Mar 19, 2017

ஏகத்துவம் தொடர் 01

ஏகத்துவம் தொடர் 01
  
சர்ச்சைப் பகுதி
அபூராஜியா

முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. சுமார் 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்த 20 கோடி பேரில் எத்தனை பேர் இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்டவர்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் வாரிசு முறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளோம். இந்தியாவை உதாரணத்திற்குக் கூறினாலும் உலகம் முழுவதும் இதே நிலைதான்.

இன்று நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றால் உலகிலுள்ள அனைத்து மதங்களையும் ஆய்வு செய்து, மற்ற மதங்களில் உள்ள குறைபாடுகளை அலசி ஆராய்ந்து, இஸ்லாம் மட்டுமே பகுத்தறிவுக்குப் பொருத்தமான மார்க்கம் என்பதை உணர்ந்து நாம் இஸ்லாத்திற்கு வரவில்லை. நம்முடைய தாய் தந்தையர்கள் முஸ்லிம்களாக இருந்ததால் நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். அவர்களுடைய தாய் தந்தையர் முஸ்லிம்களாக இருந்ததால் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். இப்படி வாரிசு அடிப்படையில் தான் நாம் இஸ்லாம் என்ற அருட்கொடையை அடைந்திருக்கின்றோம்.

ஒருவேளை நாம் முஸ்லிம் அல்லாத தாய் தந்தையருக்குப் பிறந்திருந்தால் இந்த இஸ்லாத்தை ஏற்றிருப்போமா என்பது சந்தேகமே! அவர்கள் எப்படி நம்மை வளர்க்கின்றார்களோ அதைத் தான் நாம் மார்க்கம் என்று நினைத்து பின்பற்றியிருப்போம்.

நாம் கேட்காமலேயே கிடைத்திருக்கின்ற அருட்கொடையை நாம் உரிய விதத்தில் பயன்படுத்துகின்றோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஒருவருக்கு எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு லட்ச ரூபாய் பணம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அனாமத்தாக வந்தது தானே என்று அவர் அந்தப் பணத்தை அள்ளி இறைத்து விட மாட்டார். அந்தப் பணத்தின் மதிப்பை உணர்ந்து அதை எப்படி செலவு செய்ய வேண்டுமோ அப்படித் தான் செலவு செய்வார். அதே போலத் தான் இந்த இஸ்லாம் எனும் அருட்கொடை நாம் முயற்சி செய்யாமல் நமக்குக் கிடைத்திருந்தாலும் அதன் மதிப்பை உணர்ந்து அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் நாம் அனைவரும் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, இஸ்லாத்தின் ஜீவநாடியாகத் திகழும் ஏகத்துவத்தைப் பற்றி இந்தத் தொடரில் நாம் காணவிருக்கின்றோம்.

இஸ்லாத்தின் உயிர் மூச்சு ஏகத்துவம்! லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாருமில்லை என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! இதைத் தான் ஏகத்துவம் என்று கூறுகின்றோம். அதாவது ஓரிறைக் கொள்கை என்பது இதன் பொருள்!

இந்த ஓரிறைக் கொள்கையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையின் போது பதிமூன்று ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார்கள். மதீனா வாழ்க்கையிலும் அதைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்றாலும் அப்போது ஆட்சி இருந்தது, வணக்க வழிபாடுகள் அனைத்தும் கடமையாகியிருந்தன, ஹராம் ஹலாம் சட்டங்கள் அருளப்பட்டிருந்தன. ஆனால் மக்கா வாழ்க்கையின் போது ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது மட்டுமே கடமையாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற எந்த வணக்கமும் கடமையாகி இருக்கவில்லை. தொழுகை மட்டுமே கடமையாக இருந்தது. அதுவும் இறுதிப் பகுதியில் தான் கடமையாக்கப்பட்டது. மது, சூது போன்ற கொடுமையான தீமைகள் கூட அப்போது தடுக்கப்படவில்லை. இந்த ஒரு கொள்கை மட்டும் தான் பெருமானாரின் பதிமூன்று ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் இருந்தது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்ப வைப்பதற்குத் தான் அவர்களது நபித்துவ வாழ்க்கையின் பெரும்பகுதி செலவளிக்கப்பட்டது. இந்த ஒரு நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைப்பதற்காக அவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் இஸ்லாத்தின் மற்ற அம்சங்களைச் செயல்படுத்துவது பெரிய சிரமமாக இருக்காது.

ஒரு கட்டடம் எவ்வளவு தான் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டாலும் அதில் அஸ்திவாரம் சரியில்லாவிட்டால் அது நிலைக்காது. எனவே ஏகத்துவம் என்ற அஸ்திவாரத்தை பலமாகப் போடுவதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அந்த மக்களிடம் இருந்த பல கடவுள் கொள்கையை உடைத்தெறிவதற்காக தமது மக்கா வாழ்க்கையைப் பயன்படுத்தினார்கள்.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கையில் உள்ளத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். அவனைத் தவிர சிலைகள், சமாதிகள், பெரியார்கள் மீதுள்ள நம்பிக்கைகளை உள்ளத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று தான் போதிக்கின்றது. கலிமத்துத் தவ்ஹீத் எனப்படும் "லாயிலாஹ இல்லல்லாஹ்' என்பதில் ஆரம்பமே, "லா - இல்லை' என்று துவங்குகின்றது. அல்லாஹ் ஒருவன் என்பதை விட அவனைத் தவிர யாருமில்லை என்பது மிகவும் ஆழமான பொருளைக் கொண்டது.

