மாநாடு தரும் படிப்பினை
ஹுனைன் போர்க்களம்! உதவாத மக்கள் பலம்!
இந்து
நாளேட்டைப் போலவே தந்தி டிவியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நல்ல பெயர் தங்கள் செய்திகளில்
மருந்துக்குக் கூட வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். அப்படிப்பட்ட
தந்தி டிவியில் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தே ஆட்சிக்கு வந்தாலும் நாளை கோட்டையில்
பறக்கப் போவது தேசியக் கொடி தான்'' என்று ஒரு விவாதக் களத்தின் போது நெறியாளர்
ஹரி குறுக்கே விழுந்து குறிப்பிட்டார்.
"சரி, இன்றைக்கு
உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள்.
நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள்
மீது கூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி
சிவனையும்,
பெருமாளையும், சுடலைமாடனையும், முனியாண்டி
யையும், இயேசுவையும் மிச்சம் வைக்கும்?'' என்று அவரிடம் கேட்டேன். அவர்
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.
இது
யாருடைய வார்த்தைகள் என்கிறீர்கள்? நம்முடைய மாநாடு முடிந்த பின்
பிப்ரவரி 4
அன்று நமக்கு எதிராக நச்சுக் கருத்துகளை தமிழ் இந்து நாளேட்டில்
விதைத்து இணைய தளங்களிலும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்ட சமஸின் வார்த்தைகள்!
இந்த
நாட்டில் அரசியல் தளத்திற்குக் களம் அமைப்பது மக்கள் சக்தி தான்! ஓர் அரசியல் கட்சியை
அரியணையில் ஏற்றுவதற்குரிய,
பிரமிக்க வைக்கின்ற பிரமாண்டமான அத்துணை பெரிய மக்கள் சக்தி
திரண்டதால் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் எழுத்தளவிலும், வார்த்தையளவிலும்
அவர்களை அறியாமலேயே வடிவெடுக்கின்றன.
இந்த
ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொண்ட வேகத் தடைகளையும் வேகக் கட்டுப்பாடுகளையும்
தாண்டி வார்த்தைகள் வெளியே புறப்பட்டு வந்து வெடித்துச் சிதறுகின்றன.
இதில், தவ்ஹீத்
ஜமாஅத் ஆட்சியை கனவிலும்,
கற்பனையிலும் நினைத்து பார்க்காத தூரத்தில் நிற்கும் ஜமாஅத்தாகும்.
அப்படியிருந்தும் நாம் உச்சரிக்காத ஆட்சி, அதிகாரம், அரியணை, கோட்டை, கொடி
என்ற அரசியல் அகராதியின் மந்திர உச்சாடணங்களை இவர்கள் ஓங்கி ஒலிப்பதற்குரிய காரணம்
என்ன?
கூடிய
மக்கள் கூட்டம் நாம் கூடிய விரைவில் கோட்டைக்குப் போய் விடுவோமோ என்ற தோற்றத்தை இவர்களிடம்
ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த அளவுக்கு வந்து குவிந்த மக்கள் எண்ணிக்கை பல லட்சங்களைத்
தாண்டி அமைந்துள்ளது என்பதைத் தான் இது தெளிவாகத் தெரிவிக்கின்றது.
உண்மையில், இந்தக்
கூட்டத்தைக் கண்டு எல்லா இணைவைப்புக் கூடாரங்களும் அரண்டும், மிரண்டும்
போயிருக்கின்றன. அவர்களிடத்தில் இதன் பிம்பமும், பிரம்மாண்டமும் அதிர்வலைகளைப்
பதிய வைத்திருக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.
திருச்சி, பிராட்டியூர்
திடல் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டது. அந்தத் திடலை
தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்து துணிந்து எடுத்தது. இது தவிர
அந்தத் திடலை ஒட்டியுள்ள இன்னும் பல ஏக்கர் நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் கேட்டுப்
பெறப்பட்டதால் முன்னூறு ஏக்கராக ஆனது.
