இதயங்களை ஈர்த்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல்லாஹ் ஒருவன் என்று முஸ்லிம்கள் அனைவருமே சொல்கிறார்கள். ஆனால் தங்களது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ் அல்லாதவர்களையும் அவனுடன்
கூட்டாக்கிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்த போது நம்மைக்
கடுமையாக எதிர்த்தார்கள். நம் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.
அல்லாஹ்வின் பள்ளியில் தொழ விடாமல்
தடுத்தார்கள். ஊர் நீக்கம் செய்தார்கள். பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்குத்
தடை விதித்தார்கள். பொது மையவாடியில் ஜனாஸாவை அடக்க அனுமதி மறுத்தார்கள். திருமணப்
பதிவேடும் தர முடியாது என்று அறிவித்தார்கள்.
காவல்துறையில் தொடர்ந்து புகார்கள், நீதிமன்றத்தில் வழக்கு என சுன்னத் வல் ஜமாஅத் என்ற
போர்வையில் உள்ள இணை வைக்கும் (ஷிர்க்) ஜமாஅத்துக்கும் நமக்கும் இடையே ஒரு நீண்ட போராட்டம் இது வரையில் நடந்து கொண்டு தான்
இருக்கின்றது.
பள்ளிவாசலுக்குள் வராதே என்று இவர்கள்
அறிவிக்காவிட்டாலும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதை
அல்லாஹ் தடுத்துள்ளதால், நாமே ஒதுங்கி விடும் கடமை நமக்கு உள்ளது
என்பதால் நீயும் வேண்டாம்; உன் பள்ளிவாசலும் வேண்டாம் என்று தமிழகத்தில்
நமக்கென்று தனிப் பள்ளிவாசல்கள் கட்டித் தொழ ஆரம்பித்தோம்.
அல்லாஹ்வின் கிருபையால் வளர்ச்சி பலமடங்கு
பல்கிப் பெருகியது. திருமணத்திற்கு தனிப் பதிவேடு கண்டோம். அதனால் அவர்களின்
அடக்குமுறைகள் ஒரு கட்டுக்குள் அடங்கியது. இருப்பினும் நமக்கும் அவர்களுக்கும்
பாத்தியப் பட்ட அடக்கத்தலத்தில் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் இன்னும் சில ஊர்களில்
பிரச்சனைகள் தொடரத் தான் செய்கின்றன.
இது மட்டுமல்லாமல், புதிதாகப் பள்ளி கட்டுகின்ற போது அதற்கும் இவர்கள்
எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இன்னும் வேடிக்கை
என்னவென்றால் ஜமாஅத் உலமா என்ற பெயரில் உள்ள செல்வாக்கு இழந்த சில பரேலவிகள், சமுதாயத்தில் சல்லிக் காசுக்குக் கூடத் தேறாத அனாமதேயங்கள்
தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் மீது காஃபிர் ஃபத்வா கொடுத்தார்கள். இவர்களின் ஃபத்வா
சிந்தனை உள்ள எவராலும் சீண்டிக் கூட பார்க்கப்படவில்லை.
அவ்வப்போது ஸைஃபுத்தீன் ழலாலியை அழைத்து வந்து, தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது வெறுப்பேற்றியும் சுன்னத் ஜமாஅத்தை உசுப்பேற்றியும் ஒரு
பரேலவிக் கூட்டம் தொடர்ந்து முழு நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றது.
இத்தனை எதிர்ப்புகளும், ஏவு கணைகளும் நம் மீது வருவதற்குக் காரணம் என்ன?
"புகழுக்குரியவனும், மிகைத்தவனு மாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்'' என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை
(அல்குர்ஆன் 85:8)
என்று அல்லாஹ் சொல்வது போன்று படைத்தவனாகிய ஒரே
ஒரு அல்லாஹ்வை நம்பிய பாவத்திற்காகத் தான் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும், தண்டனையும்!
எனினும் தவ்ஹீதுகளாகிய நாம் இந்தக்
கொள்கையிலிருந்து பின் வாங்கி விடவில்லை.
