Mar 9, 2017

25. இணை கற்பித்தல் – நபிமார்களை அறியாத நபிகள் நாயகம்

25.  இணை கற்பித்தல் நபிமார்களை அறியாத நபிகள் நாயகம்
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம். ஐ. எஸ். சி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு வானத்திற்கும் இறைவன் அழைத்துச் சென்று நபிமார்களைக் காட்டுகின்றான். மேலும் அங்கு பல காட்சிகளைக் காணச் செய்கின்றான். ஒவ்வொரு வானத்திலும் ஒவ்வொரு நபியைக் காணும் போதும் இவர் யார்? இவர் யார்? என்று வானவர் ஜிப்ரீலிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கின்றார்கள். பல நபிமார்களை அல்லாஹ் காட்டுகின்றான். ஆனால் அவர்கள் யார் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. ஜிப்ரீலிடம் கேட்டுத் தான் எல்லா நபிமார்களையும் அறிந்து கொண்டார்கள்.
என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!'' என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை)  அவர்கள், "இவர் தாம் இத்ரீஸ்'' என்று பதிலüத்தார்கள்.
பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், "நல்ல நபியே வருக! நல்ல  சகோதரரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்கள் தாம் மூசா'' என்று பதிலüத்தார்கள்.
நான் (அந்தப் பயணத்தில்) ஈஸா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும், "நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்தாம் ஈஸா'' என்று பதிலüத் தார்கள்.
பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், "நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் இப்ராஹீம்'' என்று கூறினார்கள்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புகாரி 349
மிஃராஜில் தாம் சந்தித்த எந்த நபியையும் அடையாளம் தெரியாதவர்களாகவே நபிகள் நாயகம் (ஸல்) இருந்துள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது. பல நேரங்களில் நபிமார்களுக்குரிய அடையாளங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய பண்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நேரில் பார்த்த போது அவர்கள் யார் என்பதையே கண்டறிய முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் அனைத்தையும் அறியக்கூடிய ஆற்றல் இருந்திருந்தால் ஜிப்ரீலிடம் இவர் யார்? இவர் யார்? என்று கேட்டுத் தெரிந்திருப்பார்களா? அவர்களாகவே அனைவரையும் அறிந்திருப்பார்களே!
இதிலிருந்து என்ன விளங்குகிறது? யாரையும் நாம் பார்த்தவுடன் அறிந்து கொள்ள முடியாது. தெரிந்த நபராக இருந்தால் அவர் யார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். திடீரென்று நாம் பார்க்காத, நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நமக்கு முன்னால் வந்து நின்றால் நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? அவருடைய உருவம் தான் நமக்கு தெரியுமே தவிர அவர் யார்? எந்த ஊர்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியுமா? அவரிடமோ அல்லது அவரைப் பற்றித் தெரிந்த ஒருவரிடமோ கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
இப்படித்தான் நபிகளாரும் ஒவ்வொரு வானத்திலும் இதுவரை பார்க்காத அறிமுகம் இல்லாத நபிமார்களைக் காணும் போது அவர்களால் அடையாளம் கண்டறிய முடியாமல் போனது.
அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுடைய தகப்பனார் அப்துல்லாஹ் உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்படுகின்றார். அவருடைய உடல் அவரது வீட்டில் வைக்கப்படுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்கு வருகின்றார்கள். அப்போது ஒரு பெண்மனி ஒப்பாரி வைத்து அழுவதைக் கண்ட நபியவர்கள் இவர் யார்? ஏன் இவ்வாறு ஒப்பாரி வைக்கிறார்? என்று கேட்ட சம்பவம் புகாரியில் இடம் பெறுகின்றது.
(பார்க்க: புகாரி 1293)
இந்தச் சம்பவத்தில் ஒப்பாரி வைத்த பெண்மனி அம்ருடைய மகள் ஆவார். ஆனால் நபியவர்களுக்கு அந்தப் பெண்மனி யார் என்று தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? "நீ அம்ருடைய மகள் தானே எதற்காக ஒப்பாரி வைக்கிறாய்?' என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா? இவள் யார் என்று கேட்டு, இன்னார் என்று சொன்ன பிறகு தான் அவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.
நபியவர்கள் ஒரு நாள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற நபித்தோழரைச் சந்திக்கின்றார்கள். அந்த நபித்தோழரின் ஆடையில் திருமணம் செய்ததற்குண்டான அறிகுறிகளைப் பார்த்த நபியவர்கள், "நீ திருமணம் முடித்துவிட்டாயா? யாரை திருமணம் முடித்தாய்?' என்று கேட்கிறார்கள். (பார்க்க: புகாரி 2048)
மேற்கண்ட சம்பவத்திலும் அந்த நபித்தோழருக்குத் திருமணம் முடிந்தது நபியவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. யாரைத் திருமணம் செய்தார் என்பதும் தெரியாமல் இருந்திருக்கின்றது. எவ்வளவு மஹர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை. மறைவானது நபியவர்களுக்குத் தெரியுமென்றால் இந்தக் கேள்வியை அந்த நபித்தோழரிடம் கேட்டிருப்பார்களா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நறுமணம் பூசியதை வைத்துத் தான் அந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கொண்டார்களே தவிர தாமாக அறிந்து கொள்ள முடிந்ததா? அதையும் கேட்டுத்தான் தெரிந்து கொண்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை  நாம் அறியலாம்.
இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயிர்(கüன் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். இது யாருடைய நிலம்? என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு இரவலாகக் கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு அது நன்மையானதாக இருந்திருக்கும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2634
