடையாளம் காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பச்சோந்திகளையும் இந்தப் பெருநாள் பிரித்துக் காட்டியது.

பிரித்துக் காட்டிய பெருநாள் பிறைஎன்ற தலைப்பில் 2010 டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியாகும்.

மார்க்க அடிப்படையிலான பிறைக்கு மாற்றமாக, மாலேகான் பிறையை அடிப்படையாகக் கொண்டு டவுன் காஜி அறிவித்தார். அதனால், அதை எதிர்த்து தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ் பெருநாளை முதன் முறையாக தனியாகப் பிரிந்துக் கொண்டாடியது.

டவுன் காஜியின் அந்த அராஜக, அறியாமைப் போக்கைக் கண்டித்து எழுதப்பட்டது தான் அந்தக் கட்டுரை.

தற்போது மீண்டும் டவுண் காஜி, அதே அராஜகப் போக்கைக் கடைப்பிடித்து, இந்த (ஹிஜ்ரி 1437) நோன்புப் பெருநாளில் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது. அந்தக் கட்டுரை இப்போதும் பொருந்திப் போவதால் அதில் உள்ள சில பகுதிகள் மேற்கோளாக இங்கு காட்டப்பட்டுள்ளது.

அப்போது தவ்ஹீதுவாதிகளில் ஒரு சிலர் தங்களை அடையாளங் காட்டத் தயங்கினர். அதனால் இந்தக் கட்டுரை அவர்களின் நயவஞ்சகப் போக்கை தோலுரித்துக் காட்டியது. இப்போதும் அது போல் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் இருக்கலாம். அதற்கு இது சாட்டையடியாகும்.

ஆனால் ஒரு சிறு வித்தியாசம்! இந்தப் பெருநாளில் சுன்னத் வல் ஜமாஅத்தினரில் அதிகமான பேர்கள் தங்களை அடையாளங்காட்டிக் கொண்டு பகிரங்கமாக நோன்பை முடித்துக் கொண்டும் முறித்துக் கொண்டும் நமது திடல் தொழுகையில் பங்கேற்றனர். வான் பிறையை அடிப்படையாகக் கொண்ட வணக்கங்களைத் தீர்மானிப்பதில் வானளாவிய அதிகாரம் தங்களுக்கு உண்டு; தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற வரட்டு கவுரவத்திலும் வீண் பிடிவாதத்திலும் இருந்த மவ்லவிகளின் மவ்ட்டீக சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்தை மட மடவென்று இம்மாத ஷவ்வால் பிறை மண்ணில் சரிய வைத்து விட்டது. அவர்களது மமதையை மண் கவ்வ வைத்தது.

இதில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய, அடையாளம் காட்டப்பட வேண்டிய ஆட்கள், ஆசாமிகள் நம்மை விட்டு பிரிந்து போன சகாக்கள் தான். இந்த பழைய சகாக்களுக்கு மட்டும் மூன்று பெருநாட்கள்!

1. கணிப்பு பெருநாள்: நெற்றிக் கண் முளைத்த இந்த அதிமேதாவிகள் மக்கா சென்று ஹஜ் வணக்கங்களைக் கூட ஒருநாள் முன் கூட்டியே செய்வார்கள். மக்காவுக்குச் சென்ற இந்த கணிப்பாளர்கள் அரஃபா வணக்கத்தை ஒருநாளுக்கு முந்தியே முடித்து விடுவார்கள். மார்க்கம் கூறும் எந்த வரையறைக்குள்ளும் நிற்காதவர்கள் இவர்கள்.

2. சர்வதேசப் பிறை: இந்த சாரார் சர்வதேசப் பிறை என்ற பெயரில் சவூதிய பிறையைக் கொள்கையாகக் கொண்டவர்கள்.

3. சுன்னத் வல் ஜமாஅத் பிறை: இந்த சாரார் ஊரை ஒத்து பெருநாள் கொண்டாடுபவர்கள்.