"உங்களை விட்டும், அல்லாஹ் வையன்றி எதனை வணங்குகிறீர் களோ அதை விட்டும்
நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக் கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை
கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்
றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில்
இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(அல்குர்ஆன் 60:4)
என்று இப்ராஹீம் நபியவர்கள் கூறியதைப் போலவே
நாமும் முழங்கினோம்.
1. இப்ராஹீம் நபியவர்களின் வழியில், இவர்கள் பள்ளியில் தொழுவிக்கின்ற இமாம்களுக்குப் பின்னால்
நின்று தொழமாட்டோம் என்று பிரகடனப்படுத்தினோம். இதை நாம் நமது சொந்த
விருப்பத்திற்கேற்ப செய்யவில்லை.
"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர
எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்.
அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.''
"ஹாஜிகளுக்குத் தண்ணீர்
வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும்
இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ் வின் பாதையில் போரிடுவோரைப் போல்
கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள்.
அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்''
(அல்குர்ஆன் 9:18, 19)
என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற
வசனங்களின் அடிப்படையில் தான் இவ்வாறு பிரகடனப்படுத்தினோம். ஒரு பள்ளிவாசலில் மின் விளக்கை மாட்டுவது, மின் விசிறி பொருத்துவது, ஏதாவது கட்டட
வேலை அல்லது பழுது செய்வது தான் நிர்வாக வேலை என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.
தொழுவிப்பது தான் மாபெரும் நிர்வாக வேலையாகும். எனவே, தொழுவிக் கின்ற இமாம் இணைவைப்பவராக இருந்தால் அவரைப்
பின்பற்றித் தொழ மாட்டோம் என்று பிரகடனப் படுத்தியதற்கு
இதுதான் பின்னணியாகும்
2. சுன்னத் (?) ஜமாஅத்தில் இருந்து கொண்டு இணை வைத்த நிலையில் யாராவது இறந்து விட்டால், இறந்தவர் நம்மைப் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் கூட
அவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ளமாட்டோம்.
"இணை கற்பிப்போர் நரகவாசிகள்
என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும்
அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக் கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத்
தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின்
காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து
விலகிக் கொண்டார் இப்ராஹீம் பணி வுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
(அல்குர்ஆன் 9:113, 114)
என்று எல்லாம் வல்ல அல்லாஹ் தடை விதித்தது தான்
இதற்குக் காரணமாகும்.
3. ஒருவர் ஏகத்துவத்திலேயே மரணித்திருப்பார்.
ஆனால் அவரது ஜனாஸாவிற்கு சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஒரு இமாமே நின்று தொழுவித்தால் நாம் அந்த ஜனாஸாவில் நின்று
தொழமாட்டோம். முடிந்த வரையில் அந்த ஜனாஸா விற்கு நபி (ஸல்) காட்டிய முறைப்படி நாம்
தான் தொழுவிப்போம். பல ஊர்களில் ஜனாஸாவை ஒட்டி பெரிய போராட்டக்களமே
நடந்தேறுகின்றது. அதே சமயம், ஏதோ ஒரு
நிர்ப்பந்தம் காரணமாக நாம் தொழ முடியாமல் தடுக்கப்பட்டு அந்த ஜனாஸா அடக்கம்
செய்யப்பட்டால், நாம் தனியாக காயிப் ஜனாஸா தொழுது கொள்வோம்.
4. ஷிர்க், பித்அத் நிறைந்த திருமணங்கள், வரதட்சணை, பெண் வீட்டு விருந்து போன்ற சமூகக் கொடுமைகள் நடைபெறும்
திருமணங் களை நாம் புறக்கணித்து விடுகின்றோம்.