பொதுவாக
இது போன்ற திடலை எடுப்பதற்கும், இந்தப் பணியை மேற்கொள்வதற்கும் ஒரு துணிவும், மனவலிமையும்
வேண்டும். அத்தகைய துணிவையும், மன வலிமையையும் அல்லாஹ் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகிகளுக்கு
அளித்தான். அந்த வகையில் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
இதைக்
குறிப்பிடுவதற்குக் காரணம் அம்மாபெரும் திடலில் மக்கள் குழுமுவார்களா? கூடுவார்களா? என்ற
தயக்கமும்,
கலக்கமும் யாருக்கும் வரத்தான் செய்யும். அது போல் தவ்ஹீது ஜமாஅத்
நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டது. ஆனால் உள்ளுக்குள் ஒரு தன்னம்பிக்கை இருந்தது. இது போன்ற
தைரியமும்,
தன்னம்பிக்கையும் வேறெந்த ஜமாஅத்திற்கும் இயக்கத்திற்கும் வராது
என்பதை இங்கு அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்லாஹ் அந்த நம்பிக்கைக்கு
ஏற்ப மக்களை அலைகடலாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
இதுபோன்று
பரந்து விரிந்து கிடக்கும் திடல்களில் மாநாடு என்ற பெயரில் அதிலும் குறிப்பாக தவ்ஹீத்
ஜமாஅத்தைப் போன்று பெரும் எதிர்ப்புகளுக்குடையே நடத்தும் போது மக்கள் எண்ணிக்கை குறைவாக
இருக்குமானால்,
ஒரு வட்ட தட்டின் மத்தியில் கிடக்கும் சோழப் பொறிகள் போன்று
அது காட்சியளித்திருக்கும். எதிரிகள் காரித் துப்பியிருப்பார்கள். அல்லாஹ் காப்பாற்றி
விட்டான்.
அது
மட்டுமல்லாமல்,
பொதுவாக பொதுக்கூட்டம், மாநாட்டுத் திடல்கள் நாற்காலிகளால்
நிரப்பப்படும்! ஆனால் தவ்ஹீது ஜமாஅத் நடத்திய இந்த மாநாட்டுத் திடலில் மக்களுக்காக
நாற்காலிகள் போடப்படவில்லை. மக்கள் தாங்கள் கொண்டு வந்த விரிப்புகளிலும் பெரும்பாலும்
வெறும் புல் தரைகளிலும் தான் அமர்ந்திருந்தார்கள். காணுமிடமெல்லாம் மனிதத் தலைகள்!
மக்கள் அலைகள்! அந்த அளவுக்கு பிராட்டியூர் திடல் பிதுங்கி வழிந்தது.
இதற்காக
அல்லாஹ்வுக்கு நாம் நாவால் மட்டுமல்லாமல் நம்முடைய கொள்கை உறுதிப்பாட்டின் மூலமும்
நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில் இது நம்முடைய உள்ளங்களில் மமதையையும், மயக்கத்தையும்
தந்து விடக் கூடாது. அவ்வாறு தந்து விட்டால் அது தான் நாம் வீழ்ந்து அழிந்து போகக்
கூடிய அதள பாதாளமாகும்;
அழிவுப் பாதையாகும்.
தமுமுகவில்
நாம் இருந்த போது,
2004, மார்ச் 21 அன்று தஞ்சையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப்
பேரணியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து நமது பங்காளிகள் நாசமாகிப் போனார்கள். அதில்
உள்ள அதிகமான மேல்மட்ட,
கீழ்மட்டப் பொறுப்பாளர்கள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாகத் தான்
இருந்தார்கள். அவர்கள் தான் இந்த மக்கள் கூட்டத்தைக் கண்டதும் மனம் மாறியும், தடம்
மாறியும் போனார்கள்.
இறுதியில், அரசியல்
வேண்டாம்; அது கொள்கையை அழித்து விடும் என்று அறிவுரையும், அறவுரையும் சொன்ன தவ்ஹீது
ஜமாஅத்தை அழிக்கின்ற பாதையில் களமிறங்கினார்கள். அதில் படுதோல்வி கண்டார்கள்.
இன்று
பதவிக்காக நடுத்தெருவில் சண்டை போட்டு நாறி நிற்கின்றார்கள். இது தேர்தல் காலம். எந்த
அரசியல் கட்சியும் இவர்களை ஏறெடுத்துப் பார்க்காத ஏதிலிகளாக, நாற்காலிக்காக
நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாதியற்றவர்களாக வீதியில் அலைகின்றார்கள். ஊடகங்களிலும்
சமூக வலைத்தளங்களிலும் கேலி, கிண்டலுக்கு ஆளாகி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
இந்த
இழிநிலை ஏன்?
கேவலம் ஏன்? தஞ்சைப் பேரணியில் கூடிய கூட்டம்
தான் அவர்களை இந்த அதள பாதாளத்தில் கொண்டு போய் தள்ளியது.
இதை
இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்கள் சக்தியைக் கண்டு ஏமாந்து நாசமாய்
போன கூட்டத்திற்கு உதாரணம் காட்டுவதற்காக வரலாற்று பாதையில் நீண்ட, நெடிய
பயணம் செய்யத் தேவையில்லாத அளவுக்கு நம் கண் முன்னாலே நான்கு அடிகள் எடுத்து வைத்ததும்
நன்றாகத் தெரியக் கூடிய அருமையான பாடமாகவும், ஆவணப் படமாகவும் இவர்கள் அமைந்து
விட்டார்கள் என்பதற்காகத் தான்!
