Mar 1, 2017

எத்தி வைக்கும் யுக்தி - NOV 15

எத்தி வைக்கும் யுக்தி - 1

ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வெட்கம் தடையாகலாமா?
எம்.எஸ். ஜீனத் நிஸா
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்
தாயீக்கள் (அழைப்பாளர்கள்) மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக எவ்வளவு சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் தங்களது சொற்பொழிவுகளை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இவ்விதழில் நாம் காண இருக்கின்றோம்.
மார்க்கத்தை எத்தி வைக்க வெட்கம் தடையாக இருக்கக்கூடாது.
வெட்க உணர்வை இஸ்லாமிய மார்க்கம் வரவேற்கின்றது. அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அதிகம் வெட்கப்படுபவர்களாகவும், வெட்க உணர்வைப் பிறருக்கு வலியுறுத்துபவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக் கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறை நம்பிக்கையின்  ஒரு கிளையே.
நூல்: புகாரி 9
அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள், "நாணம் நன்மையே தரும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6117
அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும்  அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.
நூல்: புகாரி 3562
இருப்பினும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கோ, அதனை எத்தி வைப்பதற்கோ வெட்க உணர்வு தடையாக இருந்துவிடக் கூடாது. கடுமையாக வெட்க உணர்வு கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இல்லறம், மாதவிடாய், கணவன் மனைவி உறவு தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது போன்ற விஷயங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எடுத்துரைத்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கை, இரு கால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்து விட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)
நூல்: புகாரி 291
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  "நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார்.  ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதி யின்றித்  தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)'' என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான)  அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வ தென்பது முடியாது'' என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டி ருந்தார்கள்.  கா-த் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதி யளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள், "அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?'' என்று (வாசலில் நின்றபடியே)  சொன்னார்கள்.
நூல்: புகாரி 2639
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்த போது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்கள். பிறகு,
1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3.  குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர் களை ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு  இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றது'' என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "தாங்கள் அல்லாஹ் வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), "உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!'' என்று சொன்னார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.'' என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
நூல்: புகாரி 3329
மேலும் மார்க்கச் சட்டங்களைக் கேள்வி கேட்காமல் அறிந்து கொள்ள இயலாது. எனவே இது போன்று கேட்கப்படும் கேள்விகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக் குடன்) இருக்கும் நிலையில் உறங்கலாமா?'' என்று  கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; உங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக (பெருந்துடக்குடன்) இருந்தாலும்  அவர் உளூ செய்துவிட்டு உறங்கலாம்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 287
இல்லறம், மாதவிடாய் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு பெண்கள் பெரிதும் தயங்குவார்கள். அந்தத் தயக்கமும் நியாயமானது தான். ஏனெனில் ஆபாசத்தைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைப் பேசுவதையோ, அந்தரங்கத்தை வெளிப்படுத்திப் பேசுவதோ கூடாது என்பது உட்பட நமது மார்க்கத்தில் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்க்கச் சட்டங்களை மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கில் இவ்வாறு பேசுவது தவறல்ல. ஆனால் இதனைப் பேசுவதில் ஒரு சந்தோஷம், ஜாலி என்ற நோக்கில் பேசுவது குற்றமும் தண்டணைக்குரிய செயலுமாகும். 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
நூல்: புகாரி 6612
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதே ஆகும்.
நூல்: முஸ்லிம் 2833
ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது மார்க்கச் சட்டங்களைச் சொல்வதற்கு நமக்குத் தயக்கம் அவசியமில்லை. ஏனெனில் ஆயிஷா, உம்மு சலமா, மைமூனா போன்ற நபியவர்களின் மனைவி மார்கள் நபிகளாரின் வீட்டில் நடந்த பல விஷயங்களை அறிவித்துள் ளார்கள். இது போன்ற விஷயங்களில் அவர்கள் தயக்கம் காட்டியிருந்தால் தொழுகை, நோன்பு, மாதவிடாய் பெண்களுக்குரிய சட்டங்கள் மற்றும் கணவன் மனைவி பேணவேண்டிய ஒழுங்கு முறைகள், கடமையான குளிப்பு போன்ற பல மஸாயில் (மார்க்க) சட்டங்களில் தீர்வு தெரியாமல் தவித்திருப்போம்.
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டு வந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள்.
பின்னர் தொழுகைக்கு உளு செய்வதைப் போன்று உளு செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டுவந்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்து விட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 528
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ("விடைபெறும்' ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெ தையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்' என்ற இடத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, "உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், "ஆம்' என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது (மாதவிடாய்) அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும்  சுற்றி (தவாஃப்) வராதே என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.
நூல்: புகாரி 294
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.
நூல்: புகாரி 295
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
நூல்: புகாரி 297
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன் "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.
நூல்: புகாரி 298
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
நூல்: முஸ்லிம் 505
மேற்கண்ட ஹதீஸ்களை நபிகளாரின் மனைவிமார்கள் அறிவித்திருக்கவில்லையென்றால் நாமும் யூதர்களைப் போலவே மாதவிடாய் ஏற்பட்ட நமது பெண்களை ஒதுக்கி வைத்திருப்போம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, "(நபியே!)  அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். "அது ஓர் (இயற்கை) உபாதை' என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்...'' என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, "நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?'' என்று கேட்டனர். (இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம்.
நூல்: முஸ்லிம் 507
வெட்கப்படுவோர் கல்வியைக் கற்க முடியாது என்று கூறப்படுவது போல மார்க்கத்தைக் கற்பதற்கோ பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்கோ வெட்கம் ஒரு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் சான்றாகும்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம் தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்து விட்டேன். பிறகு மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்க, "அது பேரீச்ச மரம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை "நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்'' என்றார்கள்.
நூல்: புகாரி 131

EGATHUVAM NOV 2015