"அல்லாஹ்வின் வசனங்கள்
மறுக்கப்பட்டு, கேலி செய்யப் படுவதை நீங்கள் செவியுற்றால்
அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன்
அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில்
உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர் களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்''
(அல்குர்ஆன் 4:140)
என்ற அல்லாஹ்வின் கட்டளை தான் இதற்கு
அடிப்படைக் காரணமாகும். நமது ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த ஜமாஅத்தும் பெண் வீட்டு
விருந்தை சமூகக் கொடுமை என்ற பாவப்பட்டியலில் சேர்ப்பதே கிடையாது. பெண் வீட்டு
விருந்து என்றால் போய் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து விடுகின்றார்கள். பெண்
சிசுக் கொலைக்குப் பின்னணியாக பெண் வீட்டு விருந்து இருக்கின்றது என்பதை விளங்காமல் இயக்கம்
நடத்தும் ஜாக் இதில் முன்னணியில் உள்ளது என்பதையும் இந்த நேரத்தில் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
5. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை மட்டும் தான்
திருமணம் முடிக்க வேண்டும். பிற பெண்களை, அவர்கள் ஏகத்துவத்தை ஏற்காத வரை புறக்கணிக்க வேண்டும். இதே போன்று பெண்களும்
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மணமகனையே தேர்வு செய்ய வேண்டும்.
6. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக் கின்ற மவ்லிது போன்ற
ஷிர்க்கான காரியங்களில் பங்கு கொள்ளாமல் இருப்பது, அதற்காக சமைக்கப் படுகின்ற உணவுகளைச் சாப்பிடாமல் புறக்கணிப்பது என்று
கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பின் பட்டியல் நீண்டு கொண்டே
செல்கின்றது.
உதாரணத்திற்கும் மட்டும் ஒரு சில
புறக்கணிப்புகளை இங்கு சுட்டிக் காட்டி உள்ளோம். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத இந்தப் புறக்கணிப்புப்
போர் பிரகடனத்தை ஊருக்கு ஊர் நான்கைந்து பேர்கள் இருக்கும் போதே துவக்கி விட்டோம்.
இன்றைக்கு அல்லாஹ்வின் அருளால் ஊருக்கு ஊர்
கிளைகள், மர்கஸ்கள் என்று தோன்றியுள்ளன. அன்று
அப்படியில்லை. அப்படி மிக அரிதிலும் அரிதான எண்ணிக்கையில், அறுதி சிறுபான்மையாக இருக்கும் கட்டத்தில் தான் இந்த
அறிவிப்பைச் செய்திருந்தோம். கொள்கைச் சகோதரர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத்
தாங்கிக் கொண்டு அவற்றை எதிர்கொண்டார்கள்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும்
சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது
தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக
இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின்
உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப்
பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ்
பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின்
கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
(அல்குர்ஆன் 58:22)
இது போன்ற அல்லாஹ்வின் வசனங்கள் உணமையிலேயே
பெரிய உறுதிப்பாட்டையும், உள ஓர்மைப் பாட்டையும் உத்வேகத்தையும் உந்து
சக்தியையும் ஒவ்வொரு ஏகத்துவக் கொள்கைவாதிக்கும் அளித்தன.
உதாரணத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண விஷயத்தில் வைத்திருக்கின்ற, வகுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் கண்டிப்பாக உறவுகளிடம்
பகைக் காமல் இருக்க முடியாது.
சூனியத்தில் நம்பிக்கை கொண்ட வர்களுக்குப்
பின்னால் நின்று தொழ முடியாது என்ற நிலைப்பாட்டை நாம் பகிரங்கமாக அறிவித்ததன்
காரணமாக கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத
புறக்கணிப்பின் வட்டம் நீண்டது.
இத்தனைக்குப் பிறகும் என்ன நடக்க வேண்டும்? மக்கள் நம்மை விட்டு விலக வேண்டும். நம்மை விட்டு இன்னும் பல மைல்கள் ஓட்டமெடுக்க வேண்டும்.
மக்கள் நம்மை அண்டவும் கூடாது; ஒண்டவும்
கூடாது. ஆனால் இத்தனைக்குப் பிறகும் மக்கள் இந்தக் கொள்கையை நோக்கி ஓடி
வருகின்றார்கள். நம்மை நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்த்தவர்கள், எதிர்த்தவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர் அல்லது நண்பர்கள் போன்றவர்கள் தான்
இந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு இணைந்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடு தான்
ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில்
நடைபெற்றுள்ள இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு!