அதனால்
தான் தமுமுக,
தவ்ஹீது ஜமாஅத் பிளவுக்குப் பிறகு நமக்குக் கூட்டம் கூட ஆரம்பித்ததும்
ஏகத்துவம் மாத இதழ் அலறி அடித்துக் கொண்டு, பதறித் துடித்துக் கொண்டு, இந்த
மக்கள் போதைக்கு நமது ஜமாஅத் அதற்கு ஆட்படக் கூடாது; அதற்கு அடிமைப்பட்டு
விடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது அபாய மணி அடித்திருக்கின்றது.
ஏகத்துவத்தின்
அபாய மணி: 1
நமது
ஜமாஅத் 2005,
பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் நடத்திய நான்காவது
செயற்குழுவை ஒட்டி,
"கொடி தூக்கும் கழகமல்ல; கொள்கைக் காப்பகம்' என்ற
தலைப்பின் கீழ் மார்ச்,
2005 ஏகத்துவம் தந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்.
இறை
உதவியா?
எண்ணிக்கையா?
இன்று
இறைவனின் அருளால் நமது ஜமாஅத் தமிழகத்தில் தனியொரு சக்தியாக உருவெடுத்து வருகின்றது.
"தவ்ஹீதுவாதிகள்,
உங்களை முஷ்ரிக் என்று கூறுகின்றார்கள்' என்றெல்லாம்
பிரச்சாரம் செய்தும் நாம் நடத்தும் போராட்டங்களில் அனைத்து தரப்பு மக்கள் வெள்ளமெனப்
பாய்கின்றனர்.
நாம்
நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களில் கடல் போல் மக்கள் கூட்டம் வருவதும், மற்றவர்கள்
நடத்தும் கூட்டங்களில் கடல் போல் திடல் காலியாகக் காட்சியளிப்பதும் நம்முடைய உள்ளங்களில்
ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணி விடக் கூடாது. இந்த விஷயத்தில் நம்முடன் கடுகளவு கூட
ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயர்ந்த சமுதாயமான நபித்தோழர்களுக்குக் கூட அல்லாஹ் உரிய
பாடத்தைப் படித்துக் கொடுக்கத் தவறவில்லை.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன்
(போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும்
உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
உயர்ந்த, உறுதி
மிக்க சமுதாயத்தையே அல்லாஹ் இப்படி வாட்டி விடுகின்றான் எனும் போது நாம் எம்மாத்திரம்?
எனவே, இப்படை
தோற்கின் எப்படை வெல்லும்?
இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது
போன்ற மமதையான வார்த்தைகள் எள்ளளவு கூட, மறந்தும் வாயிலிருந்து வந்து
விடக் கூடாது.
இந்த
எண்ணம் வந்து விட்டால் நாம் அழிவுக்கு ஆளாகி விடுவோம். அல்லாஹ் காப்பானாக! நாம் வளர்த்த
இயக்கம் அழிவுப் பாதைக்குப் போனதற்கு இதுதான் காரணம் என்பது நம் கண் முன்னால் கண்ட
உண்மையாகும்.
எனவே
இறை உதவி என்பது எண்ணிக்கை அடிப்படையில் வருவதல்ல. உறுதியான ஈமானின் அடிப்படையில் வருவதாகும்.
இதை மனதில்
கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
(ஏகத்துவம்
மார்ச்,
2005)
அடுத்து, தவ்ஹீத்
ஜமாஅத் கண்ட மக்கள் வெள்ளப் பெருக்கு கும்பகோணத்தில் ஜனவரி 29, 2006 அன்று நடந்த இடஒதுக்கீட்டிற்கான பேரணி, மாநாட்டின் போதாகும். அப்பேரணி
மாநாட்டின் பிரம்மாண்டத்தை விளக்கிய பின்னர் ஏகத்துவத்தில் வெளியான தலையங்கத்தின் ஒரு
பகுதியை இப்போது பார்ப்போம்.
ஏகத்துவத்தின்
அபாய மணி: 2
காணுமிடமெல்லாம்
மக்கள் வெள்ளம்! "பேரணி துவங்குமிடம்' என்ற ஒரு முனையிலிருந்து
"முடியும் இடம்'
என்ற மறு முனை வரையிலும் பெண்கள் கூட்டம் நிறைந்து, அதன்
பிறகு ஆண்கள் பேரணி என ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பேரணி நிறைவடையாத நிலையில்
பாதிப் பேர் நேரடியாக மாநாட்டுத் திடலுக்கே வரும் நிலை! இன்னும் பல பேருந்துகளிலிருந்து
மக்களை இறங்க விடாமல் காவல் துறையினர் திருப்பியனுப்பிய சம்பவமும் நடந்தேறியது.
