Feb 27, 2017

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும்

இணை கற்பித்தலும் இறைவன் கூறும் உதாரணங்களும்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
இணையில்லா இறைவனுக்கு இணை கற்பிப்பது மன்னிக்கப்படாத குற்றம்
நன்மைகளை நாசமாக்கும் நச்சுக் காரியம்
நிரந்தர நரகில் தள்ளும் நிகரில்லாப் பாவம்
மனிதன், இறைவனுக்கு இழைக் கின்ற மகத்தான அநீதி
இணை வைப்பு தொடர்பான இந்தத் தகவல்களையெல்லாம் நாம் நன்கறிவோம். இந்தச் சிறப்பிதழில் பல்வேறு தலைப்புகளில் இதுகுறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அத்தகைய இணைவைப்பைச் செய்வதால் ஏற்படும் இம்மை, மறுமை இழப்புகளை, இணைவைப்பின் விபரீதங்களை அல்லாஹ் திருக் குர்ஆனில் நிறையவே கூறியுள்ளான்.
அந்த வரிசையில் தனக்கு இணை கற்பிப்பது எந்த வகையிலும் தகாது என்பதை மனித சமுதாயத்திற்கு விளக்குவதற்காக இணைவைப்பிற்கு இறைவன் சில உதாரணங்களையும் குறிப்பிடுகிறான்.
அந்த உதாரணங்கள் மக்களுக்கு சொல்லும் பாடம் ஒன்று தான்.
இறைவனுக்கு இணையாக்கப் படுபவர்கள் மிகவும் பலவீனமான வர்கள். அவர்கள் ஒரு போதும் இறைவனுக்கு இணையாக மாட்டார்கள். எனவே இறைவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்பது தான் அது மக்களுக்கு சொல்லும் மகத்தான சேதி.
சொர்க்கத்தை ஹராமாக்கி, அழித்தொழிக்கும் இந்த ஷிர்க் எனும் பெரும்பாவத்திலிருந்து மக்கள் முற்றாக விலகிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளுடன் இணைவைப்பிற்கு திருக்குர்ஆனில் இறைவன் சொன்ன உதாரணங்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
வானத்திலிருந்து விழுபவனைப் போல்...
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவன் நேர்வழியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறான் என்பதை விளக்கும் விதமாக அல்லாஹ் பின்வருமாறு உதாரணம் கூறுகிறான்.
அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காத வர்களாக (ஆகுங்கள்!)
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.
அல்குர்ஆன் 22:31
வானத்திலிருந்து கீழே விழுபவன் சீராக அவனது இலக்கை அடைந்து விட முடியாது, வழியிலேயே பறவைகள் அவனை கொத்தி தூக்கி சென்று விடும், அல்லது காற்று அவனைத் தொலைதூரத்தில் வேறு திசையை நோக்கி வீசியெறிந்து விடும். இப்படி அவன் சரியான இலக்கை அடைய முடியாமல் அலைக்கழிக்கப்படுவான்.
அது போலத்தான் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் தங்கள் நோக்கம் என்னவோ அதை அடையவே முடியாது. அவர்களுக்கு உறுதியான, எந்த நிலைத்தன்மையும் இல்லை என்பதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் விளக்குகிறான்.
பறவையின் வாயில் அகப் பட்டிருக்கும் இணைவைப்போரே! காற்றலையில் சிக்கித் தவிக்கும் முஷ்ரிக்குகளே! இனியாவது அதிலிருந்த விடுபட முற்படுங்கள்.
தண்ணீரை நோக்கிக் கையை விரிப்பவன்
இணை கற்பிப்பவன் தனது நோக்கத்தை அடைய முடியாது, அவன் எதை வேண்டுகிறானோ அது ஒரு போதும் நிறைவேறாது என்பதை விளக்கும் விதமாக இன்னொரு உதாரணத்தையும் அல்லாஹ் கூறியுள்ளான்.
ஒருவன் கடுமையான தாகத்துடன் இருக்கிறான் எனில் அதற்கான தீர்வு தண்ணீரை மொண்டு குடிப்பதாகும். அதை விடுத்து ஒருவன் தண்ணீரை நோக்கி இரு கரங்களையும் விரித்து வைத்துக் கொண்டால் தண்ணீர் தானாக வாய்க்குள் சென்று விடாது. கைகளுக்குள்ளும் நிரம்பி விடாது.