இம்மாபெரும் மக்கள் வெள்ளம் என்பது அதிகமான கொள்கைவாதி களையும், என்னதான் நடக்கின்றது என்று பார்க்க வருபவர்களையும், நம்மை விமர்சிக்க வருகின்ற எதிரணியினரையும் உள்ளடக்கியது
தான் என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.
இருப்பினும் திருச்சியில் பெருக்கெடுத்திருக்கின்ற இந்த மக்கள் வெள்ளம், அன்றைக்கு ஆரம்ப காலகட்டத்தில் இணைந்த எண்ணிக்கையை விடப்
பல்லாயிரம் மடங்கு அதிகம்.
இந்த ஜமாஅத்தில் இணைந்தவர் களின் எண்ணிக்கை
ஒருவர், இருவர், மூவர் என்று பெருகிப் பெருகி, காட்டாற்று
வெள்ளமாக மாறி இருக்கின்றதே அது பிரகடனப் படுத்துகின்ற செய்தி என்ன? அதன் விளக்கம் என்ன?
அதிலும் குறிப்பாக பல்வேறு சிந்தனை, சித்தாந்தம் கொண்டவர்கள் நம்மை எதிர்ப்பது என்ற
மையப்புள்ளியில் மட்டும் சந்திக்கக் கூடியவர்கள், நம்மை அழிப்பதை மட்டுமே ஒரே ஒரு குறிக்கோளாகக் கொண்டு சிந்திக்கக் கூடியவர்கள்
எத்தனையோ இலட்சங்களை செலவழித்து பெருங்கூட்டம் வராதா? என்று ஏங்கி எதிர்பார்த்து. பெரும் மைதானத்தில் மாநாட்டை நடத்து கின்றனர். ஆனால், காலி மைதானத்தில் ஈயாட்டத்தை மட்டும் பார்த்து விட்டு, பேயாட்டம் ஆடி ஏமாந்து திரும்பிப் போன வரலாற்றை அடிக்கடி
நாம் கண்ணாறக் கண்டிருக்கும் போது, தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் இவ்வளவு மக்கள் வெள்ளம் வருகின்றது என்றால் அதன்
பொருள் என்ன?
அதிலும் குறிப்பாக, பெரும் எண்ணிக்கை கொண்ட முஹல்லா ஜமாஅத்துகள்; பெரும்பான்மை ஜமாஅத்தினர் என்று பரம்பரை, பாரம்பரிய பெருமை பேசி பாசுரமும் பாயிரமும் பாடக் கூடிய இயக்கங் களுக்கு
மத்தியில் இவ்வளவு பெரிய மக்கள் சங்கமம் தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும்
சாத்தியமானது எப்படி?
அரசியலில் இறங்கி, ஆதாயம் அடைந்து, மாநிலம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகள் கூட பெரும் பொருளாதாரத்தைத் திரட்டி, கார்களில் வலம் வரும் இயக்கங்களின் செல்வச் செழிப்பைப்
பார்த்த பின்னரும் அந்தக் கவர்ச்சியில் மதி மயங்காமல் மக்கள் நமது ஜமாஅத்தில்
வந்து மொய்ப்பதற்குக் காரணம் என்ன?
மாநாட்டுக்கு வாருங்கள் என்று நமது ஜமாஅத்
சார்பில் நேர்மறைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு புறத்தில் மாநாட்டுக்குப் போகாதீர்கள் என்று
பரேலவிகளால் பகிரங்க எதிர்மறைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது.
இத்தனையும் தாண்டி இறை யருளால் இந்தத் திடல்
கடலாகப் பொங்கி வழிகின்றது என்றால் காரணம் என்ன?
இதற்குரிய காரணம் ஒன்றே ஒன்று தான்! அது தான்
நாம் இது வரை கட்டிக் காத்து, கடைப்பிடித்து
வருகின்ற கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பு என்ற ஆயுதம்!
