இணைவைப்பே தீமைகளின் தாய்!
- எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
மதியை மயக்கும் மது
இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும்
அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான
நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத்
தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன.
ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும்
வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து
நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க
வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.
அவற்றுள் ஒன்றாக, மதுப் பழக்கம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளது. இஸ்லாமிய பார்வையில், மதுப்பழக்கம் என்பது மனிதர்களை வழிகெடுக்கத் துடிக்கும்
ஷைத்தானால் தூண்டப்படும் காரியம். இறை அருளை விட்டும் தூரமாக்கும் செயல்.
இணை வைப்புக் கொள்கையில் உள்ளவர்கள் மதுவை ஒரு
பெரிய பாவமாகக் கருதாமல் பெருமைக்குரிய செயலாகக் கருதுவதைப் பார்க்கிறோம். அது மட்டுமின்றி
மதுவைக் கொண்டே சிலைகளுக்குப் படையல் செய்வதையும், திருவிழாக்களில் மது விருந்தை, மதத்தின் பெயராலேயே நடத்துவதையும் காண்கிறோம்.
ஆனால் மற்றவர்கள் முன்னால் மதியையும்
மானத்தையும் இழக்க வைக்கும் மதுவை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது; தடுக்கிறது.
மனிதர்களை கெடுத்து, குட்டிச் சுவராக்கும் மதுவை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை இந்த
மார்க்கம் கற்றுத் தந்ததுடன், அதில்
வெற்றியும் கண்டுள்ளது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம்
கேட்கின்றனர். "அவ்விரண் டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட
கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 2:219)
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது
நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
(அல்குர்ஆன் 4:43)
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக்
கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே
பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான்
விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(திருக்குர் ஆன் 5:90,91)
போதை தரும் எல்லா பானமும் தடை செய்யப் பட்டதேயாகும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (242)
முதலில் மதுவானது கேடு தரும் காரியம் என்றும், பிறகு மது அருந்திய நிலையில் வணக்க வழிபாட்டின் பக்கம் வரக்
கூடாது என்றும், இறுதியாக இது ஷைத்தானிய செயல் என்றும் இஸ்லாம்
முடிவை அறிவித்தது.
மதுவை விட்டும் மக்கள முழுமை யாக
மீட்டெடுக்கும் வகையில், மனிதர்களின் இயல்பைக் கவனித்து மதுவிற்கு
எதிராகக் களமிறங்கியது. மது மட்டுமல்லாது போதை தரும் அனைத்துப் பொருட்களையும் தடை
செய்தது. இதையும் மீறி அதன் பக்கம் செல்பவர்களுக்குக் கடுமையான தண்டனையை
வரையறுத்தது. மது உட்பட எல்லா வகையான போதைப் பழக்கத்தையும் வெறுக்கும் சமுதாயத்தை
உருவாக்கியது.
மது தடை செய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா
(ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில்
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே
(ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.
(மதுவைத் தடை செய்யும் இறைவசனம்
அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் "(மக்களே!) மது தடை
செய்யப்பட்டுவிட்டது'' என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி)
அவர்கள் (என்னிடம்), "வெளியே போய் பார்(த்து வா)'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு
பொது அறிவிப்பாளர் ஒருவர் "அறிந்து கொள்ளுங்கள். மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.
(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை
வீட்டுக்கு வெளியே ஊற்றினர்) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா
(ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதையும்
ஊற்றிவிடு'' என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து)
கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன். அப்போது மக்கள் (அல்லது மக்களில்
சிலர்) "மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர்
கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)'' என்று கூறினர்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க
அல்லாஹ், "(இறைவனை)
அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, இறை நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார் களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்)
உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக்
குற்றமுமில்லை'' (5:93) எனும்
வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் (4006)
இன்று எத்தனையோ சட்டங்கள் போட்டும் ஒழிக்க
முடியாத மதுப் பழக்கத்தை ஒரேயொரு திருமறை வசனத்தின் மூலம் இஸ்லாம் தடை செய்து, அதில் வெற்றியும் கண்டது என்றால் அதற்குக் காரணம் அது
கற்பிக்கும் ஓரிறைக் கொள்கையும், மறுமை
நம்பிக்கையும் தான்.
மது இல்லாத சமூகம் மலருவதற்கு ஆட்சியாளர்களின்
அதிரடிச் சட்டங்கள் தேவை இல்லை. இணைவைப்பு கொள்கைக்குப் பதிலாக ஒரிறைக் கொள்கையின்
நம்பிக்கை எல்லோருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டால் போதும், மதுப்பழக்கம் மாயமாகிப் போகும்.
வாழ்வைக் கெடுக்கும் வட்டி
செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்க்க வேண்டும்
எனும் பேராசையின் பிரதிபலிப்பே வட்டியாகும். இது, பிறருக்கு உதவும் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைக்கும் காரியம்.
வட்டியினால் வீடு வாசல் இழந்து வீதிக்கு
வந்தவர்கள் பலர். மதிப்பு மரியாதையை இழந்து உயிரைத் துறந்தவர்கள் பலர். அடுத்தவர்
உழைப்பை உறிஞ்சும் இது போன்ற செயல்களை எந்தவொரு கொள்கை யும் தடுப்பதில்லை; கண்டிப்பதில்லை.
குறிப்பாக, இணைவைப்பு கொள்கைகள் இதன் பக்கம் கடைக்கண் பார்வை கூட செலுத்துவது இல்லை.
எப்படியும் பணத்தை பெருக்கிக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமோ இந்த விவகாரத்திலும் தனித்து விளங்குகிறது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான்
தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ்
வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.
(திருக்குர்ஆன் 2:275)
அல்லாஹ் வட்டியை அழிக் கிறான். தர்மங்களை
வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(திருக்குர்ஆன் 2:276)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு
நீங்கள் செய்யா விட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து
கொள்ளுங்கள்!
(திருக்குர்ஆன் 2:278,
279)
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக்
கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால்
வெற்றி பெறுவீர்கள்.
(திருக்குர்ஆன் 3:130)
எந்தவொரு கொள்கையிலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம்
வட்டிக்கு எதிராகக் களம் கண்டிருக்கிறது. காரணம், வட்டி என்பது தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தையே சீரழிக்கும் செயல்.
நாள்தோறும் விலை மாற்றம், விலைவாசி உயர்வு போன்றவைக்கு இதுவே மூல காரணம்.
எனவே தான் வட்டி வாங்குவதை மட்டுமல்ல! அதைக்
கொடுப்பது, பதிவு செய்வது, அதற்கு சாட்சியாக இருப்பது அனைத்தையும் கண்டிக்கிறது. இவையெல்லாம் ஏக
இறைவனிடம் இருந்து சாபத்தை, தண்டனையை பெற்றுத் தரும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும்
சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும்
(பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3528)
எந்த வழியிலும் செல்வத்தை திரட்டிக் கொள்ளலாம்; அதில் ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால்
போதும் என்கிற இணைவைப்பு கொள்கையின் அவலத்தை யோசித்து பாருங்கள். வட்டியின் மூலம்
பலரின் அழிவுக்குக் காரணமாக இருப்பவர்கள் கூட கோவில் உண்டியலில் லட்சக் கணக்கான
பணத்தைக் கொண்டு கொட்டுவதற்குக் காரணம் அவர்களது தவறான கடவுள் கொள்கை தான்.
சமூக நலன் காக்கும் ஏகத்துவ கொள்கையைக்
கடைபிடித்தால் மட்டுமே வட்டிக் கொடுமைக்கு முழுமையாக முற்றுப் வைக்க முடியும்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
EGATHUVAM FEB 2016