இஹ்யாவை ஏன் எரிக்க
வேண்டும்? தொடர்: 22
பலவீனமான ஹதீஸைப் பின்பற்றி அமல் செய்யலாமா?
மூலம்:
முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற தலைப்பிட்டு விட்டு, பலவீனமான ஹதீஸ் பற்றிய ஆய்வுக்குள் நூலாசிரியர் மக்ராவி சென்றதற்குக் காரணம், இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன.
அமல்களின் சிறப்பு பற்றிய ஹதீஸ்களைப்
பொறுத்தவரை அது ஆதாரப்பூர்வமான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்று
பார்க்கத் தேவையில்லை, அதைப் பின்பற்றி அமல் செய்யலாம் என்ற கருத்து
ஆரம்ப காலம் முதல் பரவலாக இருந்து வருகின்றது. இந்தக் கருத்தை மையமாக வைத்தே
கஸ்ஸாலி தனது இஹ்யாவில் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்.
இஹ்யாவில் உள்ள மார்க்கத்திற்கு முரணான, பலவீனமான செய்திகளை விமர்சிப்பதற்கு முன்னால் அமல்கள்
விஷயத்தில் பலவீனமான ஹதீஸைப் பின்பற்றலாம் என்ற தவறான நம்பிக்கையை உடைத்தாக
வேண்டும். எனவே தான் இதைப் பற்றிய அறிஞர்களின் கருத்தை இங்கு குறிப்பிட்டு
விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு
வருகிறோம்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள்
கூறுவதாவது:
பலவீனமான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதற்கு
மூன்று நிபந்தனைகள் உள்ளன.
1. பலவீனம் மிகக் கடுமையானதாக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனையின்படி, பொய்யான அறிவிப்பாளர் தனித்து அறிவித்த ஹதீஸ், பொய்யர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் அறிவிக்கின்ற
ஹதீஸ், மிக அதிகமாக தவறான ஹதீஸ்களையே அறிவிக்கும்
அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆகியவை மிகவும் பலவீனமான ஹதீஸ் என்ற வரையறைக்கு
உட்பட்டதாகும்.
2. அந்த ஹதீஸ் பொதுவான அடிப்படையின் கீழ் நுழைந்திருக்க
வேண்டும். இதன்படி எந்த ஓர் அடிப்படையில் இல்லாத ஹதீஸை அமல் செய்வதற்கு எடுத்துக்
கொள்ளக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
3. ஒரு பலவீனமான ஹதீஸை வைத்து அமல் செய்கின்ற போது
அது உறுதியான செய்தி என்று நம்பிவிடக் கூடாது. அவ்வாறு நம்பினால் நபி (ஸல்) அவர்கள்
சொல்லாத ஒரு ஹதீஸை, அவர்கள் சொன்னதாகக் கூறி அவர்கள் மீது பொய்
சொன்ன பாவத்தில் விழுந்து விடுவோம்.
இது அமல்களின் சிறப்பு விஷயத்தில் பலவீனமான
ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெரிவிக்கின்ற
விளக்கமாகும்.
இப்படிக் கூறுவதற்கு இப்னு ஹஜர் எந்த
ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம்
என்ற கருத்துடைய யாரும் அதற்கான தக்க ஆதாரத்தைக் காட்டாமல் அவர்களின் சுய
கருத்தாகவே கூறுகின்றனர்.
பலவீனமான ஹதீஸ் என்பதன் கருத்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லி இருப்பார்களா
என்பதில் சந்தேகம் உள்ளது என்பது தான். எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் இந்தச்
சந்தேகம் உள்ளது.
ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின்
சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற
நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த
நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்!
செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும்.
(அல்குர்ஆன் 17:36)
பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக்
கூடாது என்பதற்கு இவ்வசனம் போதிய ஆதாரமாக உள்ளது.
சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகத்துக்கு
அப்பாற்பட்டதை நோக்கிச் செல் என்ற நபிமொழியும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்
செய்யக் கூடாது என்று சொல்லும் போது இதற்கு மாற்றமாகவும் எவ்வித ஆதாரம் இல்லாமலும்
அறிஞர்கள் கூறியதை நாம் ஏற்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற
சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு
சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்
பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும் ஆதாரப்பூர்வமான ஹதீசும் தெளிவாகக்
கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன்
ஹதீசுக்கு மாற்றமானதாகும்.