இந்த ஆயுதமேந்திப் போராடுபவர் களுக்கு, புறக்கணிப்பு என்ற புடம் போடும் சோதனையில் புரட்டி எடுக்கப்
படக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஒரு பரிசை அதே மும்தஹினா அத்தியாயத்தின் 7வது வசனத்தில் அறிவிக்கின்றான். அதென்ன பரிசு என்று
ஆச்சரியமாகக் கேட்கின்றீர்களா?
உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்கு மிடையே அல்லாஹ்
அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 60:7)
இது தான் அந்தப் பரிசாகும்.
அன்று தவ்ஹீதுக்காக தனி மரமாக நின்றோம்.
அல்லாஹ்வுக்காக உறவுகளைப் பகைத்தோம். நட்புகளைப் பறிகொடுத்தோம். பரிதவிப்புக்கும்
பல பாதகங்களுக்கும் உள்ளானோம். அப்படிப்பட்ட நமக்கு, நாம் பகைத்த மக்களையே நம்முடன் சங்கமிக்கச்
செய்கின்றான்; நம்முடன் கொண்டு வந்து சேர்க்கின்றான் என்பது
தான் அந்தப் பரிசாகும். அல்லாஹ் நமக்கு அளிக்கின்ற நற்செய்தியும் நன்மாராயமும்
ஆகும்.
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் விடுக்கும்
செய்தி இதுதான்.
ஏகத்துவவாதியே! உன்னுடைய ஒரே பணி ஏகத்துவத்தை
மக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்ற பணி மட்டும் தான். அதை அவர்கள் எதிர்த்தால்
அல்லாஹ்வுடைய பிரியத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு நீ அவர்களிடம் உறவு வைக்காதே! நட்பு பாராட்டதே!
இதில் குறுக்கே வருவது உன் தாய் தந்தையாகக் கூட
இருக்கலாம், திருக்குர்ஆனில் (9:114) அல்லாஹ் குறிப்பிட்டது போன்று தன் தந்தையைப் பகைத்த இப்ராஹீம் நபியை நீ முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்! அல்லாஹ்
நினைத்தால் உனது உறவினர்களை இப்படி நிரந்தரப் பகையாளியாகவும் ஆக்கி விடுவான்.
அதே சமயம், முஸ்லிம்கள் பத்ர் போர்க்களத்தில் சொந்த பந்தங்களை எதிர்த்துப் போரிட்டதையும்
முன்னுதாரணமாக ஆக்கி கொள்! இந்தப் போர்க்களத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் தனது
சிறிய தந்தை அப்பாஸையும், அலீ (ரலி) தனது சகோதரர் அகீலையும் எதிர்த்துத்
தான் களம் கண்டார்கள். பின்னால் அவ்விருவரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
இப்படி அவர்களுக்கு மத்தியில் இணைப்பையும்
பாசத்தையும் ஏற்படுத்தியது போன்று உங்களுக்கும் உங்கள் எதிரிகளுக்கு மத்தியில் அல்லாஹ்
இணைப்பையும், பாசத்தையும் ஏற்படுத்துவான்.
உஹத் போர் முதல் அஹ்ஸாப் போர் வரை எதிர்த்து
நின்ற அபூ சுஃப்யானையும், ஏனைய போர்களில் எதிர்த்து நின்றவர்களையும்
இஸ்லாத்தில் இணைத்ததைப் போன்று உங்களுடைய எதிரிகளின் இதயங் களை அல்லாஹ் இணைக்கவும் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பகைத்துக் கொண்ட எதிரிகள் அத்தனை
பேர்களும் பல்வேறு போர்க்களங்களில் கொல்லப்பட்டு விடவில்லை.
அவர்கள் போர்க் களங்களில் கொல்லப்பட்டதை விட பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றது தான்
அதிகம் என்று நீங்கள் தெரிந்திருக்கலாம்.
