அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத்
தடை!
ஒருவரை அடக்கம் செய்யும் போது குழியில் இருந்து
எடுக்கப்பட்ட மண்ணை விட சிறிதளவும் அதிகமாக்கக் கூடாது என்ற அளவுக்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கப்ருகள் மீது கட்டுவதையும், அதில்
அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத்
2807
குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதனையும்
அதிகமாக்கக் கூடாது என்ற இந்தத் தடை ஒன்றே சமாதிகளைக் கட்டக் கூடாது என்பதற்குப்
போதுமான ஆதாரமாகும்.
குழியில் இருந்து எடுத்த மண்ணை மீண்டும் போட்டு மூடினால்
அடக்கத்தலம் சற்று உயரமாகிவிடும். இது தவறல்ல. மண்ணைத் தோண்டும் போது மண்ணுடைய
இறுக்கம் குறைவதாலும், உடலை உள்ளே வைப்பதாலும் முன்பு இருந்ததை விட அந்த இடம்
சற்று உயரமாக ஆனாலும் சில நாட்களில் மண் இறுகுவதாலும், உடல்
மக்கிப்போவதாலும் ஏறக்குறைய தரைமட்டத்துக்கு வந்து விடும்.
குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட வேறு எதையும்
அதிகமாக்கக் கூடாது என்றால் சிமிண்ட், சுண்ணாம்பு
கொண்டு பூசுவதும் உயர்த்திக் கட்டுவதும் ஹராமான செயல் என்று இந்த ஹதீஸ் மூலம் நாம்
அறியலாம்.
அதிகமாக்கக் கூடாது என்ற தடையில் பூசுவதும், கட்டுவதும்
அடங்கும் என்ற போதிலும் இந்த சமுதாயம் வழிதவறி விடக்கூடாது என்பதற்காக நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாகவும் தடை செய்து விட்டார்கள்.
Source : www.onlinepj.com