இந்த ஒரு நம்பிக்கையை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்து விட்டால், இந்த அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டு விட்டால் அதன் மீது எவ்வளவு பெரிய கோட்டையைக் கட்டினாலும் அது நிலைத்து நிற்கும். எனவே தான் இந்த அஸ்திவாரத்தைப் போடுவதற்காக பெருமானார் அவர்கள் பதிமூன்று ஆண்டுகளைச் செலவிட்டார்கள். ஏனைய அனைத்து சட்ட திட்டங்களுக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் சேர்த்து பத்து வருடங்களைத் தான் செலவிட்டார்கள்.

மக்கா வாழ்க்கை முழுவதும் ஏகத்துவக் கொள்கையை மட்டுமே திருப்பித் திருப்பி சொன்னார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு அதை மட்டுமே கட்டளையிட்டான். வேறு சட்டதிட்டங்கள் சம்பந்தமாக வஹீ அருளப்படவில்லை. முழுக்க முழுக்க ஓரிறைக் கொள்கையையும் மறுமை வாழ்க்கையையும் பற்றித் தான் இறைச் செய்திகள் அருளப்பட்டன.

பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்த "லாயிலாஹ இல்லல்லாஹ்' என்ற கொள்கையைப் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்வது அவசியம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றால் என்ன பொருள்? அதில் என்னென்ன விஷயங்கள் அடங்கியுள்ளன? ஒரு வரியில் அடங்கியுள்ள இந்தக் கொள்கையை நபிகள் நாயகம் பதிமூன்று வருடங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் நம்முடைய ஈமான் உறுதியான ஈமானாக இருக்கும். எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் ஈமான் ஆட்டம் காணாது. அப்படி ஒரு உறுதியான நிலையை நாம் அடைய வேண்டும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!
(அல்குர்ஆன் 47:19)

வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்லுங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை. அதை நம்புங்கள் என்று கூறவில்லை. மாறாக, அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஃபஅலம் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றான். சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளுங்கள் என்பது இதன் கருத்து! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று வாயளவில் சொன்னால் போதாது. அதை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தவிர கடவுள் இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

இஸ்லாத்தை வாரிசு அடிப்படையில் நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால் நம்முடைய தாய் தந்தையர் சொல்லித் தந்தது தான் இஸ்லாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. நாமாக சிந்திக்க வேண்டும். விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலவிதமான கொள்கைகள், கோட்பாடுகள், சந்தேகங்கள், வாதங்கள் நம்மிடம் எடுத்து வைக்கப்படும். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இஸ்லாத்தை, அதன் உயிர் மூச்சான ஏகத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவுவாதிகள் என்று ஒரு கூட்டம் "கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்று கூறுவார்கள். போகிற போக்கில் அதைச் சொல்லி விட்டுப் போக மாட்டார்கள். அதற்கான வாதங்களையும் எடுத்து வைப்பார்கள். "கடவுளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? அல்லது உனது தாய் தந்தையர்கள் பார்த்திருக்கின்றார்களா? அல்லது நீ வழிகாட்டியாக எடுத்துக் கொண்டிருக்கின்றாயே அந்த இறைத்தூதர் கடவுளைப் பார்த்திருக்கின்றாரா? யாருமே பார்க்காத ஒன்றை ஏன் இருக்கிறது என்கிறீர்கள்?'' என்ற வாதத்தை எடுத்து வைப்பார்கள்.

இதைக் கேட்டவுடன் நமக்கு சந்தேகம் ஏற்படும். நமது ஈமான் ஆட்டம் காணலாம். "இவர்கள் சொல்வதும் சரியாகத் தானே இருக்கின்றது! யாருமே பார்க்காத ஒன்றைத் தான் நாம் கடவுள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று நம்முடைய உள்ளத்தில் ஒருவித ஊசலாட்டம் ஏற்படலாம். ஆனால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை விளங்கி ஏற்றுக் கொண்டிருந்தால் இது போன்ற ஊசலாட்டம் ஏற்படாது. இத்ததைய நாத்திகவாதிகளுக்குப் பதில் சொல்வதற்காக, அல்லாஹ் இருக்கிறான் என்பதை முதலில் விளங்க வேண்டும். கடவுள் இல்லை என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளை விட, கடவுள் இருக்கிறான் என்பதற்குப் பல்லாயிரம் மடங்கு சான்றுகள் அதுவும் பகுத்தறிவு ரீதியான சான்றுகளே உள்ளன. இதைக் கொண்டு நாத்திகர்களுக்குப் பதில் கூறத் தெரிய வேண்டும். அப்படித் தெரிந்தால் தான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அறிந்து கொண்டதாக அர்த்தம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்  

EGATHUVAM MAR 2003