"நான் ஒன்றரை மணிக்கு
பேரணி புறப்படும் இடமான அசூர் பைபாஸ் சாலைக்கு வந்தேன். இரவு 12 மணிக்குத் தான் மாநாட்டு மேடையைப் பார்த்தேன்'' என்று
ஆதங்கப்படுகிறார் ஒரு சகோதரர்.
அப்பப்பா!
எவ்வளவு விஷமப் பிரச்சாரங்கள்! எத்தனை அவதூறுப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பெயரிலேயே,
அதன் தோற்றத்திலேயே போலிப் பிரசுரங்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முகவரியிட்டு,
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு கள்ளக் கடிதங்கள் என்று
இவர்கள் பின்னிய சதி வலைகளைப் பிய்த்தெறிந்து விட்டுப் பாய்ந்து வந்த மனித அலைகள் உண்மையில்
கும்ப கோணத்தைக் குலுக்கி விட்டது.
இறுதிக்கட்ட
முயற்சியாக மாநில நிர்வாகிகளின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பி, பீதியைக்
கிளப்பி, மீடியாக்களைத் திசை திருப்பினார்கள்.
மதுவை
மிஞ்சிய மக்கள் போதை
மக்கள்
கூட்டத்தைப் பார்த்ததும் ஏற்படும் போதை மதுவை விட மிஞ்சி, மயக்கத்தைத்
தர வல்லது. அல்லாஹ் காப்பானாக!
இந்த
எண்ணம் நாம் நெருங்க முடியாத இடத்தில் இருந்த நபித் தோழர்களிடம் கூட தலை காட்டியுள்ளது.
இதை அல்லாஹ் தனது திருமறையில் கண்டிக்கின்றான்.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன்
(போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்க வில்லை. பூமி விசாலமாக
இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
அவனது
அருள் இன்றி,
அதிக எண்ணிக்கை மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, வேறு
எதையும் சாதித்து விடாது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
இந்த
வசனம் தரும் பாடம்,
அல்லாஹ் வெற்றியைத் தருவதற்கு எண்ணிக்கை ஒரு கருவியல்ல! கொள்கை
தான்! உறுதிமிக்க ஏகத்துவக் கொள்கை தான்! இதற்காகத் தான் அல்லாஹ் வெற்றியை அளிக்கின்றான்
என்பதைக் கணக்கில் கொண்டு நமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக
நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத்
தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 110வது அத்தியாயம்)
கூட்டம்
நிறைந்து வழியும் போது,
அடக்கத்துடன் புனிதன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனிடம்
பாவ மன்னிப்புக் கோருவோமாக!
(ஏகத்துவம், பிப்ரவரி 2006)
இது
நாம் குடந்தையில் கண்ட மக்கள் வெள்ளத்திற்குப் பிறகு ஏகத்துவம் இதழின் தலையங்கத்தில்
அடித்த அபாய மணியாகும்.
இப்படி
2006 விழுப்புரம் செயற்குழுவிலிருந்து தற்போதைய பொதுக்குழு வரையிலான நம்முடைய தவ்ஹீத்
ஜமாஅத் கண்ட உறுப்பினர்கள் வளர்ச்சி...
அதுபோல், 2006 குடந்தை பேரணி முதல் சென்னை தீவுத்திடலில் (ஜூலை 4, 2010) நடந்த இட
ஒதுக்கீட்டு கோரிக்கைப் பேரணி வரையில் தவ்ஹீத் ஜமாஅத் கண்ட மக்கள் சக்தியின் வளர்ச்சி...
தஞ்சை
மாவட்டம் வல்லத்தில் 2008,
மே 10.
11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற
தவ்ஹீத் எழுச்சி மாநாடு முதல் தற்போது திருச்சியில் (2016, ஜனவரி 31)
நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு வரை.... தவ்ஹீத் ஜமாஅத் கண்ட
வளர்ச்சி பன்மடங்கு,
பன்மடங்கு என்றால் அது மிகையல்ல!
இது
நம்மிடத்தில் தடுமாற்றத்தையும், தடமாற்றத்தையும் கொண்டு வந்து விடக்கூடாது
என்று இப்போதும் அதே வசனங்களைச் சொல்லி ஏகத்துவம், அதே அபாய மணியை அடிக்கின்றது.
இந்தக்
கொள்கையின் பக்கம் வந்த மக்கள் சில கோடி என்றால் வரவேண்டிய மக்கள் இன்னும் பல கோடி
இருக்கிறார்கள்.
இதை
எண்ணிப் பார்த்தால் நாம் செல்ல வேண்டிய பயண தூரம் இன்னும் பல்லாயிரம் மைல்கள் ஆகும்.
அதை நினைத்து முன்பைக் காட்டிலும் நமது அழைப்புப் பணியை இன்னும் வேகப்படுத்துவோமாக!
விரைவு படுத்துவோமாக!
EGATHUVAM MAR 2016