இந்த மூன்று சாராருமே ஸலபுக் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள். தவ்ஹீதுவாதிகளை ஏமாற்றுவதற்காக, பிரச்சாரப் பேரவை என்ற பெயர்களில் இவர்கள் நடத்தும் ஐ.பி.பி., டி.பி.பி., இ.பி.பி. போன்ற இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள ஸலபி ஆலிம்கள் தான் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதில் ஜோதிடக் கணிப்பைப் பின்பற்றும் முதல் பிரிவினர், நம்மை நோக்கி, “ஊரை ஒத்து பெருநாட்கள் கொண்டாடக்கூடியவர்கள்என்று குற்றஞ்சாட்டுபவர்கள். எந்த அளவுக்கென்றால் திருக்குர்ஆனின் 9:36,37 வசனங்களைப் போட்டு பிறை விஷயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை காஃபிர்கள் என்று சுவரொட்டி மூலம் தெரிவிப்பவர்கள்.

ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் தற்போது, பிறைக்கணிப்பு, தகவல், நேரடியாகப் பிறை பார்த்தல் என்ற எந்த வட்டத்திற்குள்ளும் நிற்காமல் டவுண் காஜி என்ற அறிவிலியின் தலைமையை ஏற்று, ஊரை ஒத்து பெருநாள் கொண்டாடக்கூடிய தமுமுக, ஸைபுல்லாஹ் கோஷ்டி, பாக்கர் கோஷ்டியிடம் சங்காத்தமும் சகோதரத்துவமும் கொண்டாடுகிறார்கள். பிறை விஷயத்தில் நம்மை காஃபிர் என்று சொன்ன ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மேற்கண்ட இந்த சந்தர்ப்பவாதிகளைக் கண்டிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.

காரணம், இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் எதிர்ப்புணர்வு, சஹாபாக்களைப் பின்பற்றுதல் என்ற மையப் புள்ளிகளில் சந்திக்கின்றவர்கள். ஒற்றுமைக் கோஷத்தை ஓங்கி ஒலிப்பவர்கள். பிறையில் வேற்றுமை! பிற விஷயங்களில் ஒற்றுமை!! என்ன இவர்களது ஒற்றுமை? இவர்கள் தான் ஊருக்கு ஒற்றுமையைப் பற்றி உரக்கக் கூவுகின்றார்கள்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஒரே அமைப்பில் மூன்று விதமான பிறை கோஷ்டிகள் இருப்பது தான். அந்தச் சிறப்பிற்கும் சிரிப்பிற்கும் உரிய ஒரே அமைப்பு தமுமுக தான். இந்தக் கொள்கையற்ற கூட்டத்தினர் மார்க்கத்தில் அரசியல் செய்து ஆதாயம் பார்க்க நினைப்பதால் இந்த அமைப்பினர் மூன்றாகப் பிரிந்து மூன்று வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடினார்கள். சென்னையில் ஒருநாள், தென்காசியில் வேறு நாள்! இரண்டிலும் இல்லாமல் கணிப்பில் சிலர் கொண்டாடினார்கள். மார்க்கத்திற்காக (?) கணிப்பைப் பின்பற்றி விட்டு, அரசியலுக்காக டவுண் காஜியைப் பின்பற்றி இரண்டு நாட்கள் தொழுதவர்களும் இவர்களில் உண்டு.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் சுன்னத் வல்ஜமாஅத்துடனும் ஒரே கோட்டில் வருவார்கள். இப்போது இந்தப் பிறை விஷயத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு ஒத்துப் போயுள்ளார்கள். ஏன்? இவர்கள் தனியாகப் பெருநாள் கொண்டாடியிருந்தால் அது அவர்களுக்குப் பெருநாளாக இருந்திருக்காது. கருநாளாகத் தான் இருந்திருக்கும். இவர்களுக்கென்று எந்தக் கூட்டமும் வந்திருக்காது.