அப்படிச் செய்பவன் அடி முட்டாளாகவே பார்க்கப்படுவான்.
இறைவனுக்கு இணை கற்பிப் பவன் அப்படியொரு அடிமுட்டாளா கவே பார்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தில் அல்லாஹ் இந்த உதாரணத்தை குறிப்பிடுகிறான்.
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனையன்றி இவர்கள் யாரைப் பிரார்த் திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.
அல்குர்ஆன் 13:14
அல்லாஹ் அல்லாதவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்பவன் தண்ணீரை நோக்கி கையை விரித்து வைத்திருப்பவனைப் போன்று என அல்லாஹ் குறிப்பிட்டு விட்டு, தண்ணீர் எப்படித் தானாக வாய்க்குள் செல்லாதோ அது போல் இவர்களது பிரார்த்தனை ஒரு போதும் நிறைவேறாது என்று விளக்குகிறான்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் இவர்கள் என்னதான் மன்றாடினாலும் அந்த பிரார்த்தனை வீணானதே என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இந்த உதாரணம் பறைசாற்றுகின்றது.
சிலந்தி வலை
மழை, வெயில் போன்ற இடர்களிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள விரும்புவன் உறுதியான கட்டடத்தைப் பாதுகாப்புத்தளமாகத் தேர்வு செய்ய வேண்டும். ஓட்டை விழுந்த குடிசையைப் பாதுகாப்பிற் கான இடமாகத் தேர்வு செய்வானேயானால் அது மனிதனுக்கு இத்தகைய இடர்களிலிருந்து எந்தப் பாதுகாப்பையும் அளித்து விடாது.
ஓட்டை விழுந்த குடிசையே பாதுகாப்பளிக்காது என்றால் சிலந்தி வலையின் நிலை என்ன?
மழைக்கோ, வெயிலுக்கோ சிலந்தி வலையை ஒதுங்குமிடமாகத் தேர்வு செய்தவனை என்னவென்பது? அவனுக்கு அறிவு உண்டு என நாம் ஒப்புக் கொள்வோமா?
தங்களுக்கு ஏற்படுகிற துன்பங் களிலிருந்து விடுவிப்பதற்காக அல்லாஹ்வை அழைக்காமல் இறைவனால் படைக்கப்பட்டவர்களை அழைப்பவர்கள், சிலந்தி வலையை பாதுகாப்பிற்காகத் தேர்வு செய்தவர் களின் நிலையை ஒத்திருக்கிறார்கள்.
சிலந்தி வலை எப்படி மிகவும் பலவீனமானதோ அது போல அல்லாஹ் அல்லாத இவர்கள் தேர்வு செய்திருக்கும் இணையாளர்களும் அதை விடப் பலவீனமானவர்களே!
இவ்வாறு பின்வரும் உதாரணத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு இணையாக்கப்படுவோர் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை இறைவன் விளக்குகிறான்.
அல்லாஹ்வையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடு களிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?
அல்குர்ஆன் 29:41
முஸ்லிம்களே! நீங்கள் எதைத் தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உறுதியான பாதுகாப்பை வழங்கும் வல்லோன், வலியோன் அல்லாஹ்வை விட்டு விட்டு அவனால் படைக்கப் பட்ட அற்ப மனிதர்களையும், கற் சிலைகளையுமா உங்கள் பாதுகாவலர் களாகத் தேர்வு செய்திருக்கிறீர்கள்?
எளிதில் அறுந்து போகும் சிலந்தி வலையை அறுத்தெறிந்து விட்டு அல்லாஹ்வின் உறுதியான பாதுகாப்பை இறைஞ்சுங்கள்.
எஜமானனும் அடிமையும் சமமா?
தனக்கு நிகராக, சமமாக யாரும் இருக்க இயலாது என்பதை விளக்க இறைவன் நம்மையும் உதாரணமாகக் குறிப்பிடுகிறான்.
ஒரு எஜமானன் தம் செல்வத்தில் ஒரு பகுதியை தனது அடிமைக்கு வழங்கி தனக்குச் சமமாக ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை.