இந்தச் சம்பவத்திலும் நபியவர்கள் அந்த தோட்டத்தைக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தோட்டத்தைப் பார்த்து விட்டு, இது யாருடைய தோட்டம் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு மறைவானது தெரியும் என்றிருந்தால் இது இன்னாருடைய தோட்டமா? பயிர்களெல்லாம் பச்சைப் பசேலென்று வளர்ந்திருக்கிறதே! இதை நன்றாக பராமரித்திருக்கின்றாரே! என்று சொல்லியிருப்பார்கள். இதுவும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பதைக் காட்டுகின்றது.
அது போன்று நபியவர்கள் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக சில ஆட்களை பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள். நானே உம்மைப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் சொன்ன பிறகு அந்தப் பாதுகாப்பை விலக்கிக் கொண்டார்கள்.
ஒருநாள் இரவு நபியவர்கள், இன்றைக்கு யார் என்னைப் பாதுகாக்க வருவீர்கள்? என்று அழைப்பு விடுக்கும் போது, ஒரு நபித்தோழர் நான் வருகின்றேன் என்று முன்வருகின்றார். அவரை பார்த்து நபியவர்கள், "நீ யார்?' என்று கேட்கின்றார்கள். புகாரியில் இடம்பெற்றிருக்கும் அந்தச் செய்தி இதோ:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, "என் தோழர்கüடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "யாரது?'' என்று கேட்டார்கள். வந்தவர், "நான் தான் சஅத் பின் அபீவக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.
நூல்: புகாரி 2885
இந்தச் சம்பவத்திலும் கூட அந்த நபித்தோழர் யார் என்பதைக் கேட்டுத் தான் அறிந்து கொள்கின்றார்கள்.
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறை நாம் எடுத்துப் பார்த்தால் நிறைய சந்தர்ப்பங்களில் சராசரி மனிதரைப் போலத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.
அவர்களுக்குரிய தனிச் சிறப்பு, அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருந்து வஹீ வரும். அவ்வளவுதான். மார்க்கத்தை அவர்கள் வழியாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடியும். அவர் அல்லாஹ்வின் தூதர் என்பது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடே தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்கள் மனிதராகத் தான் இருந்தார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
மேலும் இது தவிர இன்னும் பல சம்பவங்களும் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் "அர்ரவ்ஹா' எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது "இக்கூட்டத்தினர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "முஸ்லிம்கள்' என்றார்கள். அப்போது அக் குழுவினர், "நீங்கள் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர்'' என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?''என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு'' என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2377
இந்த ஹதீஸ் தெரிவிப்பது என்ன? தமக்கு முன்னால் இருந்த ஒரு கூட்டத்தைப் பற்றி, மற்றவர்களிடம் விளக்கம் கேட்டுத் தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொள்கின்றார்கள்
ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) பின்தொடர்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு அறவே தெரியவில்லை. இதைப் பின்வரும் முஸ்லிம் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் தங்க வேண்டிய இரவில் (என்னிடம்) வந்தார்கள். தமது மேலாடையை (எடுத்துக் கீழே) வைத்தார்கள்; தம் காலணிகளைக் கழற்றித் தமது கால்மாட்டில் வைத்துவிட்டுத் தமது கீழாடையின் ஓரத்தைப் படுக்கையில் விரித்து அதில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். நான் உறங்கிவிட்டேன் என்று அவர்கள் எண்ணும் அளவு பொறுத்திருந்தார்கள். (நான் உறங்கிவிட்டதாக எண்ணியதும்) மெதுவாகத் தமது மேலாடையை எடுத்து (அணிந்து)கொண்டார்கள்; மெதுவாகக் காலணிகளை அணிந்தார்கள்; கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார்கள்.
உடனே நான் எனது தலைத் துணியை எடுத்து, தலையில் வைத்து மறைத்துக்கொண்டேன்; கீழாடையை அணிந்துகொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தேன். அவர்கள் "அல்பகீஉ' பொது மையவாடிக்குச் சென்று நின்றார்கள்; அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். பிறகு மூன்று முறை கைகளை உயர்த்தினார்கள். பிறகு (வீடு நோக்கித்) திரும்பினார்கள்; நானும் திரும்பினேன். அவர்கள் விரைவாக நடந்தபோது நானும் விரைவாக நடந்தேன். அவர்கள் ஓடிவந்தார்கள்; நானும் (அவ்வாறே) ஓடிவந்தேன்; அவர்களுக்கு முன்னால் (வீட்டுக்கு) வந்து படுத்துக்கொண்டேன்.
நான் படுத்த சிறிது நேரத்தில் அவர்கள் (வீட்டுக்குள்) வந்து "ஆயிஷ்! உனக்கு என்ன நேர்ந்தது?உனக்கு ஏன் மூச்சு வாங்குகிறது?'' என்று கேட்டார்கள். நான் "ஒன்றுமில்லை' என்றேன். அதற்கு அவர்கள் "ஒன்று, நீயாகச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நுண்ணறிவாளனும் மென்மையானவனுமான அல்லாஹ் எனக்கு அறிவித்துவிடுவான்'' என்று கூறினார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!'' என்று கூறிவிட்டு, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன்.
உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (உனக்கு) அநீதியிழைத்துவிடுவார்கள் என நீ எண்ணிக் கொண்டாயோ?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்! மனிதர்கள் என்னதான் மறைத்தாலும் அல்லாஹ் அதை அறிந்து விடுவானே!''என்று கூறினேன். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னர், ஆயிஷா (ரலி) அவர்களின் மூச்சிறைப்பை வைத்துத் தான் அவர்கள் தொடர்ந்ததைக் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர வேறு வழியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நடப்பது எதுவும் தெரியாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
வளரும் இன்ஷா அல்லாஹ்...

EGATHUVAM  SEP 2014