நீங்கள் இந்தக் கொள்கையில், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத புறக்கணிப்பைக் கடைப்
பிடிப்பதில் உறுதியாக இருந்தால் மக்களை உங்கள் பக்கம் அல்லாஹ் திருப்பி விடுவான்.
காரணம், இதயத்தை ஈர்ப்பதும், மக்களைக் கொண்டு வந்து சேர்ப்பதும் அவனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது.
இது தான் 60:7 வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு விடுக்கும் செய்தியாகும். இதை மாநாடு நமக்கு
விடுக்கின்ற முதல் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது, ஒட்டு மொத்த தமிழகமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு மற்ற அரசியல், சமுதாய அமைப்புகளுக்குக் கூடாத அளவிற்கு நமக்கு பிரம்மாண்டமான, பிரமாதமான கூட்டம் கூடிவிட்டது என்று நினைத்தால் நாம்
அழிந்து விட்டோம். இவ்வாறு நாம் நினைக்கத் தலைப்பட்ட நேரத்திலேயே அழிவு உறுதியாகி
விட்டது என்று உறுதி செய்து கொள்ள வேண்டியது தான்.
அல்லாஹ் அத்தகைய ஆணவ மான, அகங்காரமான எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக!
இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிக்
கூறுகின்ற 110வது அத்தியாயத்தை நம்முடைய உள்ளங் களில் பதிய
வைத்துக் கொள்வோமாக!
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது, அல்லாஹ் வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக
நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!
அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் அத்தியாயம் 110)
இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கட்டளையிட்டபடி
இறைவனைத் துதித்து அவனிடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்வோமாக!
இதை இந்த மாநாடு நமக்கு விடுக்கின்ற இரண்டாவது
செய்தியாக எடுத்துக் கொள்வோம்.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி
செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு
மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை.
பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி
ஓடினீர்கள்.
(அல்குர்ஆன் 9:25)
அல்லாஹ் கூறுகின்ற இந்த எச்சரிக்கையையும் நாம்
இதயத்தில் பதிய வைத்து, பாடமாகக் கொள்வோமாக! இவ்விரண்டும் நமக்கு
மாநாடு விடுக்கும் செய்தியாகும்.
நம்மை இது வரைக்கும் சளைக்காமல் சடையாமல்
சதாவும் எப்போதும் எதிர்த்துக் கொண் டிருக்கும் மக்களுக்கு இந்த மாநாடு விடுக்கும்
செய்தி என்ன?
இந்த ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய எண்பதுகள்
முதல் இன்று வரை நீங்கள் எங்களை ஊர் நீக்கம் செய்வதிலிருந்து உயிருக்கு உலை வைப்பது வரையிலான அத்தனை
வேலைகளையும் எங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தொய்வின்றி செய்து கொண்டே தான் இருக் கிறீர்கள். ஆனால் அந்தச் சதி வேலை களில் தொடர்ந்து
தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றீர்கள்.
இவர்கள் யார்? நேற்று வரை உங்களுடன் இருந்தவர்கள் தான். அவர்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள்
என்றார்கள் அதற்குக் காரணம் என்ன?
நாங்கள் குர்ஆன், ஹதீஸை அவர்களிடம் தூய வடிவில் எடுத்து வைக்கின்றோம். அது தான் அவர்களை அலை
அலையாக இங்கு கொண்டு வந்து சேர்க்கின்றது.
இது அல்லாஹ்வின் வேலையாகும். எனவே நீங்களும்
இந்தக் கொள்கையை ஏற்று இந்த சத்தியத்தில் உங்களை ஐக்கியமாக்கிக் கொள்ளுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக்
கொள்கின்றோம்.
இதன் பின்னரும் எங்களுக்கு எதிரான சதி
வேலைகளில் இறங்கினீர்கள் என்றால், "(எதிரிகள்)
சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாக சூழ்ச்சி
செய்பவன்'' (அல்குர்ஆன் 3:54) என்ற அல்லாஹ்வின் வசனத்தை உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றோம்.
EGATHUVAM FEB 2016