அது போலத்தான் நான் எனது ஆற்றலை, அதிகாரத்தை என் அடிமைகளுக்கு வழங்கி எனக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை என்று பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.
உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடை யையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
அல்குர்ஆன் 16:71
இறைவன் தன் ஆற்றலை யாருக்கும் வழங்க மாட்டான் என்பதை விளக்க இறைவன் காட்டியிருக்கும் இவ்வுதாரணம் அதி அற்புதமானது.
இன்றைக்கு இணை கற்பிக்கும் அதிகமானோரால் தங்களது இணை வைப்பை நியாயப்படுத்த முன் வைக்கப்படும் வாதம், அல்லாஹ்தான் இந்த அதிகாரத்தை அவ்லியாக்களுக்கு வழங்கினான்; அல்லாஹ் தான் இந்த அதிகாரத்தை இன்னாருக்கு வழங்கினான்; அல்லாஹ் தான் வழங்கினான் என்று நாங்கள் நம்புவதால் இது இணை வைப்பல்ல என்று தங்களுக்கு தாங்களே போலிச் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள்.
அத்தகையவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இறைவன் காட்டும் இந்த உதாரணம் அமைந்துள்ளது.
உனக்குச் சொந்தமான பொருளை உன் அடிமைக்கு வழங்கி அவனை உனக்குச் சமமாக்கிக் கொள்வாயா?
நீயும் உன் அடிமையும் சமம் என்கிற நிலையை நீயே ஏற்படுத்திக் கொள்வாயா?
இதை நீயே விரும்புவதில்லை என்றால் அகிலத்துக்கும் இறை வனாகிய நான், என் அடிமைகள் எனக்குச் சமமாவதை எப்படி விரும்புவேன்?
நானே என் அதிகாரத்தை அடிமைகளுக்கு வழங்கி எனக்குச் சமம் என்கிற நிலையை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டேன்.
இது தான் இந்த உதாரணத்தின் வாயிலாக மக்களுக்கு அல்லாஹ் முன் வைக்கும் கருத்தாக்கமாகும்.
எனவே அவ்லியாக்களுக்கு இறையதிகாரத்தை அல்லாஹ்வே வழங்கினான் என்று சொன்னாலும் இணை வைப்பு எனும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும்.
ஒரு அடிமையும் பல எஜமானர்களும்
இறைவனல்லாத பலருக்கும் இறைத்தன்மை வழங்குவோரைக் கண்டிக்கும் விதமாகப் பின்வருமாறு மற்றொரு உதாரணத்தை அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 39:29
ஒரு அடிமைக்கு ஒரு எஜமானன் இருக்கிறான் எனும் போது அந்த அடிமை தன் எஜமானனுக்கு விசுவாசமாக நடந்து நற்பெயர் எடுப்பான். தன் எஜமானனிடத்தில் நன்மதிப்பைப் பெறுவான்.
அதே சமயம், ஒரு அடிமைக்கு மாறுபட்ட தன்மை கொண்ட பல எஜமானர்கள் இருக்கிறார்கள் எனில் இவன் யாருக்குத் தான் விசுவாசமாக நடக்க இயலும்?
அவன் சரியான வேலையாளாகச் செயல்பட இயலாது என்பதுடன் குழப்பங்களும், கோளாறுகளுமே மிஞ்சும்.
அது போல இறைவன் ஒருவனையே எஜமானனாக தேர்வு செய்து அவனுக்கே அடிமையாக இருப்பவன் குழப்பமற்ற நேரான கொள்கையில் இருக்கிறான்.
அல்லாஹ்வுடன் சேர்த்து பலருக்கும் இறைத்தன்மையை வழங்கி, வணங்குபவர்கள் குழப்பமான கொள்கையில் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் இந்த உதாரணத்தின் வாயிலாகத் தெரிவிக்கின்றான்.