அதனால் பெயரில் தவ்ஹீத்! ஆனால் செயல்பாடோ தக்லீத்! ஆம்! சுன்னத் வல்ஜமாஅத்தை அப்படியே பின்பற்றுவது தான் இவர்களது கொள்கை. இவர்கள் ஊரை ஒத்துப் போகவில்லை என்றால் அமைப்பு ரீதியாக செத்துப் போக வேண்டியது தான். அதனால் இந்தக் கூட்டத்திற்குத் தேவை கூட்டம் தான்; கொள்கை அல்ல! எண்ணிக்கை தான்; இலட்சியம் அல்ல!

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தை அளவுகோலாகப் பார்க்கவிலை; கொள்கையைத் தான் அளவுகோலாகப் பார்த்தது. எண்ணிக்கையைப் பார்க்கவில்லை; இலட்சியத்தைத் தான் பார்த்தது.

பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 5:54

அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 33:39

இந்த வசனங்களின் படி தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வை மட்டும் அஞ்சியது. 2010 ஹஜ் பெருநாளிலும், 2016 நோன்பு பெருநாளிலும் அதை நிரூபித்துக் காட்டிவிட்டது.
கொள்கைக்காகவும், கொள்கை காக்கவும் அந்த ஜமாஅத் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டதால், அல்லாஹ் அந்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மக்களைக் கொண்டு வந்து நிரப்புகின்ற பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டு அவ்வாறு நிரப்பவும் செய்தான். அவனுக்கே அனைத்துப் புகழும்.

அப்படியே ஒருக்கால் கூட்டம் கூடவில்லையென்றால் இந்த ஜமாஅத் ஆட்டம் காணாது. அல்லாஹ்வை அஞ்சினோம்; அகிலத்தாரை அல்ல என்ற ஆத்ம திருப்தியில் அது தனது பயணத்தைத் தொடரும்.

ஆனால் இவர்கள் கதை அப்படியல்ல. தனியாகப் பெருநாள் கொண்டாடினால் எங்கே அமைப்பை இழுத்து மூட நேரிடுமோ என்று பயந்து ஊரோடு ஒத்து, டவுண் காஜியின் தற்குறித்தனத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

அதனால் தான் சுன்னத் வல் ஜமாஅத் பிறையை அப்படியே பின்பற்றி தடுக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கும் பாவத்தைச் செய்து விட்டு மறுநாள் பெருநாளும் கொண்டாடியிருக்கின்றார்கள்.

உண்மைக்குப் பின்னே வழிகேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
அல்குர்ஆன் 10:32

இந்த வசனப்படி இவர்கள் இருப்பது வழிகேடு தான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அதனால் இவர்கள் எங்கும் இருந்து விட்டுப் போகட்டும்! அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நமக்குள்ள கேள்வி எல்லாம் பிறை விஷயம் முதல் பிற விஷயங்கள் வரை அனைத்து வகையிலும் சுன்னத் வல் ஜமாஅத் பாதையில் பயணிக்கின்ற இவர்கள் தங்களுக்கு தாங்களே தவ்ஹீத்வாதி என்று காட்டி கொள்வதைத் தான்!

ஏனிந்த இரட்டை வேடம்? ஏன் இத்தனை கபட நாடகம்? ஏன் இந்தக் கள்ள அவதாரம்? சுன்னத் வல் ஜமாஅத் அது தன் தவறான கொள்கையில் பிரகடனம் செய்து விட்டு தன்னை அடையாளங் காட்டி பயணம் செய்கின்றது. இவர்களோ வசூலுக்காக ஒரு பக்கம் தங்களை தவ்ஹீத் வாதிகள் காட்டிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தைப் பின்பற்றிக் கொண்டு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நயவஞ்சகர்களையும் நாடகக் குழுவினரையும் இந்த ஷவ்வால் பிறை அடையாளக் காட்டி விட்டது.

EGATHUVAM AUG 2016