விளங்காத கால்நடைகள்
இறைவனுக்கு இணை கற்பிக்கும் இறைமறுப்பாளர்கள் வார்த்தைகளை விளங்காமல் வெறும் சப்தத்தை மட்டுமே கேட்கும் கால்நடைகளிடம் தங்கள் தேவைகளைக் கேட்பதற்கு ஒப்பானவர்கள் என்று இறைவன் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
வெறும் சப்தத்தையும், ஓசை யையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 2:171
ஆடு மாடுகளிடம் அதன் மேய்ப்பர்கள் சொல்லும் வார்த்தைகளை அக்கால்நடைகள் முறையாகச் சிந்தித்து புரிந்து கொள்வதில்லை. வெறும் சப்தத்தை மட்டுமே அவை கேட்கின்றன. இந்த கால்நடைகளிடம் போய் எனக்கு செல்வத்தைக் கொடு, குழந்தையைக் கொடு என்று கேட்பவர்கள் எத்தகைய மூடர்கள் என்பதை இறைவன் இங்கு விளக்குகிறான். இவர்கள் காதிருந்தும் செவிடர்கள், கண்ணிருந்தும் குருடர்கள், வாயிருந்தும் ஊமைகள் என்று அல்லாஹ் உவமை காட்டுகிறான்.
செவிடன், குருடன்
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இவ்விரு பிரிவினருக் கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார்வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா? நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா?
அல்குர்ஆன் 11:23, 24
ஷைத்தானால் குழப்பத்தில் தள்ளப்பட்டவன்
ஈடு, இணையற்ற இறைவனுக்கு இணை கற்பிப்போர் ஷைத்தானால் குழப்பப்பட்டு வழிகேட்டில் தள்ளப் பட்டோர் ஆவார்கள் என்ற உவமையையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
"எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) "எங்களிடம் வந்து விடு' என நேர்வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் யாரை வழிகெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டார்களோ அவனைப் போல் ஆகி விடுவோம்'' எனக் கூறுவீராக! "அல்லாஹ்வின் வழியே நேர்வழி. அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6:71
ஈயைக் கூட...
பின்வரும் வசனத்தில் இணை வைப்போருக்கும் இணையாக ஆக்கப்படுவோருக்கும் இறைவன் காட்டும் உதாரணம் எந்த விளக்கமும் கூறத் தேவையில்லாதது.
இதோ அல்லாஹ்வின் வார்த் தையைப் படித்துப் பாருங்கள்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் 22:73
தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனர்கள் என்கிற அல்லாஹ்வின் வார்த்தை ஒன்று போதும்.
இனியும் அவ்லியாக்கள், மகான்கள் என பிதற்றிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு ஸஜ்தா செய்வது, அவர்களிடம் பிரார்த்தனை புரிவது போன்ற இணை வைப்புக் காரியங்களை விட்டும் விலகி இணையில்லா இறைவன் ஒருவனையே வணங்குங்கள், அவனிடமே உங்கள் தேவைகளை கேளுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.
புயல் காற்றில் புழுதியாகும் சாம்பல்
இணை கற்பிப்போருக்கு அல்லாஹ் உதாரணம் கூறுவதுடன் அவர்கள் உலகில் செய்கின்ற நன்மையான செயல்களுக்கும் இறைவன் உதாரணம் கூறத் தவறவில்லை.
இணை வைப்பாளர்கள் என்ன தான் நற்காரியங்கள் புரிந்தாலும் அது புயல் காற்றில் பறக்கும் சாம்பலைப் போன்று ஒன்றுமில்லாமல் அழிந்து விடும் என்கிறான்.
தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும்.
அல்குர்ஆன் 14:18
கானல் நீர்
(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39
ஆழ்கடல் இருள்கள்
(ஏகஇறைவனை மறுப்போரின் செயல்கள்) ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.
அல்குர்ஆன் 24:40
இணை வைப்போரின் நன்மைகள் அழிந்து போகும் என்று இறைவன் திருக்குர்ஆனில் பல இடங்களில் எச்சரித்துள்ளான்.
இந்த உதாரணங்கள் அவர்களது அமல்கள் அழிந்து எப்படி ஒன்றும் இல்லாமல் போகிறது என்பதைத் துல்லியமாக விளக்கி விடுகிறது.
அல்லாஹ்வே சிறந்த விளக்கமுடையோன் என்பதற்கு இவ்வுதாரணங்கள் ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.
இம்மை, மறுமையில் ஈடுகட்ட முடியாத இழிவை ஏற்படுத்தும் இணை வைப்பிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

EGATHUVAM JAN 2016